Tuesday, October 7, 2014

7 நாட்களும் ராகுகால பைரவர் வழிபாடு பலன்கள்


காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன. 

காலபைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாற்றி, எலுமிச்சம் பழ மாலை அணிவித்து, எள் கலந்த சாதமும் இனிப்புப் பண்டங்களும் சமர்ப்பித்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூஜைக்காக மந்திரங்களைச் சொல்லி அர்ச்சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும். அன்று அன்னதானம் சிறப்பிக்கப்படுகிறது. 

* திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி வழிபட வேண்டும். மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும்; வழக்கில் வெற்றி கிட்டும். 

* திங்கட்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு அல்லிமலர் மாலை சூட்டி, புனுகு சாற்றி, பாகற்காய் கலந்த சாதம் படைத்து அர்ச்சனை செய்தால் கண்டச் சனியின் துன்பம் நீங்கும். 

* செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம்பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை வலுப்படும். 

* புதன்கிழமை ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம்; தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெறலாம். 

* தேய்பிறை அஷ்டமி அன்று அல்லது வியாழக்கிழமையில் பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால் பாயசம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் படைத்து அர்ச்சனை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும். 

* வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சந்தனக் காப்பு அணிவித்து, புனுகு பூசி, தாமரை மலர் சூட்டி, அவல், கேசரி, பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். 

* சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால் பாயசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும். 

பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும். ராகு காலத்தில் சிறப்புப் பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் கிட்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

நன்றி ! மாலை மலர் 

No comments: