பைரவர் வரலாறு
எல்லா சிவன் கோவில்களிலும் விநாயகர், முருகன் சன்னதி, அம்பாள் சன்னதி இருக்கும். அதே போன்று நவக்கரஹ சன்னதியும் காணப்படும். இன்னொரு முக்கியமான சன்னதியாக விளங்குவது பைரவர் சன்னதியாகும். அதுவும் சற்று ஒதுக்குப்புறமாக, தனியாக உள்ளடங்கியே பெரும்பாலான கோயில்களில் காணப்படும். மேலும் அந்தக் கோயில்களின் காவல் தெய்வமாக விளங்குவதே ஸ்ரீபைரவர் தான்!
ஆமாம்! யார் இந்த பைரவர்?. இவர் ஏன் காவல் தெய்வமாக வழிபடப்படுகின்றார்?. சங்க காலத்திலோ, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களிலோ ஏன் இவரைப் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. இவர் தம் வழிபாடு எப்பொழுது நம் நாட்டில் காலூன்றியது என்பது பற்றி இனிப் பார்க்கலாம்.
அநேகமாக இந்த பைரவ வழிபாடு முதன் முதலில் வட இந்தியாவில் தோன்றிப் பின்னரே இங்கு பரவியிருக்க வேண்டும். (வாதாபியிலிருந்து கணபதி வந்தது போல). அதுவும் குறிப்பாக ஆதிசங்கரரின் அவதாரத்திற்குப் பின்னரே இந்த பைரவவழிபாடு ஏற்றம் பெற்றிருக்க வேண்டும் என்பது புலனாகின்றது. அவர் தாம் முதன் முதலில் வழிபாட்டு முறைகளைப் பிரித்துஷண்மத ஸ்தாபனத்தை உருவாக்கியவர். அவற்றுள் ஒன்றான சாக்த வழிபாட்டில் உள்ளடங்கி உள்ளது தான் ஸ்ரீ பைரவ வழிபாடாகும். பைரவர் தம் பெருமையைப் புகழ்ந்துகால பைரவாஷ்டகத்தையும் அவர் பாடியுள்ளார். வேதங்களிலும், உபநிஷத்துக்களிலும் பைரவர் பற்றிய குறிப்புகள் உள்ளனவா என்பது ஆராய்ச்சிக்குரியது.
பின்னரே தமிழ்நாட்டில் இவ்வகை வழிபாடு காலூன்றியிருக்க வேண்டும். அதுவும் காபாலிகர்கள் வட இந்தியாவிலிருந்து இங்கு வந்தேறிய பின்னரே தொடங்கியிருக்க வேண்டும். (பெரும்பாலும் காபாலிகர்கள், நிர்வாணமாகத் திரிந்தவர்கள், கையில் சூலத்தை ஏந்தியவர்கள். பைரவரும் திகம்பரர். கையில் சூலாயுத்ததினை உடையவர்). முதலில் இரகசிய வழிபாடாக, குகை போன்றவற்றில் வழிபடப்பட்டுப் பின்னர் கோவில்களில் வழிபாடுதொடங்கியிருக்க வேண்டும். வட இந்தியாவில், காசியில் கால பைரவர் சன்னதி உள்ளது. இங்கு வந்து சென்று, வழிபட்டுக் கறுப்புக்கயிறு கட்டிக் கொண்டால் திருஷ்டி தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. ஆனால் பைரவருக்கென்று தனிக் கோயில்கள் எதுவும் தமிழ்நாட்டில் உள்ளதாஎன்பது தெரியவில்லை.
பைரவர் சிவனின் ஒரு அவதாரம் என்ற கருத்து உள்ளது. மகன்மை முறை உடையவர் என்ற கருத்தை கிருபானந்த வாரியார் கூட ஒரு சொற்பொழிவில் கூறியிருக்கின்றார். சிவனின் சூலத்திலிருந்து தோன்றியவர் என்றும் கூறப்படுகின்றது. மேலும் கந்த புராணம், காசி புராணம், கடம்பவனப் புராணம் போன்ற, பிற்காலத்தில் தோன்றிய புராண நூல்களிலே தான் பைரவரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. எனவே இதிலிருந்து பொதுவாக பைரவர் வழிபாடு என்பது பிற்காலத்தில் தான் தமிழ் நாட்டில் வேரூன்றியிருக்க வேண்டும் என்ற முடிவிற்கே வர வேண்டியுள்ளது.
No comments:
Post a Comment