திருவொற்றியூர்:
சென்னை - பாரிமுனையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள தியாகராஜசுவாமி ஆலயத்தில் (மாணிக்கத் தியாகர் - வடிவுடையம்மை) வட்டப்பாறையம்மன் என்னும் துர்க்கை சன்னதிக்கு எதிரே சூர சூளாமணி பைரவருக்குத் தனிகோயில் உள்ளது.
சீர்காழி சட்டநாதர் ஆலயம்:
சட்டநாதராக விளங்கும் பைரவ மூர்த்திக்குத் தலைமைத் தானமாக விளங்குவது சீர்காழியாகும். திருஞான சம்பந்தர் அவதரித்த மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வூரில் பிரம்மாவால் பூசிக்கப்பட்ட பிரம்மபுரீஸ்வரர் என்ற பெரிய சிவாலயம் உள்ளது. இத்தலத்திலுள்ள மலைக்கோயில் உச்சியில் தென்முகம் நோக்கி நின்ற கோலத்துடன் சட்டநாதர் காட்சி தருகிறார். இவர் பைரவரின் அவதாரமே. பிரகாரத்தில் அஷ்ட பைரவர்களுக்கென்று தனிக்கோயில் உள்ளது.
காஞ்சிபுரம் வைரவேச்சுரம்:
திருக்கண்டியூரில் பிரம்மனின் சிரத்தைக் கொய்த பாவம் தீர சிவ வழிபாடு செய்த பைரவரின் தனி ஆலயம் காஞ்சிக்குத் தென்மேற்கில் அழிப்படை தாங்கி என்னுமிடத்தில் உள்ளது. இங்கு பிரம்மன்சிவலிங்கத்தை வைத்து வழிபட்டதுடன் தனது ஐந்தாவது சிரத்தைக் கிள்ளியபைரவருக்கும் தனி சன்னதி அமைத்து வழிபாடு செய்தான். இதன் அருகிலேயே இந்தக் கால பைரவர் அஷ்ட பைரவராகி எட்டு வடிவங்களுடன் எட்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டவைரவேச்சுரம் என்ற சிவாலயமும் உள்ளது. இத்தலத்தின் உற்சவர் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ளது.
க்ஷத்ரபாலபுரம் கால பைரவர்:
பைரவருக்கென்றே அமைந்த தனித்த ஆலயங்களில் இது காசிக்கு நிகரான பெருமையுடையது. கும்பகோணம் மயிலாடுதுறை வழியில் திருவாவடுதுறை அருகேயுள்ள இந்தத் தலத்தில்தான் பிரமனின் தலையைக் கொய்த கால பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது என்று கூறுவர்.
தில்லையாடி கால பைரவ விநாயகர்:
மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் வழியாக செல்லும் வழியில்பொறையாரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், திருக்கடையூரிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் தில்லையாடி அமைந்துள்ளது.
அஷ்ட பைரவ யாத்திரை தலங்கள்:
காசி நகரமே பைரவரின் பிரதான தலம் என்பதால் இந்நகரின் பல்வேறு பகுதிகளில் பைரவர் தலங்கள் காணப்படுகின்றன. இவைகள் எல்லாவற்றையும் தரிசித்து வருவது இயலாத காரியம். ஆகவே மிக முக்கியமான எட்டு பைரவத் தலங்களை மட்டும் சிறப்புடன் வழிபடுகின்றனர்.கார்த்திகை, மார்கழி மாதங்களில் அஷ்டமி தினத்தன்று இந்த வழிபாடு செய்யப்படுகின்றது.
வடக்கே காசி நகரில் அனுமன் காட்டில், ருரு பைரவரும், துர்கா மந்திரில் சண்ட பைரவரும், விருத்தகாளேசுவரத்தில் அஜிதாங்க பைரவரும், லட் பைரவர் கோயிலில் கபால பைரவரும், திரிலோசனகஞ்ச்சில் சங்கார பைரவரும், தேவரா கிராமத்தில் உன்மத்த பைரவரும், காமாச்சாவில் வடுக பைரவரும், காசிபுராவில் பீஷாண (பூத) பைரவரும், காசி நகரில் சிறப்பாக வழிபடப்படுகின்றனர். தெற்கில் திருப்பத்தூர், பைரவன்பட்டி, அழகாபுரி, பெருச்சிக் கோயில், திருமெய்ஞானபுரம், காரையூர், நெடுமரம், இலுப்பைக்குடி ஆகிய தலங்கள் அஷ்ட பைரவத் தலங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. இவர்களைத் தரிசிக்க செல்வதே அஷ்ட பைரவ யாத்திரை எனப்படுகிறது.