Sunday, September 4, 2011

அருள்மிகு கால பைரவமூர்த்தி திருக்கோவில், தூர்வாசபுரம், புதுக்கோட்டை மாவட்டம்

கால பைரவர் இக்கோயிலில் தனிசன்னதியில் இருக்கிறார். பக்தர்கள் உபயம் இருந்தால் இவருக்கு, தேய்பிறை அஷ்டமியில் யாகம் நடத்தப்படும். இவருக்கு பசு நெய்யால் செய்த வடை மாலை சாத்தப்படுகிறது. இதை இப்பகுதியிலேயே செய்து தருகிறார்கள். கட்டணம் ரூ.300. கார்த்திகையில் நடக்கும் சம்பகசூரசஷ்டி விழாவின்போது ஆறு நாட்களும் பைரவர் பவனி வருகிறார். அப்போது மல்லாசுரன், பத்மாசுரன் என்னும் அசுரர்களை வதம் செய்த வைபவம் நடக்கிறது. பைரவர் இங்கு பிரசித்தி பெற்ற மூர்த்தி என்பதால் இக்கோயில், "பைரவர் கோயில்' என்றே அழைக்கப்படுகிறது.


கால பைரவருக்கு கற்பூர ஆரத்தி செய்யப்படும் தட்டை பக்தர்களிடம் காட்டுவது கிடையாது. அதுபோல, இங்குள்ள பைரவருக்கு சாத்தப்பட்ட சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் பூக்களையும் பக்தர்களுக்கு கொடுப்பதில்லை. சிவன், அம்பாள் சன்னதியிலும் பிரசாதம் தரப்படுவதில்லை. இதற்கு காரணம் இருக்கிறது.

இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் இக்கோயிலுக்கு வந்தபோது, அவரது அமைச்சர் கோயில் மரபை மாற்றி, மன்னருக்கு முதல் தீபாராதனையை காட்டச்செய்தார். மேலும் சந்தனம், குங்குமத்தையும் பிரசாதமாக தரச்செய்தார். மன்னர் கோயிலைவிட்டு வெளியேறியபோது, வழியில் தீபாராதனையை தொட்டு வைத்த கண்ணிலும், சந்தனம் வைத்த நெற்றியிலும் வெண் புள்ளிகளுடன் குஷ்டநோய் உண்டானது. மன்னர் கலங்கிப்போய் பைரவர் முன்பு வந்து, அறியாமல் நடந்த தவறுக்கு மன்னிப்பு வேண்டினார். அவரது குஷ்ட நோய் தீர்ந்தது.

மதுரையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் 85 கி.மீ., தூரத்தில் உள்ள திருமயம் சென்று, அங்கிருந்து ராங்கியம் செல்லும் வழியில் 9 கி.மீ., சென்றால் இவ்வூரை அடையலாம். திருமயத்தில் இருந்து குறித்த நேரத்தில் மட்டும் பஸ்கள் செல்கின்றன. ஆட்டோ வசதி உண்டு. இவ்வூரை "மேல தூர்மா' என்று சொன்னால்தான் உள்ளூர் மக்களுக்கு தெரிகிறது.

தற்பொழுது இந்த கோவிலில் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருகின்றன.  நிதி உதவி செய்ய விரும்புகிறவர்கள் கோவில் குருக்களை அணுகலாம் 

திரு C.T. சுப்ரமணியன் @ மூர்த்தி அவர்கள் 

+91- 4333 - 276 412, 276 467, 94427 62219.


நன்றி !   தினமலர் & படங்கள் திரு K. கண்ணன் மற்றும் நிஷாந்த் 


No comments: