Wednesday, May 4, 2011


16 Face Shivalingam Swarnapureeswarar in Kallakurichchi Villupuram





இறைவன் - சுவர்ணபுரீஸ்வரர்
அம்மன் - சுவர்ணாம்பிகை
பைரவர் - சுவர்ண பைரவர்

சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி சென்று அங்கிருந்து 27 கி.மீ. தூரத்தில் உள்ள அம்மையகரகம் அடையலாம். அங்கிருந்து பேருந்தில் சென்றால் ஒரு கி.மீ. தூரத்தில் கோவில் உள்ளது. கோவில் காலை 5.30-லிருந்து இரவு 9.30 மணி வரை.

பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ, 16 பட்டை லிங்கமான சுவர்ணபுரீஸ்வரரை கார்த்திகை சோமவாரத்தில் வழிபடுவது சிறப்பு. இத்தலம் விழுப்புரம் மாவட்டம் தென்பொன்பரப்பியில் உள்ளது.

சிவனின் தரிசனம் வேண்டி 16 ஆண்டு காலம் கடும் தவம் மேற்கொண்டார் காகபுஜண்ட சித்தர். இவர மேற்கொண்ட தவத்தின் காரணமாக இறைவன் 16 முகங்களை கொண்டவராக லிங்கமாக காட்சி தந்தார். இந்த சித்தர் இறையடி சேர்ந்தபின், வானகோவராயன் என்ற மன்னன் இவ்விடத்தில் கோவில் எழுப்பினான். இத்தலத்தின் இறைவன் அருளால் இப்பகுதி மக்கள் பொன், பொருளுடன் செல்வச் செழிப்பாக வாழ்ந்தனர். எனவே இத்தலம் "பொன்பரப்பி' என்றும், இறைவன் "சுவர்ணபுரீஸ்வரர்' என்றும், அம்மன் "சுவர்ணாம்பிகை' என்றும், பைரவர் "சுவர்ண பைரவர்' என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இத்திருத்தலத்தின் மூலஸ்தானமும் அர்த்த மண்டபமும் எப்போதும் உஷ்ணத்துடன் இருக்கும். ஏனென்றால் இத்தலத்தில் 5.5 அடி உயரமுள்ள சிவலிங்கத்தை சூரியகாந்தக்கல்லால் வடித்துள்ளனர். சிவபெருமான் இத்தலத்தில் அக்னி சொரூபமாக உள்ளார். இங்குள்ள சிவலிங்கம் சித்தர் பிரதிஷ்டை என்பதால், கிரக தோஷம் உள்ளவர்கள், சிவனுக்கு தேனபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். சூரியகாந்தக்கல் நவபாஷாணத்திற்கு ஒப்பானது. லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை பருகினால் நோய்கள் விரைவில் குணமாக குணமடைகின்றன. மேலும் குழந்தை செல்வம் வேண்டுவோர், ஐப்பசி பௌவுர்ணமியில் நடைபெறும் அன்னாபிஷேகத்தின் போது தரப்படும் பாகற்காய் குழம்பை பிரசாதமாக சாப்பிடுகிறார்கள்.

இத்தலத்திலுள்ள இறைவன் பதினாறு பட்டைகளுடன் இருப்பதால் பதினாறு முக லிங்கம் எ‌ன்று அழைக்கப்படுகிறார். பொதுவாக பதினாறு முக லிங்கத்தில், அதன் பாணம் மட்டுமே 16 பட்டைகளுடன் இருக்கும். ஆனால், இங்கு ஆவுடையாரும் (பீடம்) 16 பட்டைகளுடன் அமைந்துள்ளது தனி சிறப்பு.

இத்திருத்தலத்தில் உள்ள அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். அம்பாள் கிழக்கு பார்த்து நின்றிருந்தாலும், இவளது முகம் சிவன் இருக்கும் திசை நோக்கி சற்று திரும்பியிருக்கும். காகபுஜண்டர், மனைவி பகுளாதேவி ஆகியோரின் ஜீவசமாதி அம்பாளின் பார்வையில் படும்படி உள்ளது.

சந்திர தோஷம், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் தோஷங்கள் நீங்கும். ஏனென்றால் காகபுஜண்டர் சித்தர், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலையிலிருந்து தோன்றியவர். நினைத்த நேரத்தில் காக வடிவம் எடுக்கும் தன்மை கொண்டவர். இத்தலத்தில் உள்ள நந்தி சிறியதாக இருக்கும். ராகு தோஷ நிவர்த்திக்காக இந்த நந்திக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்போது அபிஷேகப்பால் நீல நிறமாக மாறுகிறது. "பால நந்தி' என்பது இதன் திருநாமம். 

சிவனுக்கு பின்னால் மகாவிஷ்ணு ருத்ராட்சம் அணிந்து காட்சியளிக்கிறார். சிவனும் தானும் ஒன்றே என்பதை காகபுஜண்டருக்கு உணர்த்துவதற்காக இவ்வாறு காட்சி தருகிறார். முருகன் ஆறுமுகத்துடனும், 12 திருக்கரங்களுடனும் 8 அடி உயரத்தில் மயிலில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். முருகனுக்கு வலது பக்கம் உள்ள வள்ளி தலை சாய்த்து நிற்கிறாள். கருவறை வாசலில் துவாரபாலகர்களுக்கு பதிலாக துவார லிங்கங்கள் உள்ளன. 

மூலஸ்தானத்தில் காகபுஜண்டரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க இங்குள்ள பாணலிங்கத்திற்கு, பாலில் மிளகை அரைத்து கலந்து தடவி வழிபாடு செய்கின்றனர். அவிட்டம் நட்சத்திரத்திற்குரியவர்கள் தங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று, சிவனுக்கு தேனபிஷேகம் வழிபடுவது சிறப்பு.



நன்றி ! Webdhunia

No comments: