Wednesday, January 28, 2015

செல்வம் பெருகச் செய்யும் பைரவர் தரிசனம்!


புராண வரலாறு: ஒரு முறை பிரம்மா தனக்கு ஐந்து தலை இருப்பதாக கர்வம் கொண்டு சிவனை நிந்தித்தார். எனவே கோபம் கொண்ட சிவபெருமான் அருகே இருந்த ருத்ரனிடம் பிரம்மாவின் ஐந்தாவது தலையை துண்டிக்கும்படி கூறினார். ருத்ரனும் பைரவர் உருவம் கொண்டு பிரம்மாவின் ஐந்தாவது தலையை துண்டித்தார் கர்வம் அடங்கிய பிரம்மா பைரவரை வணங்கினார். சிவனை வணங்கினார். அவரை மன்னித்தார் சிவன். பின்னர் பிரம்மனின் தலையை துண்டித்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க அருளுமாறு சிவபெருமானிடம் வேண்டினார் பைரவர். பூலோகம் சென்று பிச்சை எடுத்தால் இந்த தோஷம் நீங்கும் என சிவபெருமான் பைரவரிடம் கூறினார். பைரவர் அவ்வாறே பிச்சை எடுத்து வரும்போது குடந்தை அருகே உள்ள திருவலஞ்சுழியில் அவரது பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. பின் அங்குள்ள ஸ்வேத விநாயகரை பைரவர் வேண்ட அவர் பைரவர் முன் தோன்றி, பைரவரின் கையில் உள்ள சூலாயுதத்தை கிழக்கு நோக்கி வீசும்படியும்; அது எங்கு சென்று விழுகிறதோ அந்த இடத்தில் கோயில் கொண்டிருப்பாயாக எனக்கூற பைரவரும் அவ்வாறே செய்தார். அந்த சூலாயுதம் ÷க்ஷத்திரபாலபுரத்தில் போய் விழ, பைரவரும் அத்தலத்திலேயே கோயில் கொண்டார். காலபைரவர் ÷க்ஷத்திரபாலகர் என அழைக்கப்பட்டார். அவரது பெயரே அந்த ஊருக்கும் வழங்கலாயிற்று.
பொதுவாக பைரவர் மிகவும் உக்கிரமாகக் காணப்படுவார். ஆனால் இங்குள்ள காலபைரவர் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதால் மிகவும் ஆனந்தமாகக் காணப்படுகிறார். அதனாலயே இங்குள்ள காலபைரவர் ஆனந்த காலபைரவர் என அழைக்கப்படுகிறார்.  விரித்த சடை மேல் நோக்கி இருக்க, நான்கு கரங்களிலும் கபாலம் சூலம், பாசம், டமருகம் ஆகியவைகளைக் கொண்டு இங்கு அருள்பாலிக்கிறார் காலபைரவர்.
எல்லா சிவாலயங்களிலும் நடராஜர், பிரதோஷ மூர்த்தி, தட்சிணாமூர்த்தி என சிவ பெருமானின் திருமூர்த்தி பிம்பங்கள் அமைந்திருப்பது இயல்பு. இருப்பினும் பைரவருக்கு அனைத்து ஆலயங்களிலும் தனிச் சிறப்பு உண்டு. அசுர கணங்கள் பூலோகத்துக்கும் தேவலோகத்துக்கும் தொல்லைகள் தந்த போதெல்லாம் சிவபெருமான் தனது அம்சமாக பைரவரை தோற்றுவித்து, அசுரர்களை அழித்து, மக்களை மகிழச் செய்தார் எனச் சொல்வதுண்டு. சிவபெருமானுடைய குமாரர்களாக ஐந்து பேரைச் சொல்வதுண்டு அவர்கள் பஞ்ச குமாரர்கள் என அழைக்கப்படுகின்றனர். விநாயகர், முருகன், சாஸ்தா, வீரபத்திரர், பைரவர் எனபவர்களே அந்த ஐந்து குமாரர்கள்.
பைரவ அஷ்டமி: பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறையில் அமையும் அஷ்டமி, சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த நாள். பைரவரை வழிபடவும் இந்த தேய்பிறை அஷ்டமியே சிறந்த நாள். பைரவர் பூஜைக்கு கைமேல் பலன் உண்டு எனச் சொல்வதுண்டு. பைரவரை, அஷ்டமி திதியில் தீபமேற்றி வழிபட்டால் இழந்த செல்வத்தை பெறலாம். சொர்ண பைரவருக்கு 108 காசுகளால் அர்ச்சனை செய்து அக்காசுகளை வீட்டில் வைத்துக்கொள்ள செல்வம் நிலையாகத் தங்கும். தீராத நோய்கள் தீர பைரவ ஹோமமும், அபிஷேகமும் செய்து வரவேண்டும். திருமணத்தடை நீங்க ஞாயிறு அஷ்டமி திதியில் விபூதி அபிஷேகம் செய்து, மிளகு வடை சாற்றி வழிபட திருமணம் கூடி வரும். இழந்த செல்வத்தைப் பெற 11 அஷ்டமி திதிகளில் பைரவ தீபம் ஏற்றி வர வேண்டும். பைரவ தீபம் என்பது மிளகை சிறுமூட்டையாகக் கட்டி எள் எண்ணெயில் ஊறவைத்து ஏற்றுவதாகும். சனிதோஷம் நீங்க பைரவருக்கு செந்நிற மலர்களால் அர்ச்சனை செய்து பைரவ தீபம் ஏற்றலாம். ஒன்பது சனிக்கிழமை இவ்வாறு செய்ய வேண்டும். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் பைரவரை பைரவ அஷ்டோத்திரம் சொல்லி சிவப்பு நிறப் பூக்கள் கொண்டு ஆறு தேய்பிறை அஷ்டமியில் அர்ச்சனை செய்து வர வேண்டும். நவக்கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் செவ்வரளிப் பூக்களால் பைரவ அஷ்டோத்ர சதநாமாவளி பூஜை செய்ய வேண்டும். வறுமையில் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் வளர் அஷ்டமி திதிகளில் ஸ்ரீபைரவ அஷடோத்ர சத நாமாவளி சொல்லி வில்வம் மற்றும் முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்றி வரவேண்டும். 16 அஷ்டமி திதிகளில் இவ்வாறு செய்ய வேண்டும்.
பைரவரில் பல வடிவங்கள் இருந்தாலும் பிரதானமாகக் கூறப்படுவது எட்டு வடிவங்கள். அந்த எண் வடிவங்களுள் ஒரு பைரவரிடமிருந்து எட்டு பைரவர்கள் தோன்றுவார்கள். எட்டு பைரவர்கள் 64 பைரவர்களாக-அதாவது அஷ்டாஷ்ட பைரவர்களாக மாறுகின்றனர். சாயாதேவிக்கும் சூரியனுக்கும் பிறந்தவர் சனீஸ்வரன். சனீஸ்வரனை அவரது அண்ணன் எம தர்மன் பலமுறை கிண்டல் செய்தார். இதனால் மனம் நொந்து வேதனைப்பட்டார் சனிபகவான் தனது வேதனையை தனது அன்னை சாயாதேவியிடம் தெரிவித்தார் சனிபகவான். உடனே தேவி, மகனே! சஞ்சலப்படாதே! காலபைரவரை நோக்கி தவமிரு. அவரது அருளால் உனக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்றாள். அன்னை சொன்னபடியே சனிபகவான் காலபைரவரை நோக்கி தவமிருக்கத் தொடங்கினார். அவர் முன் தோன்றிய கால பைரவர், சனி பகவானுக்கு அருளாசி வழங்கினார். அவரது அருளால் சனிபகவான் நவகிரகங்களில் ஒருவராக ஆனார். சனி பகவான் ஈஸ்வர பட்டம் பெற்றதும் கால பைரவரால்தான். பைரவரை சனிபகவானின் குருநாதர் என்பர்.
பைரவர் கோயில்கள்: தமிழ்நாட்டை தவிர காலபைரவர் தனிக்கோயில் கொண்டுள்ள இன்னொரு தலம் காசி. காசியில் பிரதானமாக விளங்குபவர் காலபைரவரே காசியில் கால பைரவருக்கு வழிபாடு முடிந்த பின்பே காசி விசுவநாதருக்கு வழிபாடு நடக்கும். காசி யாத்திரை செல்பவர்கள் காசிவிசுவநாதரை வணங்கிய பின், அங்கிருக்கும் காலபைரவரை வணங்கினால் யாத்திரையின் பூரண பலன் கிடைக்கும் என்பது ஐதிகம். ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு பைரவர்கள் இருக்கின்றனர். காசியில் எட்டுத் திசைகளில் எட்டு பைரவர்கள் இருக்கின்றனர். எனவே காசி பைரவ ÷க்ஷத்திரம் என அழைக்கப்படுகிறது.
குத்தாலம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் குத்தாலத்திலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் ÷க்ஷத்திரபாலபுரம் என்ற கிராமம் உள்ளது. இங்கு கால பைரவருக்கு தனி ஆலயம் ஒன்று உள்ளது. பொதுவாக பைரவர் திருமேனிகள் சிவன் கோயில்களில் தனியாகவோ சூரியனோடு சேர்ந்தோ அல்லது தனிச் சன்னதியாகவோ இருக்கும்.  ஆனால் இந்தத் தலத்தில் கால பைரவர் தனிக் கோயில் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் பைரவருக்கான தனிக் கோயில் இது ஒன்றுதான்.
நாகை மாவட்டத்தில் உள்ளது சீர்காழி தலம். இங்குள்ள சட்டைநாதர் ஆலயத்தில் அஷ்டபைரவர்கள் ஒரே இடத்தில் காட்சி தருகின்றனர். பைரவர்களின் தலைவராக சட்டைநாதர் விளங்குகிறார். இத்தலத்தில் சட்டைநாதர் என்ற பெயரில் தரிசனமளிக்கும் இறைவனின் மூர்த்தம் சங்க மூர்த்தம். பைரவ விளங்கும் பரமனின் வடிவம் இது. ஆலயத்தில் தெற்கு பிராகாரத்தில் உள்ள வலம்புரி மண்டபத்தில் அஷ்டபைவர்கள் அருள்பாலிக்கின்றனர். மகாவிஷ்ணுவின் கூர்ம அவதாரம் நிறைவடைந்த பின்னர், அவரது. வேண்டுகோளின்படி ஈசன் அந்தக் கூர்மத்தின் எலும்பை கதையாகவும், தோலை சட்டையாகவும் அணிந்து சட்டைநாதர் ஆனார் என்று தல புராணம் கூறுகிறது. நின்ற கோலத்தில் ஐந்தடி உயரத்தில் இரண்டு திருக்கரங்களுடன் தெற்கு நோக்கி காட்சி தருகிறார் சட்டைநாதர். இந்த பைரவரை தரிசிக்க பெண்கள் தலையில் பூவில்லாமலும், ஆண்கள் சட்டையில்லாமலும் செல்ல வேண்டும். வெளியே வந்தபின் பெண்கள் பூவை மறுபடியும் தலையில் வைத்துக் கொள்ளலாம். சட்டை நாதரின் திருமேனிக்கு வெள்ளி தோறும் புனுகுச் சட்டம் சாத்தப்படுகிறது.
திருச்சி-உறையூர் சாலை ரோட்டில் உள்ளது. ஜெயகாளிகாம்பாள் ஆலயம். இந்த ஆலயத்தில் அஷ்டபைரவர்களின் திருமேனிகள் சுதை வடிவில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு அஷ்ட பைரவர்கள் தங்கள் துணைவியர் மற்றும் வாகனங்களுடன் காட்சி அளிப்பது அற்புதமான காட்சியாகும். ஒவ்வொரு மாதம் தேய்பிறை அஷ்டமியில் இங்குள்ள அஷ்டபைரவருக்கும் சொர்ண ஆகாச பைரவருக்கும் யாகமும் அபிஷேகமும் நடைபெறுகிறது. பக்தர்கள் நூற்றுக்கணக்கில் இந்த யாகத்தில் கலந்து கொள்கின்றனர். இந்த யாகத்தில் கலந்து கொள்வதால் செல்வ வளர்ச்சி, வழக்கில் வெற்றி கண் திருஷ்டி அகலுதல் போன்ற பயன்கள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதே ஆலயத்தில் சொர்ண ஆகாஷ பைரவருக்கு தனி சன்னதி உள்ளது.
சுவர்ணலதா என்கிற சுவர்ண பைரவியை தன் மடி மீது அமர்த்திக் கொண்டு இவர் காட்சி தருகிறார். இவர் மஞ்சள் நிறம் கொண்டவர். மஞ்சள் நிற பீதாம்பர ஆடைகள் அணிந்தவர். பொன்னால் ஆன அட்சய பாத்திரம் ஏந்தியவர். சொர்ண பைரவி மங்களம் தரும் நாயகி ஆவார். பொன் கொட்டும் குடம், தாமரை, அபயமுத்திரை தரித்து சொர்ண பைரவரை தழுவியவாறு காட்சி தருகிறாள். சொர்ண பைரவரின் படத்தை வீட்டில் வைத்து முறைப்படி பூஜித்தால் வறுமை விலகி லட்சுமி கடாட்சம் பெருகும். ஆக, பைரவரை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம் காலத்தை நிர்ணயம் செய்யும் பைரவரை நாம் எந்த நேரத்திலும் வழிபடலாம். பகை அம்சங்களை நீக்கக் கூடியவர் பைரவர். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை நாம் பூஜை செய்து வணங்கினால் வறுமை அகன்று செல்வம் பெருகும்.

நன்றி !!! தினமலர் 

No comments: