பைரவர் உற்பத்தி: சிவபெருமான் பஞ்சகுமாரர்களில் (பைரவர், கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார்) பைரவரும் ஒருவர் என்று கூறப்பட்டாலும் சிவபெருமான் துக்கம் அல்லது துக்கத்திற்குக் காரணமான பாபத்தைப் போக்குவதால் இவரும் பைரவன் என்றே அழைக்கப்படுகிறார். அவரது சக்தியான காளியும் பைரவி என்ற பெயரில் ஈசானத் திக்கில் இருந்து கொண்டு காவல் காக்கின்றான். பைரவரை வலிமைமிக்க ஞானமூர்த்தியாக உற்பத்தி செய்து உலகினைக் காக்கும் பொறுப்பை அவரிடம் சிவபெருமான் அளித்தார். அவர் உயிர்களுக்கும் அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாவலாக இருப்பதுடன் எட்டு திசைகளிலும் அஷ்ட பைரவராக நின்று அவற்றையும் பாதுகாத்து வருகின்றார். அசுரர்களால் உலகம் துன்பமடையும் பொழுதெல்லாம் சிவபெருமான் தனது அம்சமாகப் பைரவரைத் தோற்றுவித்து அசுரர்களை வென்று உயிர்களுக்கு அமைதியளித்தார் என்று பைரவர் உற்பத்தியைப் புராணங்கள் கூறுகின்றன. பைரவருக்கு ÷க்ஷத்திரபாலக மூர்த்தி என்றும் ஒரு பெயர் வழங்குகிறது. ÷க்ஷத்திரம் என்றால் பூமி. பாலகர் என்றால் காப்பர். ÷க்ஷத்திராமாகிய உலகிற்கு ஊழிக்காலத்தில் நேர்ந்த துயரத்தை நீக்கிக் காத்தருளினமையால் சிவனுக்கு ÷க்ஷத்திரபாலக மூர்த்தி என்னும் பெயர் விளங்குவதாயிற்று என்று புராண வரலாறு கூறுகிறது.
பெண்கள் பலவீனமானவர்களாதலால், எந்தப் பெண்ணாலும் அசுரனான தன்னைக் கொல்ல முடியாது என்று கருதி தானாகாசுரன் என்னும் அசுரன் வரம் பெற்றிருந்தான். சாகா வரம் பெற்றதனால் தானாகாசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தத் தொடங்கினான். அதனால் பிரம்மா முதலிய தேவர்கள் அசுரனின் கொடுமையிலிருந்து விடுபட சிவபெருமானை வேண்டினர். தவர்களின் துன்பத்தைக்கண்ட சிவபெருமானும் தனது அம்சமான காளியைத் தோற்றுவித்து தானாகாசுரனை அழிக்கக் கட்டளையிட்டார். சிவனின் கட்டளைப்படியே தானாகாசுரனைக் காளி அழித்ததுடன், அந்தக் கோபத்தீயுடனே உலகெங்கும் சுற்றித் திரிந்தாள். அவளுடைய கோபத்தீயினால் உலக உயிர்களெல்லாம் வருந்தின. காளியின் கோபத்தீயைப் பருகுவதற்கு மாயையாய் பாலகன் உருக்கொண்டு இடுகாட்டில் குழந்தையாய்க் கிடந்து அழுதார். பசியால் அழும் குழந்தையைக் கண்ட காளி அதனைத் தூக்கி மார்புடன் அணைத்துப் பால் கொடுத்தாள். காளியிடம் பால் குடித்த குழந்தை பாலுடன் அவளுடைய கோபத்தீயையும் சேர்த்துப் பருகியது. அதனால் காளியின் கோபம் தணிந்தது. உலகமும் காளியின் அழிவிலிருந்து காக்கப்பட்டது. குழந்தையாய் அவதரித்து காளியின் கோபத்தைத் தணித்த குழந்தைதான் ÷க்ஷத்திரபாலர். இந்த ÷க்ஷத்திரபாலர் சிவனுடைய மூர்த்தங்களில் ஒன்று என்றும் நாய் வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் அவரே பைரவரின் திருவடிவம் என்று இலிங்க புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
நன்றி !!! தினமலர்
No comments:
Post a Comment