Sunday, July 31, 2011

வளம் தரும் வயிரவன்



ஈஸ்வரனின் ஆதி சொரூபங்களில் ஒன்று. வயிரவன், சட்டைனாதர், கால பைரவர், சேத்திர பாலன் அனைத்தும் மற்ற சொரூபங்கள். வயிரவனின் அருள் கிட்டினால் இல்லத்தில் அத்தனையும் நிறையும். மகிழ்வு பொங்கும் என்பது உண்மை. எனக்குத் தெரிந்து , திருப்பத்தூர் பிள்ளையார்பட்டி அருகில் வயிரவன்பட்டியில் வயிரவன் அருள் பாலிக்கிறார். பௌர்ணமி அன்றும் தேய்பிறை அஸ்டமி அன்றும் சிறப்பான பூஜைகள் நடைபெறும். சிவனை வணங்கினால் மோட்சம் மட்டுமே கிட்டும் , பொருளாதார சம்பந்தமான வேண்டுதல்கள் அவரிடம் கேட்கக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால், வயிரவன், தாயின் கருணையுடன் நம் இல்லத்தை கவனித்துக் கொள்வார். அவருக்கு விருப்பமானது கோபத்தை தவிர்த்து அனைவரிடமும் இன்முகம் காட்டுவது.


ஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம்

தனம் தரும் வயிரவன் தளிரடி பணிந்திடில் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்தவன் பதம் மலரிட்டு வாழ்த்திடில் மகிழ்வுகள் வந்துவிடும்
சினம் தவிர்த்தன்னையின் சின்மய புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

வாழ்வினில் வளம்தர வையகம் நடந்தான் வாரியே வளங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் காணகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

முழு நிலவதனில் முறையொடு பூஜைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் உயர்வுற செய்திடுவான்
முழு மலர் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தை சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்
வான் மழையெனவே வளங்களை அருள்வான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவையும் தனக்குள்ளே வைப்பான் பூரணனன் நானென்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பொழில்களில் மணப்பான் பூஜைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

சதுர்முகன் ஆண்வத்தலையினை கொய்தான் சத்தொடி சித்தானான்
புதரினில் பாம்பை தலியினில் வைத்தான் புண்ணியம் செய் என்றான்
பதரினை குவித்து செம்பினை எரித்தான் பசும்பொண் இடுவென்றான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம் ஜெயங்களை தந்திடுவாய்
ஜெய ஜெய வைரவா ஜெகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்


பௌர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீப்த்தை ஏற்றிவைத்து பதினெட்டு தடவை பாராயணம் செய்தால், தன விருத்தி கிட்டும். ஒன்பதாவது பௌர்ணமியன்று அவல் பாயாசம் செய்து நிவேதிக்கலாம். அளவற்ற கீர்த்தியையும், தனத்தையும் தரும் இந்த பூஜையை விடாமல் செய்து வளம் பெறுங்கள்.

Saturday, July 30, 2011

சம்பக சஷ்டி தோன்றிய வரலாறு



ஹிரண்யாட்சகன் என்ற அரக்கன் பெரிய சிவபக்தன் இவன் குழந்தை வரம் வேண்டி தவம் புரிகிறான்.  தாருகாவன அழிவிற்குப் பிறகு ஈஸ்வரன் யோகா நிஷ்டையில் இருக்கையில் பார்வதி தேவி விளையாட்டாக ஈஸ்வரனின் கண்களை மூடி விடுகிறாள்.   ஈஸ்வரன் கண்களை திறந்தவுடன் ஹிரண்யாரட்சகனைப் பார்கிறார். ஹிரண்யாட்சகனுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன.   அதில் ஒன்று குருடாக இருந்ததால் அந்தகாசுரன் என்றும்இரண்டாவது குழந்தை சம்பகாசுரன் என்றும் அழைக்கைப்பட்டனர்.  இவர்கள் இருவரும் அதிபராக்கிரமம் படைத்தவர்களாக இருக்கின்றனர்.  இவர்கள் பெரிய சிவபக்தர்கள்.  இவர்கள் தேவர்களைப் பல கொடிய இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர்.  உலகெங்கும் ஒளியே இல்லாமல் இருக்கிறது.  இருள் சூழ்ந்த உலகில் அசுரர்களின் தீயச்செயல்கள் பெருகுகின்றன. 

அசுரர்களின் மாயையால் இருள் சூழ்ந்து நின்ற உலகை விடுவிக்க தேவர்கள் சிவபெருமானை வேண்டி நின்றனர்.  தாருகா (வனத்தை) புரம் அக்கினி சாந்தமாகி சிவனின் நெஞ்சில் சிறு குழந்தையாக இருந்தது.  அதை சக்தி தேவி தமது குமாரனாக எடுத்து வளர்த்து வந்தாள்.  தேவர்களின் துயர் நீக்க அக்கினிகுஞ்சுக்கு ஈசன் ஆணையிடஅதில் விஸ்வரூபம் எடுத்தவர் (வந்தவர் தான்) பைரவர்.  தேவர்களை காக்க எழுகிறார்.

முதலில் பிரிவாக செயல்பட்டுபிறகு 64 மூர்த்தங்களில் 64 சக்தி  கணங்களுடன் செயல்பட்டு அந்தகாசுரனையும்சம்பகாசுரனையும் குமார சஷ்டியன்று வதம் செய்கின்றார். தனது பூத கணங்களுடன் ஒருவராக அவர்களை சேர்த்துக்கொள்கின்றார்.

சிவபக்தர்களான அரக்கர்களை அழித்த தோஷம் நீங்குவதற்காக ஸ்ரீ யோகபைரவர் தனது வலது கரத்தில் சிவலிங்கத்தை வைத்துக்கொண்டு பூஜை செய்து கொண்டிருக்கிறார்.  இடது கரத்தை தொடையில் வைத்தவாறு காட்சியளிக்கிறார்.

குமார ரூபமாக இருந்து அசுரர்களை வதம் செய்த நாளை குமார சஷ்டி என்றும்சம்பக சஷ்டி எனவும் அழைக்கப்பட்டு கார்த்திகை மாதம் வரும் அம்மாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை திதியன்று காப்பு கட்டுதல் விழாவுடன் துவங்கி ஆறு நாட்கள் விரதம் அனுஷ்டித்து தினம்தோறும் அஷ்ட பைரவர் ஹோமம்அபிஷேக ஆராதனைகள் அதிவிமர்சையாக நடைபெறுகின்றன.  கொடிய துன்பம் தீர்த்துநெடிய இன்பம் தந்த இந்த குமார சஷ்டி நாளில் விரதம் இருந்து வழிபட எல்லா நன்மைகளையும் தருவார் ஸ்ரீ யோகபைரவர்.

ஸ்ரீ யோகபைரவர் சம்பக சஷ்டி விழாவினைப் பற்றி அவ்வப்பொழுது உங்களிடம் பகிர்த்து கொள்கிறேன்.

நன்றி !

Friday, July 29, 2011

பைரவர் உருவான புராணக்கதை



அந்தகாசுரன் என்னும் சிவபக்தன் நீண்ட வலிய தவம் புரிந்து,சிவபெருமானிடம் வரம் பெற்றான்.அந்த வரத்தின் சக்தியால் மும்மூர்த்திகளையும்,மற்ற தேவர்களையும் துன்புறுத்தினான்.அவர்களை சேலை அணிந்து,கையில் வளையிட்டு,கண்ணில் மைதீட்டி,பெண் வேடத்தில் தனக்கு சாமரம் வீசி பணிபுரியச்செய்து,இழிவு படுத்தினான்.அந்தகாசுரன் இருள் என்னும் சக்தியைப் பெற்றதால்,பிரபஞ்சம் முழுவதும் இருளைக்கொண்டு ஆட்சி நடத்தினான்.

இவர்கள் அனைவரும் அந்தகாசுரனிடம் போரிட்டுத் தோற்றனர்.பின்னர்,முழு முதற்கடவுளான சிவபெருமானைத் தஞ்சமடைந்து முறையிட்டனர்.



தாருகாபுரத்தை எரித்த காலாக்னி ,சாந்தமாகி சிவபெருமானின் நெஞ்சில் ஓர் பகுதியாக இருந்தது.தேவர்களின் துயர் துடைக்க சிவபெருமான் அந்த அக்னிக்குஞ்சுக்கு ஆணையிட்டார்.அதில் விஸ்வரூபம் எடுத்து வந்தவர்தான் ஸ்ரீபைரவர்.

அதுவும் எப்படி விஸ்வரூபம் எடுத்தார் எனில்,எட்டு திக்குகளிலும் அந்தகாசுரனால் உருவாகிய இருளை நீக்கிட எட்டு பைரவர்களை சக்தியுடன் புறப்பட உத்தரவிட்டார்.

அதன்படி,

1)அசிதாங்க பைரவர் + பிராம்மி

2)ருரு பைரவர் + மகேஸ்வரி

3)உன்மத்த பைரவர் + வாராஹி

4)குரோதன பைரவர் +வைஷ்ணவி

5)சண்டபைரவர் + கவுமாரி

6)கபால பைரவர் + இந்திராணி

7)பீஷண பைரவர் + சாமுண்டி

8)சம்ஹார பைரவர் + சண்டிகா 

ஆகியோர் தம்பதி சகிதமாக புறப்பட்டு,அந்தகாசூரனை அழித்து உலகிற்கு ஒளியைக் கொடுத்தனர்.



இதனால்,தேவர்கள் மகிழ்ச்சியடைந்து அனைவரும் தத்தம் ஆயுதங்களை பைரவருக்குக் கொடுத்தனர்.



பைரவரை ஜைன சமயத்தில் விஜயபத்திரர்,வீரபத்திரர்,மணிபத்திரர்,ஸ்ரீபைரவர்,அபராஜிதர் என அழைக்கின்றனர்.

ஜைன சமயத்தில் 96 வகையான பைரவர்கள் உள்ளனர்.பௌத்த சமயத்தில் 84 வகையான பைரவர்களும்,வாமம் என்னும் சாக்த மதத்தில் 64 வகையான பைரவர்களும் உண்டு.கிறிஸ்தவ சமயத்தில் “நோவாஸ் ஆர்க்”, “செயிண்ட் மைக்கேல்”, “செயிண்ட் ஜார்ஜ்” ஆகியோர் பைரவ அம்சங்களே.



ஆகமங்கள்,சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அஷ்ட பைரவர் விளக்கங்களை கூர்ந்து நோக்கினால் மேலே கூறப்பட்டவை,தெள்ளத்தெளிவாக விளங்கும்.

அஷ்ட பைரவர்களும் அறுபத்தி நான்கு காலங்களில்,அறுபத்தி நான்கு தோற்றங்கள் கொண்ட பைரவராகக் காட்சி தருகிறார்கள். 

Wednesday, July 27, 2011

ஸ்ரீ பைரவர்



சிவபெருமானால் படைக்கப்பெற்ற பிரம்மன், சிவனாரைப் போலவே ஐந்து முகங்களும் எட்டுத் தோள்களு மாக விளங்கினார். எனவே இவரை, சிவபெருமானுக்கு இணையாக அனைவரும் போற்றினர். இதனால் ஆணவம் கொண்டார் பிரம்மன்; மதிமயங்கி சிவநிந்தனை செய்தார். அப்போது பைரவரைத் தோற்றுவித்த சிவனார், பிரம்மதேவனின் ஐந்தாவது தலையை வெட்டி, அதனை கபாலமாக்கிக் கொண்டார்.

இன்னொரு கதையும் சொல்வர்.

திருமாலும் பிரம்மனும் சிவனாரின் அடி-முடியைத் தேட முயன்றபோது, பிரம்மன் அன்னபட்சியாகி வானில் பறந்து சென்று சிவனாரின் திருமுடியைக் காண இயலாமல் தோற்றார். ஆனாலும் தோல்வியை ஒப்புக் கொள்ள மனமின்றி, திருமுடியைக் கண்டதாக பொய்யுரைத்து திருமுடியில் இருந்து வீழ்ந்ததாக தாழம்பூவையும் பொய் சாட்சி சொல்ல வைத்தார். குறிப்பாக, பிரம்மனது ஐந்தாவது தலை இந்தப் பொய்யைத் திரும்பத் திரும்ப சொன்னதாம்! 

இதில் சினம் கொண்ட சிவனார், தனது புருவ மத்தியில் இருந்து பைரவ மூர்த்தத்தை உண்டு பண்ணினார். 'பைரவனே! பொய்யுரைத்த பிரம்மனின் தலைகளை அறுத்தெறி' என்று உத்தரவிட்டார். உடனே பிரம்மனின் உச்சந்தலையை அறுத்தெறிந்தாராம் பைரவர். மற்ற தலைகளையும் வெட்ட முயன்றார். அப்போது அங்கு தோன்றிய திருமால், ''முன்னர் பிரம்மன் செய்த தவத்தில் மகிழ்ந்து அவனுக்கு ஐந்து முகங்கள் அளித்தீர். இப்போது நீரே நான்முகனாகி விட்டீர். எனவே அவனை மன்னியுங்கள்!'' என்றார். இதையடுத்து பிரம்மாவும் மன்னிப்பு கேட்டார்.

''
வேதம் ஓதுவோருக்கு இனி நீரே அரசன்; அனைத்து வேள்விகளுக்கும் நீயே குரு! யாக யக்ஞங்களின் பலனை அனைவருக்கும் நீ வழங்கு'' என்று அருளினார் ஈசன். எனவே, பிரம்மன் தனது நான்கு முகங்களாலும் வேதங்களை ஓதிக் கொண்டே இருப்பதால், வேதன், வேதி, வேதா, வேதபுரோகிதன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.



படிப்பு மற்றும் அறிவினால் வித்யாகர்வம் வந்து விடுகிறது; ஆணவமும் செருக்கும் உண்டாகிறது; இறுமாப்பு மற்றும் அகங்காரம் தலைதூக்கி விடுகிறது. இதனால் பொய்யும் புரட்டும் அதிகமாகி, பிற உயிர்களுக்குத் துன்பத்தையும் தீமையையும் ஏற்படுத்தி விடுகிறது. இவற்றையெல்லாம் சிவபெருமான் நீக்கினார் என்பதை இந்தக் கதையின் மூலம் அறியலாம்.


தனது உக்கிரத்தில் இருந்து பைரவ மூர்த்தியை சிருஷ்டித்து பிரம்மதேவனின் அகங்காரத்தை அடக்குவதற்காக அவனது தலையை கொய்தார் அல்லவா சிவபெருமான்! இந்த பைரவ மூர்த்தியை பிரம்மசிரக் கண்டீஸ்வரர் என்று அழைப்பர்.

சிவனாரின் அட்டவீரட்ட தலங்களில் முதன்மையானது கண்டியூர். இங்கு பிரம்மனது ஒரு தலையை கண்டித்து, துண்டித்ததால் இந்த ஊருக்கு கண்டியூர் என பெயர் அமைந்ததாம்! தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது இந்த ஊர்.

இங்கு மேற்கு பார்த்த சந்நிதியில் சிரக்கண்டீஸ்வரர் காட்சி தருகிறார். அம்பாள்- மங்களநாயகி.

பிரம்மனின் தலையைக் கொய்த பைரவரின் வடிவம் இங்கு உள்ளது. பிரம்மன், இங்கு திருக்குளத்தை (பிரம்ம தீர்த்தம்) அமைத்து, சிவனாரை வழிபட்டான் என்பர். கண்டியூர் வீரட்டனாத்து மகாதேவர் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரம்மசிரக்கண்டீஸ்வரரின் அற்புத சிற்பம் ஒன்று காஞ்சிபுரம் கயிலாசநாதர் திருக்கோயிலில் உள்ளது. இதில் ஐந்தில் ஒரு தலையை இழந்து விட்ட பயத்துடன் காட்சி தருகிறார் பிரம்மன். எட்டு கரங்களில் ஒரு கரத்தில், பிரம்மனின் தலையையும் வில், மான், மழு, அம்பு, சூலம், பாசம் ஆகியவற்றை ஏந்தியபடி இன்னொரு கரத்தில் வியோம முத்திரையுடன் தரிசனம் தருகிறார் பைரவர்! சடையில் பாம்புகள்; முகத்தில் கடுங்கோபம்; வலக்காலை ஊன்றி இடக்காலை மடித்தும் காட்சி தருகிறார்.

காஞ்சிக்குத் தெற்கில் உள்ள பெருநகர் என்பது பிரம்மன் சிவபெருமானை வழிபட்ட பிரம்ம நகரம். இங்கு உள்ள தனிச் சந்நிதியில் பைரவ சிவன் வடிவம் தனிச் சிறப்புடன் திகழ்கிறது.

வலிமை மிக்க ஞானமூர்த்தியாக பைரவரை சிருஷ்டித்து அவரிடம் உலகைக் காக்கும் பொறுப்பை அளித்தார் சிவபெருமான். எதிரிகளுக்கு பயத்தையும் தன்னை வேண்டியவர்க்கு அருளையும் தரும் சிவமூர்த்தி இவர்!

பைரவர் என்றால் பயங்கரமானவர் என்று பொருள். பெண்களுக்குக் காவலாக இருந்து தர்மத்தைக் காப்பதால் இவர் பைரவர் என்பாரும் உண்டு. பைரவர் என்பது மருவி வைரவர் ஆனதாகச் சொல்வர். வைரம் போல் திடமான தேகம் கொண்டவர்; பக்தர்களுக்கு வைரம் போன்ற உறுதியான கோட்டையாக இருந்து காவல் தெய்வமாக விளங்குபவர் என்பதற்காகவும் வைரவர் என்று அழைக்கப்பட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.

தலை மீது ஜ்வாலா முடி; மூன்று கண்கள் மற்றும் மணிகளால் கோர்க்கப்பட்ட ஆபரணத்தை அணிந்தும் காணப்படுகிறது பைரவரின் வடிவம்! பின்னிரு கரங்களில் டமருகம், பாசக்கயிறு; முன்னிரு கரங்களில் சூலம், கபாலம்! காவல் தெய்வம் என்பதால், காவலுக்கு உதாரணமாக சொல்லப்படும் நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். இவரது வாகனமான நாய் இவருக்குப் பின்னே குறுக்காகவும், சில இடங்களில் நேராகவும் உள்ளது. சில தலங்களில், நான்கு நாய்களுடன் காட்சி தருகிறார் பைரவர்!

வேதமே நாய் வடிவம் கொண்டு பைரவருக்கு வாகனமாக உள்ளது என்றும் சொல்கின்றனர்



நன்றி சக்திவிகடன்

Monday, July 25, 2011

துன்பம் நீங்கி இன்பம் பெற பைரவர் வழிபாடு

சிவபெருமானின் பஞ்ச குமாரர்களில் கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் மற்றும் பைரவரும் ஒருவர்.


1. பைரவர் என்பது வடமொழிச் சொல்லாகும். இதற்கு மிகவும் பயங்கரமானவர் என்பது பொருளாகும். எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை நாடுபவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்கும் பைரவர் என்பது பெயராயிற்று.


2.பைரவருக்கு ÷க்ஷத்திர பாலகமூர்த்தி என்றும் ஒரு பெயருண்டு. ÷க்ஷத்திரம் என்றால் கோயில். பாலகர் என்றால் காப்பவர். கோயிலைக் காப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.


3. பொதுவாக பைரவர் நீலமேனி கொண்டவராய், சிலம்புகள் அணிந்த திருவடியைக் கொண்டவராய், பாம்புகள் பொருந்திய திருவரையும் மண்டை ஓட்டு மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், பாசம், உடுக்கை, மழு முதலியன தாங்கிய திருக்கரங்களை உடையவராய் கூறப்பட்டாலும் அஷ்டபைரவர் வடிவங்களாகக் கூறும்போது அவரின் வண்ணம் ஆயுதம், வாகனம் இவை மாறுபட்டுக் காணப்படும்.


4. காசி நகரமே பைரவரின் பிரதான தலம் என்பதால் இந்நகரின் பல்வேறு இடங்களிலும் பைரவர் கோயில்கள் காணப்படுகின்றன.


5. தாராசுரம் மற்றும் திருப்போரூரில் பைரவர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்.
6. பைரவரின் பொதுவான வாகனம் நாய் ஆகும். ஒற்றை நாய் வாகனம் காணப்பட்டாலும் நகரத்தார் கோயில்களில் பைரவர் வடிவத்தில் பெரும்பாலும் இரு நாய் வாகனங்களே காணப்படுகின்றன. ஆனால் திருவான்மியூர், போரூர், வேதாரண்யம், திருவிற்கோலம் ஆகிய தலங்களில் பைரவருக்கு நாய் வாகனம் இல்லை.


7. அஷ்ட பைரவ வடிவங்களில் அன்னம், ரிஷபம், மயில், கருடன், குதிரை, யானை, சிம்மம், நாய் ஆகியவை வாகனங்களாகக் காட்டப்பட்டுள்ளன.


8. பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவ விரதம் இருந்து வழிபட்டால் எந்தத் துன்பமும் நம்மை அணுகாது.

Sunday, July 24, 2011

ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்



இழந்த பொருட்களை மீண்டும் பெற: பைரவரின் சன்னதி முன்னால் (27) மிளகை வெள்ளைத் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாள் வழிபட்டால் இழந்த பொருட்களும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.


குழந்தைச் செல்வம் பெற: திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப் பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபடின் விரைவில் அத்தம்பதியருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும்.


சனி பகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்கசனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே, நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும்.


தடைபெற்ற திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும்:ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும். 6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைபட்ட திருமணம் கைகூடும். தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும். 


ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள். துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம். காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்டவருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார். எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.


மாதங்கள் துவாதச ஆதித்தியர்கள் ஆதித்தியர்களின் பிராண தேவதை:
சித்திரை அம்சுமான்  சண்ட பைரவர்
வைகாசி தாதா  ருரு பைரவர்
ஆனி ஸவிதா  உன்மத்த பைரவர்
ஆடி அரியமான்  கபால பைரவர்
ஆவணி விஸ்வான்  ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
புரட்டாசி பகன்  வடுக பைரவர்
ஐப்பசி பர்ஜன்யன்  ÷க்ஷத்ரபால பைரவர்
கார்த்திகை துவஷ்டா  பீஷண பைரவர்
மார்கழி மித்திரன்  அசிதாங்க பைரவர்
தை விஷ்ணு  குரோதன பைரவர்
மாசி வருணன்   ஸம்ஹார பைரவர்
பங்குனி பூஷா   சட்டநாத பைரவர்.

Saturday, July 23, 2011

அஷ்டமி திதி - பைரவர்



ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது.
 
ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. காலபைரவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார்.
 
பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது. எதிரிகள் அழிவர். பில்லி, சூன்யம், திருஷ்டி அகலும். அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது.
 
எமபயம் தவிர்க்கப்படும். பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும். சிறப்புப் பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் கிட்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

Friday, July 22, 2011

கிரக தோஷம் போக்கும் ஆதிபைரவர்!


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சிவகாமசுந்தரி சமேத திருத்தளிநாதர் கோவிலில் தனிச் சன்னதியில் எழுந்தருளி கம்பீரத்துடன் அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்ரீயோக பைரவர்தான் ஆதிபைரவர்.
இவரிடம் இருந்துதான் முதலில் அசிதாங்க பைரவர்உருபைரவர்சண்ட பைரவர்குரோதன பைரவர்உன்மத்த பைரவர்கால பைரவர்பீஷண பைரவர்சம்ஹார பைரவர் எனும் அஷ்ட பைரவர்கள் தோன்றினர்.
பின்னர் இந்த எட்டு பைரவர் திருமேனி ஒவ்வொன்றிலிருந்தும் எட்டு எட்டாக ஒவ்வொரு காரணத்திற்கேற்ப 64 திருக் கோலங்களில் பைரவர்கள் வாகனத்துடனும்வாகனம் இல்லாமலும் நம் நாட்டில் உள்ள எல்லாக் கோவில்களிலும் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்கள். ஆகநம் நாட்டில் உள்ள எல்லா ஆலயங்களிலும் எழுந்தருளி அருள்பாலிக்கும் எல்லா பைரவ மூர்த்திகளுக்கும்இத்தலத்தில் எழுந்தருளிக்கும் ஸ்ரீயோக பைரவர்தான் மூலமூர்த்தி ஆவார்.
பைரவரை ஜோதிட நூல்கள் காலமே உருவாய் கொண்ட காலபுருஷனாக கூறுகின்றன. பன்னிரெண்டு ராசிகளும் அவரது உருவின் பகுதிகளாகின்றன.
மேஷம்-சிரசுரிஷபம்-வாய்மிதுனம்-இரு கரங்கள்கடகம்-மார்புசிம்மம்-வயிறுகன்னி-இடைவிருச்சிகம்-லிங்கம்தனுசு-தொடைகள்மகரம்-முழந்தாள்கும்பம்-கால்களின் கீழ்பகுதிமீனம்-அடித்தளங்கள்.
பிரபஞ்சத்தில் சகல ஜீவ ராசிகளும் வான மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களும்சூரியன்சந்திரன் சனிராகு - கேது ஆகிய நவக்கிரகங்களும் காலச்சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டதே! காலச் சக்கரத்தினை இயக்கும் பரம்பொருள் பைரவரே!
கிரகங்கள் எல்லாம் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. ஆனால்அந்த கிரகங்களை எல்லாம் ஸ்ரீயோக பைரவர் ஆட்டிப் படைத்து ஆட்சி செய்கிறார். பைரவர் அரசர் என்றால்அவர் இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் சேவகர்களே கிரகங்கள். பைரவரின் கட்டளைப்படியே காலச்சக்கரம் சுழல்கிறது. அவர் கட்டளைப்படியே எல்லா கிரகங்களும் செயல்படுகின்றன. அவரைச் சரணடைந்து நெஞ்சம் உருக வழிபட்டால் காலத்தின் கட்டுப்பாட்டையும் மீறி கிரக தோஷங்களை அகற்றி நன்மை புரிவார்.
ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியின்போதும் எல்லா ராசிகளுக்கும்குறிப்பாக பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் ஸ்ரீபைரவரைச் சரணடைந்து வழிபட அவரின் கடைக்கண் பார்வை பட்டு வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்!

Thursday, July 21, 2011

பைரவர் வழிபாடும் அதன் சிறப்புகளும்



பைரவர் வழிபாடும் அதன் சிறப்புகளும்படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஆற்றும் இந்த பைரவரின் வழிபாடு வடக்கேயிருந்து வந்த கபாலிக வழிபாட்டின் ஒரு பகுதியாகும். அனைத்து சிவாலயங்களில் பரிவார தெய்வ வழிபாடாக வழிபடப்படும் இந்த பைரவ வழிபாடு இல்லங்களில் திரிசூல வழிபாடாகவும் போற்றப்படுகிறது. வீடுகளில் காவல் தெய்வமான பைரவர் வடிவங்களை சிலைகளாகவோ படமாகவோ வைத்து வழிபடுவதற்குப் பதில் வீட்டின் சுவரில் திரிசூலத்தை வரைந்து அதனருகில் திருவிளக்கேற்றி வழிபடுகின்றனர். அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு சூரியனிடமிருந்து ஆரம்பித்து அர்த்தசாமப் பூசையாக பைரவருடன் முடிவடைகிறது. இரவு அர்த்தசாமப் பூசை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம். பாதுகாப்பற்ற இந்நாளில் இப்படி சாவிகளை வைப்பதைத் தவிர்த்து பூசை முடிந்ததன் அடையாளமாக கைமணியையும் அபிஷேக கலசம் அல்லது கைச்செம்பையும் வைக்கின்றனர். ஆலயங்களில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. விசேஷ தினங்களில் இவருக்கு நெய்யபிஷேகம் சிறப்பாகச் செய்யப்படுகிறது. அந்த விசேஷ தின பூசையில் எட்டுவித பட்சணங்களும், எட்டுவித அன்னங்களும், நைவேத்தியப் பொருட்களாக நிவேதிக்கப்படுகின்றன. இன்னும் எட்டுவித மலர்களால் அர்ச்சனை செய்து எட்டுவித ஆரத்திகளும் செய்யப்படுகின்றன. 


வழிபாட்டிற்கு உகந்த நேரம்: பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகின்றாராம். அவளுடன் இறைவனும் பைரவராக தலத்தை வலம் வருவாராம். அதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றார்களாம்.

Share Your Blog - Blogger Help

Share Your Blog - Blogger Help

Wednesday, July 20, 2011

பைரவரைப் போற்றும் தேவாரப் பதிகம்



கும்பகோணம் - திருவாரூர் பாதையில் உள்ள திருச்சேறைத் தலத்திலுள்ள சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் கால பைரவர் அற்புதமாகக் காட்சியளிக்கிறார். அவரை வழிபட்ட திருநாவுக்கரசர், பைரவரைப் போற்றிப் பாடிய ஒரே ஒரு தேவாரப்பதிகம் இது.


விரித்த பல்கதிர்கொள் சூலம்
வெடிபடு தமருகம்கை
தரித்ததோர் கோலகால பயிரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திருமேனி வாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே.

Monday, July 18, 2011

ஸ்ரீ பைரவர் வழிபாடும் மந்திரங்களும்



சொர்ணாகர்ஷண பைரவர் ஸ்தோத்திரம்:


”ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்
ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய
அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்தர்ய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:”

இந்த மந்திரத்தை தினம் தோறும், பைரவரை வழிபட்டுப் பாராயணம் செய்து வந்தால் செல்வ வளம் பெருகும். கடன்கள் தீரும்.

வடுக பைரவ மூல மந்த்ரம்:

”ஓம் ஹ்ரீம் வம் வடுகாய ஆபத்துத்தாரணம்
குருகுரு வம் வடுகாய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா”

சர்வ சத்ரு நாசத்திற்கும் ஆபத்துகள் விலகவும் மேற்கண்ட மந்திரம்.

பைரவ காயத்ரி 1:

”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

இது நம்மைத் துன்பங்கள், துயரங்கள் அணுகாமல் இருக்க…

பைரவர் காயத்ரி 2:

”ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

நீடித்த ஆயுளுக்கும், பகைவர்கள் தொல்லை அணுகாமல் இருக்கவும் மேற்கண்ட மந்திரம்.

Friday, July 15, 2011

செல்வ வளம் அருளும் செங்காநத்தம் வைரவர்

வேலூர் நகருக்கு அருகில் நான்கு வழிச்சாலைக்கு அருகில் செங்காநத்தம் கிராமம் உள்ளது .  இயற்க்கை எழில் கொஞ்சும் இங்கே தான் வயல் வெளியில் குடியிருந்து அருள் பாலிக்கிறார்  வைரவர் .

விஷ்ணுவின் அம்சம் 

சிவனின் அம்சமான வைரவர் வழிபாடு தமிழகத்தின் தொன்மையான ஒன்று .  காவல் தெய்வமாக போற்றப்படும் வைரவர் சிவனின் அம்சமாக 2,  விஷ்ணுவின் அம்சமாக 3, பிரம்மாவின் அம்சமாக 1,  இந்திரனின் அம்சமாக 1  என கூறப்படுகிறது .  செங்காநத்தம் கிராமத்தில் அருள் பாலிப்பவர் வைரவர் விஷ்ணுவின் அம்சமாக உள்ளார் .

வைரவருக்கென தனிக்கோவில்கள்

தமிழகத்தில் பிள்ளையார் பட்டி அருகே வைரவன்பட்டியிலும் , புதுக்கோட்டை லிங்கேஸ்வரர் கோவிலிலும் , சுசீந்திரம் அருகே ஒரு குக்கிராமத்திலும் வைரவருக்கு தனி சந்நிதிகள் உள்ளன .   அதே போல் செங்காநத்தம் கிராமத்திலும் வைரவர் தனியே கோவில் கொண்டுள்ளார் .   

பத்து கைகளுடன் வைரவர்


வயல்கள் நடுவே மேற்கூரைல்லாத சிறிய கோவிலில் வைரவர் வீற்றிக்கிறார் .  இங்குள்ள வைரவர் பத்து கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் .  மேலும் வைரவரின் வாகனமாக பைரவர் சிலைகள் எழும் உள்ளன .  தேய்பிறை அஷ்டமி தோறும் வைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றது .  மேலும் சித்திரை பொங்கல் வைத்து கிராம மக்கள் வழிபாடு செய்கின்றனர் .

இங்கு குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் கொடிபோன்று தொங்கும் இலைகளுடன் வில்வ மரம் போல் காட்சியளிக்கும் மரம் .  வைரவர் சந்நிதியின் பின்னே உள்ள அந்த மரத்தைப் பார்த்தாலே அதன் பழமை நமக்கும் புரியும் .  ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கும் எனக் கூறப்படும் அந்த மரம் அபூர்வ ரகங்களில் ஒன்று .  இந்த மரத்தின் பெயர் " களர் உகா " என சொல்லப்படுகிறது .  

இங்கே வீற்றிருக்கும் வைரவரை நாம் மனமுருகி வழிபட்டால் வேண்டியது நிறைவேறும் .  செல்வ வளம் சேரும் ,  குறைகள் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை .

(பி. கு. - இந்த பதிப்பில் உள்ள படம் தேவதானப்பட்டி பைரவர் .  செங்காநத்தம் வைரவர் படம் இருந்தால் அன்பர்கள் அனுப்பிவைக்கவும் email id gsethuanandh@gmail.com)

நன்றி !!! தினமலர் திருச்சி  (14/07/2011)



Thursday, July 14, 2011

ஸ்ரீ-செளபாக்ய-பைரவர்



உயிர்கள் எல்லாவற்றிற்கும் சகல செல்வங்களைத் தந்து அவற்றின் மூலம் இன்பத்தையும் அனுபவிக்கச் செய்யும் தெய்வமாகத் திகழ்பவர் சௌபாக்ய பைரவர்.  இவர் கொலு வீற்றிருக்குமிடம் கற்பகச் சோலைகளுக்கு இடையே அமைந்துள்ள பொங்கு பூம்புனல் ஊற்றுக்கு நடுவில் உள்ளதான மகராலயமாகும்.
  
மகரங்களால் தாங்கப்படும் பொன் மயமான கோட்டையில் சகல பரிவாரங்களுடன் பைரவர் எழுந்தருளியிருக்கிறார். தூய வெண்ணிறமான குதிரையை வாகனமாகவும், இரட்டை மீன் பொறித்த கொடிகளை உடையவராகவும், மச்சமுத்திரை தாங்கியவராகவும் அவர் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
  
பொன் வண்ணத்துடன், பளபளப்பாக அழகிய அகன்ற கண்களைக் கொண்ட மீன், கடலின் உள்ளே மறைந்திருக்கும் பெருஞ் செல்வத்தின் அடையாளமாகும். கடலின் அடியாழத்தில் மகரம் எனப்படும் ஆற்றல் பொருந்திய மீன்கள் வாழ்கின்றன. செல்வத்திற்கு அவை காவல் தெய்வங்களாக உள்ளன.
      
மகரங்களால் காக்கப்படும் கோட்டையே மகராலயமாகும். அத்தகைய செல்வச் சிறப்பு மிக்க மீன் வடிவக் கோட்டையில் சௌபாக்ய பைரவர் பாக்யேஸ்வரியான ஆனந்தவல்லியுடன் வீற்றிருக்கின்றார். மீன் அல்லது மீன் கொடியை உடையவராக, நகுலம் எனும் கீரியை ஏந்தியவராக, சூலம், அமிர்தம் நிரம்பிய பானபாத்திரம் தாங்கியுள்ளவராக வெண்ணிற குதிரையில் அமர்ந்து காட்சியளிக்கின்றார். பாக்யத்தின் பயன் ஆனந்தமே என்பதால் அவரது தேவியின் பெயர் ஆனந்தவல்லி என்று வழங்கப்படுகிறது. அவருடைய மகராலயமான அறுகோணக் கோட்டையின் ஆறு பக்கங்களிலும் அமைந்துள்ள உப்பரிகைகளில் உல்லாசினி, நிராகுலி, யோகின்யை, சல்லாபினி, ஹிதேஸ்வரி, விநோதினி எனும் ஆறு தேவியர் உள்ளனர். இவர்கள் அன்பர்களுக்குக் கவலையற்ற நிலையையும், மன மகிழ்ச்சியையும், இதமான மனோநிலையையும், புதிய புதிய சுகங்களையும் பெறும்படியான பாக்யத்தைக்கொடுக்கின்றனர். இவர்களை பைரவ தந்திரத்தினர் ஷட்குல தேவியர் என்று அழைக்கின்றனர்.
  
இவர்களையடுத்த எண்கோணக் கோட்டையில் அஷ்ட பைரவர்கள் அஷ்டமாத்ரு கைகளுடன் எட்டு கோணங்களில் வீற்றிருக்கின்றனர். அவர்களை அடுத்த வெளிவட்டத்தில் உள்ள தாமரைப் பொய்கைகளின் நடுவே பதினாறு பவள மாளிகைகள் உள்ளன. அதில் பதினாறு பேற்றையும் வழங்க வல்ல, சோடச லட்சுமிகள் எனப்படும் செல்வ லட்சுமிகள் வசிக்கின்றனர். இவர்களை அடுத்துள்ள கொடிகள் நிரம்பிய வல்லீ வனத்தில் உள்ள அறுபத்து நான்கு மாளிகைகளில் அறுபத்து நான்கு யோகினியருடன் அறுபத்து நான்கு பைரவர்களும், அவர்களது பரிவாரமான வேதாளர்களும் வீற்றிருக்கின்றனர்.
  
அவர்களை அடுத்து மூவட்டம் விளங்குகிறது. இந்த வட்டங்களில் காடுகள் முதல் வட்டத்திலும், அடுத்த வட்டத்தில் அகழியும், மூன்றாவது வட்டத்தில் மலைகளும் உள்ளன. காடுகளில் வன பாலகர்களும், அகழியில் தீர்த்த பாலகர்களும், மலைகளில் úக்ஷத்திர பாலகர்கள் எனும் கிரி பாலகர்களும் வீற்றிருக்கின்றனர். இவர்கள் எண்ணற்றவர்கள்.
  
சௌபாக்ய பைரவரையும், அவரது பரிவாரங்களையும் குறிக்கும் வகையில் அமைந்ததே சௌபாக்ய பைரவ யந்திரம். இதில் கற்பக வனங்கள் சூழ்ந்த சோலைகளின் நடுவே அமைந்துள்ள பொங்கும் பூம்புனல் மடுவைக் குறிக்கும் வகையில் மடுவில் வட்டமான வடிவமும், அதன் நடுவில் பைரவர் வீற்றிருக்கும் மகராலயத்தினைக் குறிக்கும் வகையில் இரட்டை மீன் வடிவமும் உள்ளன. அதைச் சுற்றி அமைந்த அறுகோணத்தில் பைரவ சமயத்தின் குல தேவதைகளான ஷட்குல தேவியர்கள் வீற்றிருக்கின்றனர். அதை அடுத்த எண் கோலத்தில் அஷ்ட பைரவர்கள் தேவியருடன் வீற்றிருக்க, அதைச் சுற்றியமைந்த பதினாறு இதழ் தாமரையில் சோடச லட்சுமிகள் வீற்றிருக்கின்றனர். அதைச் சுற்றியமைந்த அறுபத்து நான்கு இதழ் தாமரையில் யோகினிகளும், பைரவர்களும், வேதாளங்களும் உள்ளனர். அதைச் சூழ்ந்துள்ள மூவட்டங்கள் காட்டரண், மலையரண், நீரரண் ஆகியவற்றைக் குறிக்கின்றன. அவற்றில் வனபாலர்கள், தீர்த்த பாலர்கள், கிரிபாலர்கள் பூசிக்கப்படுகின்றனர். அதையடுத்த மூன்று புறங்களில் பிரபஞ்சத்தைச் சுற்றியுள்ள வட்டவெளியாக உள்ள சப்தசாகரம், சக்ரவாள கிரி ஆகியவற்றிலுள்ள தேவர்கள் வழிபடப்படுகின்றனர். இந்த வட்டங்களின் நான்கு திக்கிலும் மந்திர பைரவர், யந்திர பைரவர், மணி பைரவர், ஒüஷதபைரவர் என்ற நால்வர் வீற்றிருக்கின்றனர். நான்கு புறமும் மும்மூன்று வீதிகள் உள்ளன. இவை கடல், ஆகாசம், மலை என்பனவற்றைக் குறிக்கின்றன. இந்த சகல சௌபாக்ய சக்கரத்தை நிலைப்படுத்தி அதிலுள்ள தேவர்களையும், தேவதைகளையும் ஆராதித்து வழிபடுபவன் சகல செல்வங்களையும் அடைகிறான். இவர்கள் தம்மை ஆளும் தலைவனாக விளங்கும் சௌபாக்ய பைரவரின் பக்தர்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லாமல் காப்பவர்கள்.
  
சௌபாக்ய பைரவர் அன்பர்களுக்கு எல்லையற்ற சுகமான வாழ்வைத் தருவதுடன் அவர்களை எப்போதும் மகிழ்ச்சியில் நிலைத்திருக்கச் செய்கிறார். இதிலுள்ள தேவதைகள் யாவரும் வாழ்வில் மகிழ்ச்சியை நிலைத்திருக்கச் செய்பவர்கள். பகைவர்களிடமிருந்து காப்பவர்கள். மனதில் உண்டாகும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் நீக்குபவர்கள். நாளும் புதிது புதிதான மகிழ்ச்சியை உண்டாக்குபவர்கள். இயற்கையாலும் விலங்குகளாலும் உண்டாகும் தொல்லைகளை அறவே அகற்றுபவர்கள்.
  
தகவல்: சிவ சுந்தரி

Tuesday, July 12, 2011

Bairavar Thuthi ! - பைரவர் துதி !

பைரவர் துதி 

ரக்த ஜ்வால ஜடாதரம்  ஸுவிமலம்  ரக்தாங்க தேஜோமயம்
திருத்வா சூல கபால் பபச டமருந் லோகஸ்ய ரக்ஷாகரம்
நிர்வாணம்  ஸூனவாஹனம்  த்ரிந்யனம்  ஆனந்த கோலாஹலம்
வந்தே ஸர்வ பூத பிசாச நாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம் 


காலச்சக்கரம் சுழல்கிறது அதில் நவகிரஹங்களும்  காலச்சக்கிரத்தின் பிடியில்
உட்பட்டு   செயல்படுகின்றன இந்தக் கால்ச்சக்கிரத்தை  இயக்குபவரே
இந்தக் காலபைரவர்
ஒவ்வொரு நொடியும் இவரது ஆணைக்கு உட்பட்டு  தோன்றி  மறைகிறது சிவபெருமானின்
ஓர் அம்சம்தான் இவர்  இவருக்கு  64   திருமேனிகள் உண்டு  ஆனால் முக்கியமாகக்
கருதுபவர்கள் எட்டு  பைரவர்கள் இதனால்  இவர்களை அஷ்ட பைரவர்கள் என்பார்கள் 

சம்ஹாரபைரவர்   ,, அசிதாங்க பைரவர் ,  சண்ட பைரவர்   உன்மத்தபைரவர்
கபால பைரவர்   பீஷ்ண பைரவர்   உரு பைரவர்     குரோத பைரவர்
ச்ம்ஹார பைரவருக்கு வாஹனம்   நாய்
அசிதாங்க பைரவருக்கு  வாஹனம்  அன்னம்
சண்ட பைரவருக்கு வாஹனம்   மயில்
உன்மத்த பைரவருக்கு வாஹனம்  குதிரை
கபால பைரவருகு  வாஹனம்   யானை
பீஷ்ண பைரவருக்கு வாஹனம்  சிம்மம்
உரு பைரவருக்கு வாஹனம்  ரிஷபம்
குரோதபைரவருக்கு   வாஹனம்   கருடன் 
சுவானம் என்று நாய்க்கு சம்ஸ்கிருதத்தில் பெயர்     பைரவர்
ஒரு காவல் தெய்வம்  அதே போல் நாயும் காவல் காக்கும்   நன்றியுள்ள மிருகம் அது
ஒன்றுக்குத்தான்  எமதூதர்களைப் பார்க்கும் சக்தி  உண்டு
சிவன் கோயிலில் கண்டிப்பாக பைரவருக்கு இடம் உண்டு இரவில் அவரிடமே
நடைச்சாத்தியப்பிறகு    கோயில் சாவியை ஒப்படைப்பார்கள்
அனாயாச மரணம் வேண்டும் மரணபயம் இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்வார்கள்
எந்தக்   காலத்திலும் யாரும் ஆஸ்பத்திரிக்குப்  போய் பல  மாதங்கள் படுக்க ஆசைப்
பட மாட்டார்கள்  எல்லோருமே பேசிக்கொண்டே இருக்கும் போது மரணம்  அடைய
விரும்புவார்கள்   தவிர
அகால மரணம் துர் மரணம்   மற்றும் பெரும் துன்பத்திலிருந்து
காத்துக் கொள்ள இவரை வணங்க வேண்டும்  அஷ்டமி அன்று இவரை வணங்க
வேண்டும் அதுவும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி இவருக்கு உகந்த நாள்  ஜாதகத்திலும்
ஆயுள் ஸ்தானம் எட்டாவது இடத்தில்
இருக்கும்   சிகப்பு நிற வஸ்திரம்   சிவப்பு மலர்கள்
சிவப்பு பழங்கள் இருப்பது மிகச்சிறப்பு
இவருக்கு நெய் விளக்கு ஏற்றி பிரார்த்தனைச்
செய்வது வழக்கம்  .  சில பரிஹாரங்களுக்கும்  பைரவர்  பூஜை செய்யப்படுகிறது.

Sunday, July 10, 2011

Aathi Bairavar ! ஆதிபைரவர் !

Aathi Bairavar ! ஆதிபைரவர் !

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சிவகாமசுந்தரி சமேத திருத்தளிநாதர் கோவிலில் தனிச் சன்னதியில் எழுந்தருளி கம்பீரத்துடன் அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்ரீயோக பைரவர்தான் ஆதிபைரவர்.
இவரிடம் இருந்துதான் முதலில் அசிதாங்க பைரவர், உருபைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் எனும் அஷ்ட பைரவர்கள் தோன்றினர்.
பின்னர் இந்த எட்டு பைரவர் திருமேனி ஒவ்வொன்றிலிருந்தும் எட்டு எட்டாக ஒவ்வொரு காரணத்திற்கேற்ப 64 திருக் கோலங்களில் பைரவர்கள் வாகனத்துடனும், வாகனம் இல்லாமலும் நம் நாட்டில் உள்ள எல்லாக் கோவில்களிலும் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்கள். ஆக, நம் நாட்டில் உள்ள எல்லா ஆலயங்களிலும் எழுந்தருளி அருள்பாலிக்கும் எல்லா பைரவ மூர்த்திகளுக்கும், இத்தலத்தில் எழுந்தருளிக்கும் ஸ்ரீயோக பைரவர்தான் மூலமூர்த்தி ஆவார்.
பைரவரை ஜோதிட நூல்கள் காலமே உருவாய் கொண்ட காலபுருஷனாக கூறுகின்றன. பன்னிரெண்டு ராசிகளும் அவரது உருவின் பகுதிகளாகின்றன.
மேஷம்-சிரசு, ரிஷபம்-வாய், மிதுனம்-இரு கரங்கள், கடகம்-மார்பு, சிம்மம்-வயிறு, கன்னி-இடை, விருச்சிகம்-லிங்கம், தனுசு-தொடைகள், மகரம்-முழந்தாள், கும்பம்-கால்களின் கீழ்பகுதி, மீனம்-அடித்தளங்கள்.
பிரபஞ்சத்தில் சகல ஜீவ ராசிகளும் வான மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களும், சூரியன், சந்திரன் சனி, ராகு – கேது ஆகிய நவக்கிரகங்களும் காலச்சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டதே! காலச் சக்கரத்தினை இயக்கும் பரம்பொருள் பைரவரே!
கிரகங்கள் எல்லாம் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. ஆனால், அந்த கிரகங்களை எல்லாம் ஸ்ரீயோக பைரவர் ஆட்டிப் படைத்து ஆட்சி செய்கிறார். பைரவர் அரசர் என்றால், அவர் இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் சேவகர்களே கிரகங்கள். பைரவரின் கட்டளைப்படியே காலச்சக்கரம் சுழல்கிறது. அவர் கட்டளைப்படியே எல்லா கிரகங்களும் செயல்படுகின்றன. அவரைச் சரணடைந்து நெஞ்சம் உருக வழிபட்டால் காலத்தின் கட்டுப்பாட்டையும் மீறி கிரக தோஷங்களை அகற்றி நன்மை புரிவார்.
ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியின்போதும் எல்லா ராசிகளுக்கும், குறிப்பாக பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் ஸ்ரீபைரவரைச் சரணடைந்து வழிபட அவரின் கடைக்கண் பார்வை பட்டு வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்!