அஷ்ட பைரவர் உற்பத்தி: இரணியாட்சன் மகனாகிய அந்தகாசுரன் சிவபெருமானை எண்ணிப் பஞ்சாக்கினி வளர்த்து கடுந்தவம் செய்தான். அவனுடைய தவத்திற்கு இரங்கிய சிவபெருமான் அவனுக்குக் காட்சியளித்தார். அசுரனும் தன்னை யாராலும் வெல்ல முடியாத பேராற்றலும், பெரும் போக நுகர்ச்சியும் தந்தருள வேண்டுமென வேண்டினான். சிவபெருமானும் அவன் கோரிய வரங்களைத் தந்தருளினார். சிவனிடம் வரம்பெற்ற அந்தகாசுரன் தேவர்களை அடக்கி, அவர்களுடைய தேவியர்களின் கற்பைச் சூறையாடத் தொடங்கினான். மேலும் தோல்வியுற்ற தேவர்களை பெண் வேடத்துடன் பணிபுரியும்படிச் செய்து அவமானப்படுத்தினான். அப்படியும் அவனது ஆணவம் குறையவில்லை. அந்தகாசுரனின் கொடுமையை தாங்க இயலாத தேவர்கள் பெண் வேடத்துடனேயே சிவபெருமானைச் சரணடைந்து தங்கள் இன்னல்களைக் கூறினர். அவர்களது துயரத்தைக் கண்ட சிவபெருமான் மகா பைரவரை உற்பத்தி செய்து அந்தகாசுரனின் ஆண்மையை அழித்து, தேவர்களின் துன்பத்தைப் போக்கும்படிக் கட்டளையிட்டார். மகாபைரவர் அதிஉக்கிரத்துடன் அவன்மீது போர் தொடுத்தார். அவருடைய கோபாக்கினியிலிருந்து அஷ்ட பைரவர்கள் தோன்றினர். அந்த எட்டு பைரவர்களுக்கும் தேவர்கள் அஷ்ட மாதர்களை அளித்து இன்பம் பெறச் செய்ததுடன் எட்டு வாகனங்களையும் அளித்தனர்.
அந்தகாசுரனை மகாபைரவர் வென்று அவனைத் தனது சூலாயுதத்தில் குத்தித் தூக்கியவாறு மூன்று உலகங்களிலும் திரிந்தார். அவனுடைய உடலிலிருந்து வழிந்த குருதியைக் குடித்தார். அவன் அஞ்சிச் சோர்ந்து இரஞ்சியதால் அவனை சூலத்திலிருந்து விடுவித்தார். முண்டகன் முதலிய அனேக அசுரர்கள் தோன்றிய போதெல்லாம் சிவபெருமான் அனேக பைரவர்களை உற்பத்தி செய்து அவர்களை அழித்து வருகின்றார். அவர்களின் சம்ஹாரப் பணி முடிந்தபிறகு ஈசான பாகத்திலுள்ள பைரவர் பதம் என்னும் இடத்தில் தங்கி சிவனை வழிபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஸ்தலத்தையும் பைரவர் காப்பது போல ஈசான திக்கிலிருந்து காளி காத்து வருகிறார். பைரவருக்கும், பைரவிக்கும் ஈசான திசை உரியதாகும். திருவண்ணாமலை ஆலயத்தில் உள்ள கால பைரவர் ஆலயமுக மண்டபத்தில் எட்டு பைரவர்களின் சுதைச் சிற்பங்களை தரிசிக்கலாம். சீர்காழி சட்டநாதர் ஆலய தெற்கு பிராகார வலம்புரி மண்டபத்தில் அஷ்ட பைரவர் உள்ளார்கள். அஷ்ட பைரவர்களும் வழிபட்ட எட்டு லிங்கங்கள் கொண்ட கோயில் காஞ்சிபுரம் அருகிலுள்ள பிள்ளையார் பாளையத்தில் உள்ளது. விழுப்புரம் பாண்டிச்சேரி சாலையில் உள்ள வடுவூர் சிவன் கோயிலில் எட்டு வடிவங்களில் பைரவர்களைக் காணலாம்.
நன்றி !!! தினமலர்
No comments:
Post a Comment