திருச்சி நகரில் சாதாரண பிளாஸ்டிக் பொருட்கள், மருந்து பொருட்கள், மளிகை
பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் தங்க வைர நகைகள் வரை
அனைத்தையும் விற்பனை செய்யும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் நிறைந்து
இருப்பதால் காலை முதல் இரவு வரை பரபரப்பாக காணப்படுவது திருச்சி பெரிய
கடைவீதியாகும். இந்த பெரிய கடைவீதியில் நூறாண்டு பெருமைமிக்க ஸ்ரீ பைரவநாத
சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவராக பைரவர் வீற்றிருப்பதால் இது
பைரவருக்கான தனி ஸ்தலமாக விளங்கி வருகிறது. வடக்கே புனித ஸ்தலமான காசியில்
கங்கையை பார்த்தபடி வீற்றிருக்கும் பைரவருக்கு நிகரான சக்தி வாய்ந்தவராக
நம்பப்படுவதால் இந்த கோவிலை திருச்சியின் காசியாகவே கருதி வழிபட்டு
வருகிறார்கள் ஆன்மிக வாதிகள். முன்பெல்லாம் இந்த பகுதியில் உள்ள பக்தர்கள்
மற்றும் திருச்சியின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பக்தர்கள் மட்டுமே
வழிபட்டு வந்த இந்த கோவில் தற்போது பிரபலங்களின் வருகையால் திக்குமுக்காடி
வருகிறது. தேய்பிறை அஷ்டமி தினங்களில் இந்த ஆலயத்திற்கு வந்து பைரவருக்கு
மிளகு தீபம் ஏற்றி வழிபட்டாலும், சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடத்தி
வழிபட்டாலும் எம பயம் நீங்கும், ஆயுள் நீடிக்கும், எதிரிகள் துவம்சம் ஆகி
விடுவார்கள், ஆட்சியில், அதிகாரத்தில் இருந்தவர்கள் இழந்த பதவியை மீண்டும்
பெறலாம். இருக்கும் பதவியை இழக்காமல் தக்க வைத்துக்கொள்ளலாம் என
நம்பப்படுவதால் சமீபத்தில் இந்த கோவிலுக்கு அரசியல் மற்றும் அதிகார
வர்க்கத்தில் உள்ள பிரபலங்களின் பார்வை இந்த கோவிலின் பக்கம் திரும்பி
உள்ளது. தேய்பிறை அஷ்டமி நாட்களில் இந்த கோவிலுக்கு வந்து பூஜை நடத்தியதால்
பதவியை இழந்த அரசியல் பிரபலங்கள் மீண்டும் பதவி பெற்றிருப்பதே இந்த
கோவிலின் சிறப்புக்கு காரணம் என்கிறார்கள் பைரவரின் பக்தர்கள்.
நன்றி !தின தந்தி
No comments:
Post a Comment