Saturday, June 20, 2015

பைரவமூர்த்தி திருவுருவ நெறி

பைரவமூர்த்தி திருவுருவ நெறி – ஒன்று : -

பெரும் பயங்கரமான தோற்றம் வாய்ந்த உருவம் இது என்பதைப் பெயரே குறிப்பிடுகின்றது. கருணை வடிவான இறைவன் பயங்கரமான தோற்றம் கொண்ட சமயங்களும் இருக்கின்றன. வலிமை மிக்க ஞானமூர்த்தியாக பைரவரை சிருஷ்டித்து உலகைக்காக்கும் பொறுப்பை அளித்தார் ர் சிவனார். எதிரிகளுக்குப் பயத்தையும், தன்னை வேண்டியவர்க்கு அருளையும் தரும் சிவமூர்த்தி இவர்.

பிரமனை ஒறுக்கும் வேளை தோன்றிய உருவமே இது. பிரமன் ஐந்து முகங்களுடன் விளங்கிய காலத்தே பரமன் போன்று தானும் ஒரே தோற்றத்தினன் என்று தன்னை அவருடன் சம நிலையில் வைத்து இறுமாந்தான். பிரமனது அகங்காரத்தை அடக்க பரமன் உக்கிரத் தோற்றங்கொண்டு தன் நகத்தினால் பிரமனின் உச்சியில் உள்ள சிரம் கொய்த பொழுது பிரமன் நான்முகனாயினன். பிரமனின் மண்டையோட்டை ஏந்தி நிற்கும் இவருக்கு ” கபாலி ” எனும் சிறப்புப் பெயரும் உண்டு.

பைரவமூர்த்தி திருவுருவ நெறி – இரண்டு : -

இறைவன்,பிரமனிடம் கோபம் கொண்ட பொழுது அவன் தலையினைக் கொய்யும் வண்ணம் பைரவரைப் பணித்ததான வரலாறும் உண்டு. சிவனின் ஆதி அந்தம் காண முடியாத பிரம்மா, தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி திருமுடியைக் கண்டதாகப் பொய்யுரைத்து திருமுடியில் இருந்து வீழ்ந்ததாகத் தாழம்பூவையும் பொய்யுரைக்க வைத்தார். குறிப்பாக பிரமனின் ஐந்தாம் தலை இப்பொய்யை திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருக்க சினம் கொண்ட சிவனார், தனது புருவ மத்தியில் இருந்து பைரவ மூர்த்தத்தை உண்டு செய்தார். ” பைரவனே ! பொய்யுரைத்த பிரமனின் தலைகளை அறுத்தெறி ” என உத்தரவிட, உச்சந்தலையை அறுதெறிந்த பைரவர் பின் மற்ற தலைகளையும் அறுக்க முற்பட அங்கு தோன்றிய திருமால், ” முன்னர் பிரமன் செய்த தவத்தில் மகிழ்ந்து அவனுக்கு ஐந்து முகங்கள் அருளினீர், இப்போது அவனை நீரே நான்முகனாக்கிவிடீர், அனவே அவனை மன்னியுங்கள் ! ” என்றார். இதையடுத்து பிரம்மாவும் மன்னிப்புக் கேட்டார்.

வேதம் ஓதுபவருக்கு இனி நீரே அரசன், அனைத்து வேள்விகளுக்கும் நீயே குரு, யாக யக்ஞங்களின் பலனை அனைவருக்கும் நீ வழங்கு ” என அருளினார் ஈசன். பைரவரையும், வீரபத்திரரையும் சிவனின் மூர்த்தி பேதங்களாக நூல்கள் கூறுகின்றன.

அடிப்படைத் தோற்றங்கள் :-

பெருந்தொந்தி, உருண்ட கண்கள், இரு கடைவாய்களிலும் கோரப் பற்கள், அகன்ற மூக்குத் துவாரங்கள், கபால மாலை, பாம்பினாலான அணிகலன்கள், யானைத்தோலாடை ஆகியன பைரவமூர்த்தியில் நாம் காணும் சிறந்த அம்சங்கள். ஆடையெதுவுமற்ற நிலையிலேயே இவர் பெரும்பாலும் வடிக்கப்படுவர்.
அறுபத்து நான்கு வேறுபட்ட நிலைகளில் பைரவரை உருவாக்குவார்கள். இவாறு நான்கு வேறுபாடுகளும் பைரவரின் எட்டு அடிப்படைத் தோற்றங்களின் விரிவு. இவ்வெட்டுவகை மூல பைரவர்கள்,

1.அசிதாங்க பைரவர்
2.ருரு பைரவர்
3. சண்ட பைரவர்
4. குரோத பைரவர்
5. உன்மத்த பைரவர்
6. கபால பைரவர்
7. பீஷண பைரவர்
8. சம்ஹார பைரவர்

என்பனவர்களாம்.

பிரம்மச்சிரக்கண்டீஸ்வரர் : -

தனது உக்கிரத்தில் இருந்து பைரவ மூர்த்தியை சிருஷ்டித்து பிரம்மதேவனின் அகங்காரத்தை அடக்குவதற்காக அவனது சிரசைக் கொய்தார் அல்லவா சிவபெருமான் ! இந்த பைரவமூர்த்தியை பிரம்மச்சிரக்கண்டீஸ்வரர் என அழைப்பினர்.

வடுகபைரவர், ஸ்வர்ணாகர்ஷணபைரவர் : -

வடுகபைரவர், ஸ்வர்ணாகர்ஷணபைரவர் என இரு நிலைகளும் உண்டு. வடுகபைரவர் எட்டுக் கையினர், மாம்சம், அபயம், கட்வாங்கம், பாசம், சூலம், டமரு, கபாலம், பாம்பு ஆகியவற்றை இவரது எட்டுக் கரங்களிலும் காணலாம். இவரது பக்கத்தில் நாய் வாகனம் இடம்பெரும். முறையே பிஷாடனர் மற்றும் சந்திரசேகரர் சம்சாரப் பற்று மற்றும் முன்வினைப் பற்றைப் போக்குவது போல் வடுகபைரவர் ஆசையை வென்று வாழ அருள் செய்வார்.
ஸ்வர்ணாகர்ஷணபைரவரை மஞ்சல் உடலினராயும், முக்கண்ணினராயும், நான்கு கரங்களுடனும் நிறுவி வழிபடுவர்.

எட்டுத் திக்கிலும் பைரவர் :-

காசியின் 8 திக்கிலும் பைரவர் கோயில்கள் உள்ளன.அசிதாங்க பைரவர் – விருத்தகாலர் கோயில், குரோத பைரவர் – காமாட்சி ஆலயம், உன்மத்த பைரவர் – பீம சண்டி கோயில், ருரு பைரவர் – அனுமன் காட்டில், கபால பைரவர் – லாட் பஜாரில், சண்ட பைரவர் – துர்க்கை கோயிலில், பீஷண பைரவர் – பூத பைரவத்தில், சம்ஹார பைரவர் – த்ரிலோசன சங்கமத்திலும் கோயில் கொண்டுள்ளனர்.

கால பைரவர் – காசி : ( kaala Bhairavar )

காலனின் பயத்தைப் போக்குபவர், எமனின் பயத்திலிருந்து நம்மைக் காப்பவர் – காலபைரவர் ஆவார். இவரும் பரமேஸ்வரனின் அம்சமே எனக்கூறும் வரலாறும் உண்டு அதாவது பிரமனின் உச்சியில் உள்ள சிரம் கொய்த பொழுது பிரமனின் கபாலம் பிரம்மஹத்தியாக பைரவரின் கரத்தைப் பற்றிக்கொண்டது, கூடவே பசி, தாகமும் பற்றிக்கொண்டது. உண்ணவும் முடியாமல், பசியைத் தாஙகவும் முடியாமல் பல ஷேத்திரங்கள் சுற்றித் திரிந்த பைரவர் கடைசியில் காசி வந்தபோது அன்னபூரணி இட்ட அன்னப் பிட்சையால் பசி விலகியதோடு பிரமனின் கபாலமும் விலகியது. அன்றுமுதல் காசியிலேயே கால பைரவர் எனும் திருப்பெயரோடு ஷேத்ரபாலகராக, காக்கும் தெய்வமாக விளங்குகிறார் பைரவர்.

காசியில் அனைத்து ஆலயங்களையும் தரிசனம் செய்த பின்னர், இக்கால பைரவரை தரிசித்து அனுமதி பெற்ற பின்னரே பயணிகள் ஊர் திரும்புவது வழக்கம். இங்கே பூசாரிகள் ” கால பைரவாஷ்டகம் ” கூறி ரட்சையாகக் கறுப்புக் கயிரைக் கட்டி விடுவது வழக்கம்.

ஆந்திராவின் ராமகிரி ( சித்தூர் மாவட்டம் ), சீர்காழி – அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில் ( இங்கு அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்டபைரவர், குரோத பைரவர், உண்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீஷண பைரவர், அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர். எனவே தான் காழியில் பாதி காசி என்பர். இவர்களது சன்னதிக்குள் சட்டை அணிய அனுமதியில்லை. அஷ்டமி திதிகளில் சிறப்பு பூஜை உண்டு. ), உஜ்ஜயினி, தக்கோலம்,காட்மாண்டு ( காவல் பைரவர் ) ஆகிய இடங்களில் கால பைரவர் வழிபாடு மிக பிரசித்தம்.

கால பைரவர் – பூனே : -

அதேபோல் பூனாவில்கோயில் கொண்டுள்ள கால பைரவர் ஆபத்சகாயராக அருள்கிறார். கனேஷ்பட்டில் மெயின் ரோட்டில் அமைந்துள்ள இவ்வாலயம் சிறியதானாலும் மூர்த்தியின் சிறப்பால் பிரசித்தி பெற்று விளங்குகிறது. வாசலில் துவார பாலகர்களும், மேலே நாய் சிலையும் இருக்கிறது. கால பைரவர் ஒரு கையில் திரிசூலமும், மறு கையில் உடுக்கையும், மற்ற இரண்டு கைகளில் பாம்பையும் பிடித்த வண்ணம் தரிசனம் தருகிறார். இங்கு தினமும் ருத்ராபிஷேகம் நடக்கிறது.

கால பைரவரின் இடது பக்கம் அவரது தேவியின் சிலை அமந்துள்ளது. தேவிக்கு நத்து மட்டி, பட்டு உடுத்தி, மலர் மாலைகளால் அலங்கரிக்கிறார்கள். கால பைரவரின் வலப்பக்கம் மஹாராஷ்டிராவின் மதிப்பிற்குரிய ஜோதிபா சிலை உள்ளது. காளாஷ்டமி, காள பைரவர் ஜெயந்தி நாட்களில் அபிஷேகம் செய்து, வெள்ளிக் கவசம் சாத்தி வழிபடுகிறார்கள்.

பஞ்சாங்க பைரவர்கள் – ஆவூர் : -

ஒரே வரிசையில் அணிவகுத்துக் காட்சி தரும் பஞ்ச பைரவர்கள்தான் அவர்கள். பஞ்சாங்கத்தின் அங்கங்களான, நாள், கிழமை, யோகம், கரணம், திதி ஆகியவற்றின் அதிபதியாகத் திகழ்பவர் பைரவர். காலத்தை இப்படிக்கட்டுப்படுத்தும் வல்லமை உள்ளவர் எனலில் இவர் ” கால பைரவர் ” என அழைக்கப்படுவர். ( as aforesaid ). அவரே இங்கு ஐந்து வடிவங்களில் காட்சி தருவதால் இது சிறந்த பரிகாலத் தலமாகக் கூறப்படுகிறது. இது வசிஷ்டர், காமதேனு மற்றும் தசரதர் வழிபட்ட தலமும் ஆகும். அய்யன் – பசுபதீஸ்வரர், ஆவூருடையார், தாயார் – மங்களாம்பிகை. காலத்தைக் கட்டுப்படுத்தும் பைரவர் நம் வாழ்வில் நல்ல காலமே நிலவச் செய்வார்.
இலக்கியன்:
பிரம்மச்சிரக்கண்டீஸ்வரர் ( பிரம்ம சிரகண்டீஸ்வரர் ) திருக்கண்டியூர் : -

சிவனாரின் அட்டவீரட்ட தலங்களில் முதலாவது கண்டியூர். இங்கு பிரமனின் ஒருதலையைக் கண்டித்துத் துண்டித்ததால் இந்த ஊருக்கு கண்டியூர் எனப் பெயர் அமைந்ததாம். தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது இவ்வூர். இங்கு மேற்குப் பார்த்த சன்னதியில் சிரக்கண்டீஸ்வரர் ( வீரட்டானேஸ்வரர் ) காட்சி தருகிறார், அம்பாள் – மங்களநாயகி.

பிரம்மச்சிரக்கண்டீஸ்வரரின் அற்புத சிற்பம் ஒன்று காஞ்சிபுரம் ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயிலில் உள்ளது. இங்கு ஐந்தில் ஒரு தலையை இழந்து விட்ட பயத்துடன் காட்சி தருகிறார் பிரம்மதேவர். எட்டுக் கரங்களில் ஒரு கரத்தில் பிரம்மகபாலத்தைத் தாங்கி வியோம முத்திரையுடன் காட்சி தருகிறார் பைரவர்.
காஞ்சிக்குத் தெற்கில் உள்ள “பெருநகர்” என்பது பிரம்மன் சிவனை வழிபட்ட பிரம்ம நகரம். இங்கு உள்ள தனிச்சன்னதியில் பைரவசிவன் வடிவம் தனிச்சிறப்புடன் திகழ்கிறது.

பைரவருக்கு பைரவி ராகம் : -

பைரவரின் அருளைப்பெற ” பைரவி ” ராகப் பாடல்களைப் பாடலாம். வெள்ளிக்கிழமை நெய் விளக்கு, சனிக்கிழமை மிளகைத் துனியில் கட்டி நல்லெண்ணை ஊற்றி மிளகு தீபமேற்றலாம். தேய்பிறை அஷ்டமி நாட்களில் இவர் சன்னதியில் மிளகு தீபமேற்றி வைத்து, தயிர் சாதம் நிவேதனம் செய்து தானமாக அளித்தால் வேண்டும் வரம் கிடைக்கும்.

பைரவரை வழிபடுவோர் இல்லங்களில் செல்வம் சேரும், சேமிப்பு நிலைக்கும் என்பதால் இவருக்கு ” ஸ்வர்ணாகர்ஷணபைரவர் ” எனக் கூறுவர் ( as aforesaid ).

பைரவமூர்த்தி பரிவார நெறி :

பிரதான வயிலை அடுத்து எல்லா மண்டபங்களுக்கும் வெளியே வடகிழக்கிற்கும் வடக்கிற்கும் இடையில் பைரவர் கோவில் இடம்பெறும். பைரவருக்கு ஷேத்ரபாலகர் எனும் பெயரும் உண்டு ( as aforesaid ), பைரவர் கோவிற்காவலாளியும் ஆவார்.

தக்கன் வேள்வியின்போது அவன் சிவனை அழையாது அவமதித்ததன் காரணமாக தேவி உமையவள் யோகாக்னியில் தன்னுடல் நீத்து தாட்சாயனி எனும் நிலையினின்று நீத்து பார்வதியாக இதையறிந்த சிவன் கோபங்கொண்டு வீரபத்திரமூர்த்தியாகி, யாகம் நடக்குமிடம் சென்று தக்கன் தலை கொய்தார். பைரவரைப் போல வீரபத்திரரையும் சிவனின் மகனாக வழங்கும் முறையும் உண்டென்பதை முன்பே கூறியிருந்தோம்.

இலங்கையில் பைரவர் வழிபாடு :



தாய் நாடான பாரதத்தைப் போலவே சேய் நாடான இலங்கையிலும் பைரவர் வழிபாடு மிகச்சிறப்பாக, காலங்காலமாக சைவ கிரியைகளை முறைப்படி வழுவி நடைபெற்று வருகிறது. பைரவருக்குத் தனிக் கோயில்கள் இலங்கையில் நிறையவே உள்ளன ( ஈச்சமட்டை பைரவர் கோவில், அராலி பைரவர் கோவில் ). சில காலங்களுக்கு முன்வரை கோவில் பூசைகள் முடிந்த பின் ஒவ்வொரு நாளும் கோயில் சாவிகளை பைரவரிடம் பாதுகாப்பாக சமர்பிது பின் மறுநாள் திரும்பப் பெறுவது வழக்கமாக இலங்கைத் தலங்களில் இருந்தது.

பைரவ அஷ்டகம் : -

த்ரினேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம் பரம்,
பாசம் வஜ்ரம் ததாகட்கம் பானபாத்ரஞ்ச தாரிணம்,
இந்திராணி சக்திஸஹிதம் கஜவாஹன ஸூஸ்திகம்,
கபால பைரவம் வந்தே பத்ம ராகப்ரபம் சுபம்.

விரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு :



எட்டாவது திதிநாள் எனப்படும் வளர்பிறையிலும் தேய்பிறையிலும் வரும் எட்டாவது திதிநாட்கள் பைரவ வழிபாட்டிற்குரியவை.

இவ்விரு அஷ்டமிகளில் தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து சிவனை வழிபடுவதற்குரிய நாள். ஆடித்தேய்பிறை அஷ்டமிக்கு நீலகண்ட அஷ்டமி என்ற பெயரும் உண்டு. இந்த நாளில் பழங்கள் மட்டுமே உண்டு அர்ச்சிக்க வேண்டும். தட்சிணாமூர்த்தியை மேட்கொண்டு நடத்தும் விரதம் இது. ஞாயிறு பைரவ வழிபாட்டிற்கு உகந்த நாள். திரிபுவனம் ஸ்ரீ சரபர் – திருவிசலூர் சதுர்கால பைரவர் அல்லது அருகில் இருக்கும் ஆலயத்து பைரவரை வழிபடலாம்.

நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.

குழந்தைப்பேறு கிட்ட தம்பதியர் ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் சிவப்பு நிறப் பூக்களால் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.

வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமே ஸ்கஸ்ரநாமமோ அர்ச்சனை செய்யது 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.

இழந்த சொத்தைத் திரும்பப் பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும் மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நெய் அல்லதி நல்லெண்ணை இட்டு தீபம் ஏற்றுவது பைரவ தீபமாகும்.

சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால்அர்ச்சனை செய்யது 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.

திருமணத் தடை நீங்க ஞாயிறு இராகு காலத்தில் திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடை மாலை சாத்தி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பகைபயம் நீங்க 9 முறை பைரவருக்கு அர்ச்சனை செய்யது வசதிக்கு ஏற்ப நிவேதனங்கள் செய்ய வேண்டும். இப்படி 9 கிழமைகள் செய்தால் வியாபார நஷ்டம் விலகும், எல்லாத் தொல்லைகளும் அகலும்.

தீராத் நோய்கள் தீர பைரவ ஹோமமும், அபிஷேகமும் செய்ய வேண்டும். அந்த அபிஷேக தீர்த்தத்தை உட்கொள்ள பிணிகள் தீரும்.

செல்வம் செழிக்க வளர்பிறை அஷ்டமிகளில் சதுர்கால பைரவருக்கு சொர்ணபுஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்தக்காசுகளை அலுவலகம் அல்லது வீட்டில் பணப் பெட்டியில் வைக்க செல்வம் செழிக்கும்.

தினந்தோறும் காலையில்

” ஓம் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷணபைரவாய நமஹ “

என்று ஜெபிப்பது நல்லது.