Tuesday, February 21, 2012


வீட்டைப் பூட்டிவிட்டு, வெளியூர் கிளம்ப பயப்படுவோர் பலர். அதிலும், இந்த கலியுகத்தில் ஆள் இருக்கும்போதே பொருட்களை அபேஸ் செய்து விடுகிறார்கள். நியாயமான வழியில், நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருட்கள், நம்மிடமே தங்க அருள்புரிகிறார் காலபைரவர். இவரது வாகனம் நாய்.
வாயில்லா ஜீவனான நாய் நன்றியுணர்வோடு சுற்றி வந்து வீட்டைப் பாதுகாப்பது போல, இவரும் நம் இல்லத்துக்கு பாதுகாப்பாக இருப்பார். தன்னை முழுநம்பிக்கையுடன் அண்டி வந்தவர்களைக் காவல் காப்பதில் காலபைரவர் ஈடுஇணை இல்லாதவர். தேய்பிறை அஷ்டமியன்று இவரை வழிபடுவது சிறந்தது. வழிபாட்டின்போது, எலுமிச்சம்பழத்தைப் பைரவரின் பாதத்தில் வைத்து வாங்கிக் கொள்ளுங்கள். திருமஞ்சனப்பொடி, பால், தயிர்,பச்சரிசி மாவு ஆகிய அபிஷேகங்களும் செய்யலாம். தயிர்சாதம் படைத்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம். வீட்டுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

நன்றி !!!

Monday, February 20, 2012


பைரவரை சிவனுடைய ஒரு அம்சமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக பைவரர் எல்லைத் தெய்வமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது காவல் தெய்வமாக. மூகாம்பிகை கோயில்களுக்குப் போனால் வீரபத்ரசாமிகள் வலப்பக்கத்தில் இருப்பார். அவர் ஒரு எல்லைத் தெய்வம். அம்பாளை வணங்கிவிட்டு வரும்போது காவல் தெய்வமான வீரபத்ரசாமியை வணங்குவார்கள். அதேபோல, பழமையான சிவலாயங்களிலெல்லாம் நோக்கினால் பைரவர் இருப்பார். நாய் வாகனத்துடன் நின்ற கோலம், வதுவான கோலத்தில்தான் இருப்பார். இது என்னவென்றால், காவலாக இருப்பேன் என்பதைச் சொல்கிறது.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கு சென்றால் பைரவர் அமர்ந்த கோலத்தில் தவக்கோலத்தில் இருப்பார். எல்லா இடங்களிலும் இருப்பவர் வேறு, இங்கு இருக்கும் பைரவர் வேறு. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவரை சூரியனுடைய அம்சமாகவும் சொல்வார்கள். அவரிடம் சென்று உட்கார்ந்து சூரிய காயத்ரி சொன்னால் உங்களுடைய உடல் சூடு அதிகரிப்பதைப் பார்க்கலாம். காய்ச்சல் வந்தது போல் 102, 103 டிகிரியில் இருக்கும். வேண்டுமானால் சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம். இங்குதான் அமர்ந்த கோலத்தில், தியானக் கோலத்தில் இருப்பார். அதன்பிறகு, அந்தப் பகுதிகளில் நிறைய பைவரர்கள் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மன் பைரவர் வழிப்பாட்டில் தீவிரமாக இருந்திருக்கிறார்.

தவிர, சொர்னாதர்ஷன பைவரர் என்று பைரவர் இருக்கிறார். கையில் கலசத்துடன், துணையுடன் - அம்பாளுடன் - இருப்பார். ரஜினிகாந்த் கூட இங்கு இருக்கும் சொர்னாதர்ஷன பைரவரைச் சென்று வணங்கியிருக்கிறார். திருப்புலிவனம் என்ற ஊர் காஞ்சிபுரத்திற்குப் பக்கத்தில் இருக்கிறது. இங்கு தட்சணாமூர்த்தி சிங்க வாகனத்திலும், புலி வாகனத்திலும் இருப்பார். இங்குதான் சொர்னாதர்ஷன பைரவரும் இருக்கிறார். வைணவத்தில் லட்சுமியையும், பெருமாளையும் வணங்கினால் பணம், காசு வரும் என்று சொல்வது போல, சைவத்தில் சொர்னாதர்ஷன பைரவர்தான் தன சாஸ்திரத்திற்கு உரியவர். அதனால்தான் சொர்னாதர்ஷன பைரவரை வணங்குவார்கள்.

செட்டி நாட்டுக்காரர்கள் பொதுவாக பைரவர் வழிபாடு அதிகமாகச் செய்வார்கள். காத்து, கருப்பு அண்டாமல் இருப்பது. போட்டி பொறாமை, வயிற்றெறிச்சலால் வரக்கூடியதை கழிக்கக்கூடியதும் பைரவருக்கு உண்டு. அந்தக் காலத்தில் வழித்துணைக்கு பைரவரை வணங்கிவிட்டுத்தான் எல்லோரும் கிளம்புவார்கள். ஏனென்றால், அப்பொழுதெல்லாம் மாட்டு வண்டிப் பயணம், நள்ளிரவுப் பயணமெல்லாம் அதிகம் இருக்கும். அதற்காக அதுபோலச் செய்வார்கள். தேங்காயை உடைத்து கண் இருக்கும் முடியை எடுத்து அதில் ஐந்து விதமான எண்ணெய்களை விட்டு அதில் திரிபோட்டு விளக்கேற்றுவார்கள். இதுபோல பைரவருக்குச் செய்யும் போது, ஏழரைச் சனியால், அஷ்டமச் சனியால் ஏற்படக்கூடிய தோஷம் எல்லாம் விலகும் என்று சொல்வார்கள். ஆகமொத்தத்தில் பைரவர் என்பவர் விசேஷமானவர்.

இதுதவிர, ஜுர பைரவர் என்றெல்லாம் இருக்கிறார். ஜுரம் வந்தால் அவரை வணங்கிவிட்டு வந்தால் ஜுரம் போய்விடும். நிறைய பாடல் பெற்ற தலங்களில், பண்ருட்டி பக்கத்தில் திருவதிகை என்று ஒரு ஊர் இருக்கிறது. வீரதானேஸ்வரம் அது. அங்கு ஒரு பைரவர் இருக்கிறார். இப்படி ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு பைரவர் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. இதுபோல பைரவரை வணங்கும் போது நோய் விலகும், எதிர்மறை எண்ணங்கள் விலகும்.
இதுபோல, சனியால், ஏழரைச் சனியால், அஷ்டமச் சனியால் ஏற்படக்கூடிய இடர்பாடுகளுக்கு பைரவர் வழிபாடு தைரியத்தையும், எதிர்மறை எண்ணங்களை முழுமையாக வேரறுக்கக்கூடியவர் பைரவர். அதனால் பைரவரை வணங்கும் போது எல்லா வகையான சக்தியும் கிடைக்கும்.

Friday, February 17, 2012


பைரவர்களுடைய வகைகளில் வரக்கூடியவர்தான் கால பைரவர். மன்னர்களுடைய வழிபாட்டில் பெரிதும் கால பைரவர் இருந்தார். சங்க காலத்தில் பார்த்தால், மன்னர்களுக்கென்று கால பைரவர் வழிபாடு தனியாக இருந்தது. அவர் எல்லா காலத்தையும் மாற்றக்கூடியவர். எந்தக் காலத்தில், எந்த நேரத்தில் அரசன் சிலவற்றை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பவர். வெளி மாநிலங்களில் மட்டுமல்ல, சிதம்பரம் நடராஜர் கோயிலிலும் கால பைரவர் இருக்கிறார்.

கால பைரவரின் சிறப்பு என்னவென்றால், ஒருவருக்கு எந்த கெட்ட நேரம் நடந்தாலும் அதனை மாற்றக்கூடியவர். முத்திரைகள், தரிக்கக்கூடிய ஆயுதங்கள் இதெல்லாம் ஒவ்வொரு பைரவருக்கும் வித்யாசப்படும். அதனால் கால பைரவர் கொஞ்சம் உக்கிரமாக இருந்து எல்லாவற்றையும் செய்யக்கூடியவர்.

நன்றி !!!

Friday, February 10, 2012


ஒருசமயம் பிரம்மன், சிவபெருமானை கண்டும் வணங்காமல் ஆணவமாக சென்று விடுகிறார். “மகாவிஷ்ணுவே மகேஸ்வரனை வணங்கிவிட்டு செல்கிறார். ஆனால் இந்த பிரம்மனின் கர்வத்தை பாருங்கள்“ என்று கைலாய மலையில் இருக்கும் தேவரிஷிகள் பேசி கொண்டார்கள். ஆனால் ஈசன், பிரம்மனின் செயலை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. இருந்தாலும், உலகமே வணங்கும் தம் கணவரை, பிரம்மதேவன் இப்படி அலட்சியம் செய்கிறாரே என்று மனம் வருந்தினார் அன்னை பார்வதிதேவி. தன் மனகவலையை தன் கணவரிடமும் சொன்னார் தேவி. இதனால் பிரம்மனை அழைத்த ஈசன், “உன்னை விட பெரியவர்களாக இருந்தாலும், சிறியவர்களாக இருந்தாலும் எவருக்கும் மரியாதை தர வேண்டும்.” என்று பிரம்மனுக்கு அறிவுரை சொன்னார்  சிவன்.  
கிளி பிள்ளைக்கு சொல்லுவது போல் பிரம்மனுக்கு புத்தி சொன்னாலும் அதை காது கொடுத்து கேட்காமல் அங்கும் இங்குமாக பார்ப்பதும் சைகையை செய்து கொண்டே சிவனின் பேச்சை அலட்சியம் செய்தபடி இருந்தார் பிரம்மன்.
“சிவனே.. எமக்கும் எல்லாம் தெரியும். உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் ஐந்து தலைதான். அதனால் நீங்கள் எனக்கு எந்த அறிவுரை சொல்லியும் என் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீணாக்க வேண்டாம்” என்றார் பிரம்மன்.
பைரவர் உருவானார்
விதி யாரை விட்டது.? பிரம்மனின் பேச்சும் செயலும் ஈசனுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் தன் உடலில் இருந்து ஒரு சக்தியை வெளிப்படுத்தினார். அந்த சக்திக்கு “பைரவர்” என்று பெயர் வைத்தார். உடல் முழுவதும் திருநீறு பூசி, சர்பங்களை தன் உடலில் சூட்டி கொண்டும், பாதத்தில் சலங்கையை கட்டி கொண்டும், மண்டை ஓடுகளை மாலையாக அலங்கரித்து அணிந்து, சூலம், பாசம் வைத்து கொண்டு சிவந்த விகாரமான சடைகளை கொண்டவராக கோபம் நிறைந்தவராக இருந்தார் பைரவர்.
“அய்யனே… ஆணையிடுங்கள். சிவபெருமானை மதிக்காதவன் கதி என்னவாகும் என்பதை, பிரம்மனின் நிலையே ஒரு உதாரணமாக உலகுக்கு காட்டுகிறேன்.” என்றார் பைரவர்.
“ஐந்து தலை இருக்கிறது என்கிற ஆணவத்தில்தானே பிரம்மன் எம்மை அலட்சியம் செய்கிறான். போனால் போகட்டும் என்று விட்டால், பிரம்மனின் போக்கு பிரம்மனுக்கே அழிவை தந்திடும் போல இருக்கிறது. அதனால் பிரம்மனுக்கு ஆணவ புத்தியை தந்த, அவன் ஐந்தாவது தலையை மட்டும் எடுத்து விடு பைரவா” என்றார் பரமேஸ்வரர்.
“தங்கள் ஆணைபடி செய்வேன்.” என்று கூறிய பைரவர், பிரம்மனின் ஐந்து தலையில் இருந்து ஒரு தலையை தன் நுனி நகத்தால் மலரை பறிப்பது போல் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்தார். இதனால் பிரம்மனின் தலையில் இருந்து ரத்தம் வடிய ஆரம்பித்தது. பல மணிநேரம் ஆகியும் பிரம்மனின் உடலில் இருந்து வெளிவரும் இரத்தம் நிற்கவில்லை.
“என் ஆணவன் அழிந்தது. மன்னித்துவிடுங்கள்” என்று வலியால் துடித்து இறந்தார் பிரம்மன். சிவபெருமானின் விருப்பபடி பிரம்மனை மன்னித்து உயிர் தந்தார் பைரவர்.
“பைரவரே… நான் செய்த தவறுக்கு தண்டனையாக நீங்கள் என் தலையை கீரை கிள்ளுவது போல் கிள்ளி எறிந்தீர்கள். அந்த தலையை நீங்களே என்றும் உங்கள் கையில் வைத்து கொள்ள வேண்டும். உங்கள் கையில் இருக்கும் என் தலையை பார்ப்பவர்களுக்கு ஆணவத்தால் பிரம்மன் ஐந்து தலையில் ஒரு தலையை இழந்தான் என்று தெரிந்து கொண்டு, அவர்களும் என்னை போல் திருந்த வேண்டும்.” என்று பிரம்மன், பைரவரிடம் வேண்டிக் கொண்டதால், பிரம்மனின் மண்டை ஓட்டை பிக்ஷ பாத்திரமாக வைத்து கொண்டார். இந்த சம்பவத்தை கேள்விபட்ட தேவலோகமே பைரவரை கண்டு பயந்தது. சிவபெருமானால் உருவானதால் சிவபிள்ளையாக சிவபெருமானுக்கு மட்டுமே கட்டுப்படுபவராக திகழ்கிறார் பைரவர்.
விஷ்ணுபகவானுக்கு வந்த வினை
முன்னொரு சமயம், பைரவர் விஷ்ணுபகவானை பார்க்க வைகுண்டம் சென்றார். அப்போது அங்கு காவலுக்கு நின்றிருந்த பூத தலைவரான “விஷ்வக்ஸேனர் பைரவரை வைகுண்டத்தில் அனுமதிக்காமல் தடுத்தார். இதனால் கோபம் கொண்ட பைரவர், விஷ்வக்ஸேனரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து, அவரை உயிர் இழக்கச் செய்து, வைகுண்டத்தில் கோபமாக நுழைந்தார்.
விஷ்ணுபகவான் சயனித்திருந்தாலும் பைரவர் கோபமாக வருவதை அறிந்து அவசர அவசரமாக எழுந்து வரவேற்று மரியாதை செய்தார்.
“நான் வந்திருப்பதை ஞானத்தால் அறிந்தும் அதை பற்றி பெரியதாக நினைக்காமல் சயனித்து கொண்டிருந்தாயா? உன் காவலன் என்னை அலட்சியம் செய்ததை அறிந்தும் கண்டுக்கொள்ளாமல் இருந்த உன்னை என்ன செய்கிறேன் பார்.” என்று கூறிகொண்டே விஷ்ணுபகவானை நெருங்கினார் பைரவர்.
“பைரவா… உனக்கு ஏன் அவ்வளவு சிரமம். நானே என் தலையை அடித்து கொள்கிறேன்“ என்று கூறி தன் தலையை பலமாக அடித்து கொண்டார் பகவான். இதனால் அவருடைய தலை  இரண்டாக பிளந்தது. ரத்தம் நிற்காமல் வெளியேறியது. அதனால் விஷ்ணுபகவானின் உடலில் இருந்த சக்திகள் குறைந்து மயங்கி விழுந்தார்.
ஸ்ரீமந் நாராயணனின் தலையில் இருந்து வடியும் ரத்தத்தை தன் கையில் இருந்த பிரம்மனின் மண்டை ஓட்டில் பிடித்தார் பைரவர்.
தம் கணவரின் நிலை கண்டு கலங்கினார்கள் ஸ்ரீதேவியும் பூதேவியும். அதனால் பைரவரிடம், “தயவு செய்து அவரை காப்பாற்றி தாருங்கள்” என்று வருத்ததுடன் கேட்டு கொண்டார்கள்.
பெண்களின் கண்ணீரை கண்ட பைரவர், மனம் இறங்கினார். விஷ்ணுபகவானை மயக்கத்தில் இருந்து விடுவித்தார். வைகுண்டத்தின் காவலரான விஷ்வக்ஸேனருக்கும் உயிர் தந்தார் பைரவர்.
பைரவருக்கு சிவன் தந்த அந்தஸ்து
“எம்மை வணங்கும் பக்தர்களுக்கு நீயும் துணை இருந்து அவர்களை வழிநடத்து. அத்துடன் யார் உன்னை வணங்குகிறார்களோ அவர்களுக்கு எந்த தீங்கும் நெருங்காமல் காப்பாற்று.” என்று இறைவன் சிவபெருமான் பைரவருக்கு அருளாசி வழங்கினார்.
ஒரு காலத்தில் சிவாலயங்களில் கோவில் நடை சாத்திய பிறகு, அந்த கோவிலின் சாவியை பைரவரின் கால் பாதத்தில் வைத்து விட்டு செல்லும் வழக்கம் இருந்தது.
மிளகு தீப பரிகாரம்
பைரவர் சன்னதியில் தீபம் ஏற்றினால் மிக நல்லது. அதுவும் மிளகை துணியில் சிறு மூட்டையாக கட்டி நல்லெண்ணைய் ஊற்றி தீபம் ஏற்றினால், இன்னல்கள் யாவும் மறையும்.
பைரவருக்கு சிகப்பு நிறத்தில் இருக்கும் மலர்களை சமர்பிக்கலாம் அல்லது பைரவருக்கு பிடித்த அரளிப்பூவை சமர்பித்தால், நினைத்தது நடக்கும். பைரவரை வணங்கினால் விரோதிகளும் அடிபணிவார்கள். முப்பெரும் தெய்வங்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும். பிறகென்ன… வெற்றி வெற்றி எதிலும் வெற்றிதான்.
நன்றி !

Thursday, February 9, 2012

தல வரலாறு:

காலபைரவர் பூரட்டாதி நட்சத்திர நாளில் ஏழு கிழமைகளைப் படைத்தார். இவற்றை ஏழு யானைகளின் மீது ஏற்றி பவனி வந்தார். இவ்வாறு, காலச்சக்கரத்தை படைத்தருளிய தலம் இது என தல புராணம் கூறுகிறது. மூலவர் விமானம் கஜ கடாட்ச சக்தி விமானம் எனப்படுகிறது. ஐராவத யானையும், தேவர்களின் தலைவன் இந்திரனும் பூரட்டாதி நாளில் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.

சிறப்பம்சம்:

ஜாதகத்தில் இரண்டாம் இடம் என்பது மதிகாரனாகிய சந்திரனுக்கும், ஐந்தாம் இடம் வித்யாகாரனாகிய புதனுக்கும் உரியது. சந்திரன் மதியை ஆள்பவர், புதன் அறிவை ஆள்பவர். பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் நல்ல மனம், சிறந்த புத்திகூர்மை கிடைத்து திகழ பூரட்டாதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. ஏழைகளுக்கு ஏழு வகையான வண்ண ஆடைகளை இங்கு வந்து தானம் செய்தால், ஏழேழு ஜென்ம பாவங்கள், தங்களது சந்ததியினரைத் தொடராமல் விலகும் என்பது நம்பிக்கை.

சகாதேவன் போல கல்வியறிவு:

கல்விக்குரிய ஸ்தலம் இது. மகாபாரதத்தில் கிருஷ்ணரே வியக்கும் வகையில் நல்லறிவு கொண்டவனாக பாண்டவர்களில் கடைசி தம்பியான சகாதேவன் விளங்கினான். இவன் ஜோதிட அறிவு கொண்டவன். பாரத யுத்தம் துவங்கும் முன்பு, துரியோதனன் இவனை நாடி வந்து, எந்த நாளில் போரைத் துவங்கினால் வெற்றி கிடைக்குமென இவனிடமே கேட்டான். தன்னை எதிர்த்து போரிட, தன்னிடமே ஆலோசனை கேட்க வந்த துரியோதனனை ஏமாற்ற சகாதேவன் விரும்பவில்லை. அமாவாசை அன்று போர் துவங்கினால் வெற்றி உனக்கே என அவன் நாள் குறித்துக் கொடுத்தான். அவனது கணிப்பு தப்பியதில்லை. ஆனால், கிருஷ்ணர் தான் தன் மாயத்தால் அமாவாசையை முந்தச் செய்து, துரியோதனனைத் தோற்கடித்தார். இவ்வாறு எதிரியை வெறுக்காத குணமும், உண்மையாகவும் நடந்து கொள்ளவும், சகாதேவன் போல் சாஸ்திர ஞானம் பெறவும் இங்கு வழிபடலாம்.

தல சிறப்பு:

காஞ்சிப்பெரியவர் இத்தலத்தில் ஒரு வாரம் தங்கி தியானம் செய்துள்ளார். இசையில் சிறந்து விளங்க இத்தலத்து இறைவனை வணங்கலாம். கோச்செங்கட் சோழன் கட்டிய 70 மாடக் கோயில்களில் இது முதலாவது கோயிலாகும்.

கோயில் அமைப்பு:

மூலவர் திருவானேஸ்வரர் கிழக்கு நோக்கியும், காமாட்சி அம்மன் தெற்கு நோக்கி நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கின்றனர். வலம்புரி விநாயகரும், சண்டிகேஸ்வரரும் புடைப்பு சிற்பமாக உள்ளனர். பிரகாரத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, துர்க்கை, பிரம்மா, நவக்கிரகம், நந்தி சன்னதிகள் உள்ளன.


இருப்பிடம்:

திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரத்தைஅடையலாம்.

நன்றி ! மாலைமலர் !

Tuesday, February 7, 2012


திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது. இவரது சிலையை  திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது. ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
 
பிரம்ப லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனிச்சன்னதியில் காட்சி  தருகிறார். பிரம்மா, இங்கு சிவனை  வழிபட்டதன் அடிப்படையில் இந்த  லிங்கம் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஒதிக் கொண்டிருப்பார். இதை உணர்த்தும் விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ, இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

நன்றி !

Wednesday, February 1, 2012


ஸ்தல வரலாறு::  
இங்குள்ள இறைவன்  சுவர்ணபுரீஸ்வரர் இறைவி  சுவர்ணாம்பிகை பைரவர் சுவர்ண பைரவர் ஆவர்.இத்தலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. சிவனின் தரிசனம் வேண்டி 16 ஆண்டு காலம் கடும் தவம் மேற்கொண்டார் காகபுஜண்ட சித்தர். இவர மேற்கொண்ட தவத்தின் காரணமாக இறைவன் 16 முகங்களை கொண்டவராக லிங்கமாக காட்சி தந்தார்.  
இந்த சித்தர் இறையடி சேர்ந்தபின், வானகோவராயன் என்ற மன்னன் இவ்விடத்தில் கோவில் எழுப்பினான். இத்தலத்தின் இறைவன் அருளால் இப்பகுதி மக்கள் பொன், பொருளுடன் செல்வச் செழிப்பாக வாழ்ந்தனர். எனவே இத்தலம் "பொன்பரப்பி' என்றும், இறைவன் "சுவர்ணபுரீஸ்வரர்' என்றும், அம்மன் "சுவர்ணாம்பிகை' என்றும், பைரவர் "சுவர்ண பைரவர்' என்றும் அழைக்கப்படுகின்றனர்.  
இத்திருத்தலத்தின் மூலஸ்தானமும்,அர்த்த மண்டபமும் எப்போதும் உஷ்ணத்துடன் இருக்கும். ஏனென்றால் இத்தலத்தில் உள்ள சிவலிங்கத்தை சூரியகாந்தக்கல்லால் வடித்துள்ளனர். சிவபெருமான் இத்தலத்தில் அக்னி சொரூபமாக உள்ளார்.   சூரியகாந்தக்கல் நவபாஷாணத்திற்கு ஒப்பானது. லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை பருகினால் நோய்கள் விரைவில் குணமாக குணமடைகின்றன.
மேலும் குழந்தை செல்வம் வேண்டுவோர், ஐப்பசி பௌவுர்ணமியில் நடைபெறும் அன்னாபிஷேகத்தின் போது தரப்படும் பாகற்காய் குழம்பை பிரசாதமாக சாப்பிடுகிறார்கள். இத்தலத்திலுள்ள இறைவன் பதினாறு பட்டைகளுடன் இருப்பதால் பதினாறு முக லிங்கம் எ‌ன்றும் அழைக்கப்படுகிறார்.  
பொதுவாக பதினாறு முக லிங்கத்தில், அதன் பாணம் மட்டுமே 16 பட்டைகளுடன் இருக்கும். ஆனால், இங்கு ஆவுடையாரும் (பீடம்) 16 பட்டைகளுடன் அமைந்துள்ளது மிகவும் தனி சிறப்பு ஆகும். பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ, 16 பட்டை லிங்கமான சுவர்ணபுரீஸ்வரரை கார்த்திகை சோமவாரத்தில் வழிபடுவது சிறப்பு.  
இத்திருத்தலத்தில் உள்ள அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். மேலும்  இந்த கோவிலில் காகபுஜண்டர், மனைவி பகுளாதேவி ஆகியோரின் ஜீவசமாதி அம்பாளின் பார்வையில் படும்படி உள்ளது சிறப்பு வாய்ந்தது ஆகும். காகபுஜண்டர் சித்தர், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலையிலிருந்து தோன்றியவர்.  
நினைத்த நேரத்தில் காக வடிவம் எடுக்கும் தன்மை கொண்டவர். இத்தலத்தில் உள்ள நந்தி சிறியதாக இருக்கும். ராகு தோஷ நிவர்த்திக்காக இந்த நந்திக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்போது அபிஷேகப்பால் நீல நிறமாக மாறுகிறது.   "பால நந்தி' என்பது இதன் திருநாமம் ஆகும். முருகன் ஆறுமுகத்துடனும், 12 திருக்கரங்களுடனும் 8 அடி உயரத்தில் மயிலில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். முருகனுக்கு வலது பக்கம் உள்ள வள்ளி தலை சாய்த்து நிற்கிறாள்.  
வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்:::  
மூலஸ்தானத்தில் காகபுஜண்டரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க இங்குள்ள பாணலிங்கத்திற்கு, பாலில் மிளகை அரைத்து கலந்து தடவி வழிபாடு செய்கின்றனர். அவிட்டம் நட்சத்திரத்திற்குரியவர்கள் தங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று, சிவனுக்கு தேனபிஷேகம் வழிபடுவது சிறப்பு.  
சந்திர தோஷம், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் தோஷங்கள் நீங்கும். இங்குள்ள சிவலிங்கம் சித்தர் பிரதிஷ்டை என்பதால், கிரக தோஷம் உள்ளவர்கள், சிவனுக்கு தேனபிஷேகம் செய்து வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை..  
நடை திறக்கும் நேரம்::  
கோவில் காலை 5.30-லிருந்து இரவு 9.30 மணி வரை.  
போக்குவரத்து வசதி::  
சென்னை கோயம்பேட்டில் இருந்து கள்ளக்குறிச்சி சென்று பின் அங்கிருந்து 27 கி.மீ. தூரத்தில் உள்ள அம்மையகரகம் சென்று பின் அங்கிருந்து பேருந்தில் சென்றால் ஒரு கி.மீ. தூரத்தில் இந்த கோவில் உள்ளது. சென்னையில் இருந்து சேலம் சென்று பின் அங்கிருந்து கள்ளக்குறிச்சி வழியாகவும் இந்த கோவிலுக்கு செல்லலாம்.  
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் செல்ல நேரடி ரெயில் வசதி உள்ளது.சேலம் செல்லும் ரெயில்கள் (எழும்பூர் ரெயில் நிலையம் வழியாக) திருவனந்தபுரம் மெயில் இரவு7.45 மணி, சேரன் எக்ஸ்பிரஸ் இரவு 10.10  மணி, கோவை எக்ஸ்பிரஸ் காலை 6 .25  மணிக்கு   

நன்றி ! மாலை மலர் !!


சிவபெருமானின் அம்சத்துடன் நாய் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பவர் பைரவர். பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான். நீங்களும் பொருளாதார சிக்கலில் சிக்கி அவதியுறுபவரா?  அப்படியென்றால் , நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் சொர்ண ஆகர்ஷண பைரவர்.
 
இவரை தேய்பிறை அஷ்டமியிலும் , ராகு காலம் சனி ஓரையுலும் தரிசிப்பது நல்ல பலன் தரும். இதுதவிர, சொர்ண ஆகர்ஷ்ன பைரவருக்கு நடைபெறும் சகல அபிஷேக, அலங்கர பூகைளில் கலந்து கொண்டு பிராத்திப்பதன் மூலம் அவரது முழுமையான அணுகிரகத்தை அடையலாம்.
 
அப்போது பால்,தேன்,இளநீர், பன்னீர், திருமஞ்சன பொடி , மஞ்சள்,சந்தனம், பச்சரிசி மாவு ஆகிய அபிஷேகப் பொருட்களுடன் செவ்வரளிப் பூக்கனையும் சொர்ண ஆகர்ஷன பைரவரின் பூஜைக்காக கொடுப்பது நல்லது.
 
இந்த அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெறும் போதும், செவ்வரளிப் பூக்களைக் கொண்டு பூஜை நடத்தப்படும் போதும்,பைரவர் திருமந்திரத்தை மனதில் பிரார்த்தித்து, கோரிக்கைகளை சொர்ண  ஆகர்ஷன பைரவரிடம் சமர்ப்பித்தால் பிராத்தனைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்கிறார்கள்.
 
மேலும், சகல தோஷ நிவர்த்திக்கு சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு வடை மாலை சாத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அத்துடன், இவருக்கு நைவேத்தியமாக தயிர்சாதம் படைத்து வழிபடுவதும் சிறப்பு.