இந்துமதம் ஈடிணையற்ற பக்தி வளர்க்கும் பண்பாடு கொண்டது. இறைவன் ஒரே பரம்பொருள் என்று விளக்கியது. ஆதி ஆந்தமில்லாத அருள்ஜோதி என்று அனைவராலும் போற்றப்படும் தன்மை கொண்டது.
அவரவர் மனத்தில் எவ்வாறு உருவகப்படுத்தி பக்தியுடன் பணிந்து உயர்ஞானம் பெற வழி வகுத்து யாவருக்கும் இன்பமூட்டும், பேரின்ப வழிகாட்டும் பேற்றையுடையது. அப்பேர்ப்பட்ட நிலையில் பைரவர் வழிபாடு பாரதத்தில் பெரும்பங்கு கொண்டு இனிய பல தன்மைகள் கொண்டது.
பண்பாட்டு உயர்வுக்கு பக்தியின் சக்திக்கு கோவில்கள் தான் கருப்பொருளாக அமைந்துள்ளன. தீர்த்தங்கள், மூர்த்திகள், தலங்கள், தருக்கள், வாழ்முறை விளங்குகின்றன.
ஆலயம் என்பது பசுக்களாகிய மனிதர்களைச் சீர்படுத்தும் கொட்டில் என்று பொருள் கொண்டதென்றால் வேறு சிறப்பு ஏதும் தேவையில்லையே! மனத்தைப் பக்குவப்படுத்தும் இடம் ஆலயம். எனவே “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” எனக் கூறியுள்ளனர்.
சிவமூர்த்தங்கள் அறுபத்து நான்கு. இவை அனைத்திற்கும் அடிப்படையாக எட்டு திருவுருவங்கள் என்பர். அவற்றுள்ளே பைரவரும் ஒன்றாகும்.
பாசுபத சைவசமயத்தில் நான்கு வகையாகக் கூறுவர் அவை காளாமுகம், காபாலிகம், வைரவம், மாவிரதம் எனப்படும். வைரவம் என்பது பைரவரைக் கடவுளாகக் கொண்டு வழிபடுதல் ஆகும். இறைவனின் நற்கருணை பைரவ வடிவமாகும். அறம் பிழைத்தோர்க்கு திறன் காட்டி அழிப்பது பைரவர் செயல் என்பர்.
வாரணாசி எனப்படும் காசி என்னும் புண்ணிய பூமியில் இறையின் ஆணைக்கு இணங்க இறையம்சமாகிய காலபைரவர் காவல் தெய்வமாக விளங்குகிறார்.
வடநாட்டில் சிறந்து விளங்கும் பைரவ வழிபாடு, பின்பு தென்னாட்டிலும் வணங்கி வழிபட அடிகோளியது. சிறுத்தொண்டர் கதை இதற்கு உதாரணமாகும். எல்லா சிவத்தலங்களிலும் பைரவர் உண்டு. வழிபாடுகள் உண்டு.
ஆலய வழிபாட்டில் முதலில் விநாயகர், அடுத்து பிற தெய்வ வழிபாடுகள் முடித்துத் திரும்புங்கால் பைரவரை வழிபட்டு சண்டிகேசரிடம் தெரிவித்து வருவதே பூரணமான வழிபாடாகும் என முன்னோர் நெறிப்படுத்தியுள்ளனர். ஆழ்ந்தறிந்து உண்மை நிலை உணர்ந்து உலகோரும் பயனாக்கி இன்பமுற நன்னெறி முறைகளை நமக்கு அளித்தனர். அருளல், அழித்தல், காத்தல் என்ற சிவனாரின் பணியில் சிவாம்ச பைரவர் செய்ததை ஈண்டு காண்போம்.
அந்தகாசுரன் என்பான், பஞ்சாக்னியின் நடுவிலிருந்து கடுந்தவம் புரிந்து சர்வேசனிடம் தனக்கு பிரம்மா, திருமால், தேவர்கள் போன்றவர்களால் அழிவு வராத வரம் வேண்டிப் பெற்றான். இதனால் ஆணவம் மிகுந்து பல்லோரையும் துன்புறுத்தும் நிலையைக் கொண்டு தனக்கு நிகர் எவரும் இலர் என்று கொடுமை பல செய்து வந்தான்.
அனைத்து தேவாதி தேவர்களும் அவதிப்பட விடுவாரா ஈசன்? தன் அம்சமாக பைரவரைத் தோற்றுவித்தார். அருளிச் செயல் புரிந்தவர் அழித்தலுக்கு உதவினார். அழித்தல் என்பது தீமைகளை அழித்தல் என்பது உணரவல்லதாகும்.
அசுரர்களை அழித்த பைரவர் மும்முனை சூலத்தால் குத்தித்தூக்கி சிவன் முன் சென்றார். அந்தகாசுரன் தன் ஆணவமடங்கி மன்னித்தருள வேண்டியதும், கர்வமடங்கி தன்னிலை உணர்ந்த அந்தகாசுரனைத் தன் பூத கணங்களின் தலைவனாக்கினார்.
ஆபத்துகளில் பக்தர்களின் துன்பம் நீக்கி நல்லருள் நிறைக்க உண்டாக்கிக் கொண்டது, “ஆபத் உத்தாரண மூர்த்தி” யாகும். ஆபத்துக் காலங்களில் பக்தர்கட்கு உடனே காட்சிதந்து அபயமளிப்பதன் காரணமாக ஆபத்சகாயர் என்று அழைக்கப்பட்டார். இவரை சீர்காழி திருத்தலத்தில் தரிசிக்கலாம். சட்டநாத சுவாமியாக திருக்கோலம் கொண்டவர்.
முண்டகாசுரன் என்பான் தவத்தினால் சிவன் தந்த வரங்களைத் தவறாகப் பயன்படுத்தி இந்திரன் முதலான தேவர்களைத் துன்பநிலைக்குள்ளாக்கினான். இறைவன் தன் அம்சமாக அனுப்பிய வடுகமூர்த்தியும் முண்டகாசுரனை அழித்தான். பாலகனாக வடிவம் கொண்ட பைரவர் ஒரு கையில் பாத்திரம்,மறுகையில் தண்டுகொண்டு காட்சி தருபவர் ஆவார்.
க்ஷேத்திரபாலர் என்றால் மகா பிரளய காலத்திலும் உலகைக் காப்பவர் என்பதாகும். இவரது வாகனம் நாய். நான்கு வேதங்களையும் நாய்களாக்கி வாகனமாகக் கொண்டவர். எல்லா சிவன் கோவில்களிலும் காணலாம்.
சிவத்தோற்றங்களில் எட்டு வகை அடிப்படையென்பனவற்றில் பிரம்ம சிரச்சேத மூர்த்தியும் ஒன்று. காசியில் காலபைரவர் இருக்கக் காரணகர்த்தா ஆவார்.
படைப்புக் கடவுள் பிரம்மா சிவனிடமிருந்து பெற்றது மறந்து உலகத்து உற்பத்தி யாவும் தன்னால் என்ற ஆணவம் கொண்டான். ஆணவமே சினமாக மாறும். சினம் மிகுதியாக அறியாமை ஏற்படும். என்ன சொல்கிறோம்? செய்கிறோம் என்று அறியா நிலை ஏற்பட்டு அதனாலே பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதற்கு பிரம்மனின் நிலை ஓர் எடுத்துக் காட்டாகும்.
பரப்பிரம்மம் பற்றிய தெளிவு பெற ரிஷிகள் ஒன்றிணைந்து சத்தியலோகத்தில் பிரம்மனைக் கேட்க, உலகை உண்டாக்கும் தானே பிரம்மம் என்றார். முனிவர்கள் திருமாலிடம் சென்று பிரம்மம் யார்? எப்படிப்பட்டது? என அறிந்து கொள்ள வேண்டினர். உலகினைக் காக்கும் கடவுள் தானே என்பதால் பிரம்மம் வேறில்லை என்றார். முனிவர்கள் பிரம்மா கூறியதைப் பற்றிக் கேட்க, தன் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரம்மா எப்படி முழுமை பெற்ற பிரம்மமாகும் என்றார்.
அங்கு அழைக்கப்பட்டுவந்த பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் வாதப்பிரதிவாத நிலை ஏற்பட்டது. பின் பிரணவ மந்திரமாகிய காயத்ரி, மற்றும் நால்வகை வேதங்களும் தேவ வடிவமாக வரச்செய்து கேட்க அனைவரும் பஞ்சபூதங்கள் தோன்றி ஒடுங்கும் சிவமே, யாகத் தலைமையான சிவனே, மூவுலக சக்தியாக அணுவிற்கும் அப்பாலான பரந்து விரிந்த சிவமே, முத்தொழில் முதல்வனாகிய சிவமே பரம்பொருள் என்றார்கள்.
இவ்வாறு உண்மைகளை உணர்த்தியும் மனச்சஞ்சலத்தால் சிவனிடமே விளக்கம் கேட்டனர். தன் அடியைத் திருமாலும், முடியை பிரம்மனும் கண்டுவந்து கூறினால் உண்மையுணரலாம் என்றார் பரம்பொருள்.
இருவராலும் அடிமுடி காணா நிலையும், தாழம்பூ சாட்சி கூற முடியைக் கண்டதாக பிரம்மன் கூறிட, பிரம்மனுக்கென தனிக்கோவில் இல்லாததும், தாழம்பூ அர்ச்சனைக்கு உதவாமல் போனதும் அனைவரும் அறிந்ததே! அப்போது (பொய்யுரைத்தபோது) சிவனார் நெற்றிக் கண்ணிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பைரவர் பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒரு சிரத்தைக் கிள்ளி எடுத்துவிட்டார். இதனால் பைரவர் கையில் கொய்யப்பட்ட தலை ஒட்டிக்கொண்டதுடன், பிரம்மஹத்தி தோஷம் வந்தடைந்தது. பிட்சாடன கோலத்தில் பிரம்ம கபால மூர்த்தியாக பைரவரை சோழ நாட்டில் திருவையாறுக்கு அருகில் உள்ள கண்டியூரில் காணலாம்.
இதில் நாம் உணரத்தக்கதென்னவெனில் ஆணவம் என்பது உடலுள் ஓடும் ரத்தத்தால் அமைகிறது. மிதமிஞ்சிய ரத்தத்தால் கேடும், மிகக் குறைந்த ரத்த ஓட்டத்தால் உடலில் தீங்கும் நேரிடுவது உணர்த்தப்படுகிறது. இதன் சமன்பாட்டுக்காகவே “ரத்ததானம்” என்பது தோன்றியதோ என எண்ணத் தோன்றுகிறது.
பிரம்ம கபாலமேந்திய பைரவர் ரத்த பலி கபாலத்தில் நிறைந்ததும் ஏற்பட்ட தோஷம் நீங்கியதும் உயிரினங்கள் உணர காசியில் ரத்த பிக்ஷப் பிரதான பைரவராகக் காட்சி தருகிறார்.
இங்கு (காசியில்) எட்டு பைரவர்கள். குருபைரவமூர்த்தி ஹனுமான்காட் என்னுமிடத்தில் உள்ளவர்.
துர்க்கா கோவிலுள்ளே சுற்றி வரும்போது சண்டபைரவர் இருப்பதைக் கண்டு தரிசிக்கலாம்.
விருத்த காலேஸ்வரர் கோவில் பிராகாரத்தில் அஸித்தாங்க பைரவரை அமிர்தகுண்டத்திற்கு முன்னால் கண்டு வணங்கலாம்.
கபாலபைரவர் பற்றி முன்பேயறிந்தோம். இவருடைய தரிசனத்தைக் காசியில் பெறுவது சிறப்பாகும்.
குரோதன பைரவர் என்பவரும், வடுக பைரவரும் ஒருவரே என்று கூறுவார்கள்.
உன்மத்த பைரவரை பஞ்சகோசம் என்னுமிடத்தில் சிறுகிராமமான தேவாரம் என்னுமிடத்தில் உள்ள வணங்கினால் பித்தந்தெளிவுறும். சிந்தை சீர்பெறும்.
சத்துருக்கள் இல்லாது மாறி சகநட்பு கொண்டிட வழி செய்யும் கருணையான சம்ஹார பைரவரைக் கண்டு தரிசிப்பது காசிக்குச் செல்பவர் செயல்படுத்தும் திவ்ய தரிசனங்களில் ஒன்றாகும்.
காலபைரவர் காவல் தெய்வமானதால் பிற பைரவர்கள் இருக்குமிடம் தேடிச் சென்று வணங்க முடியாதவர்கள் காலபைரவரை வணங்கி நல்லருள் பெறுதல் சிறப்பாகும்.
கால பைரவர் பாபம் தீர்ப்பவர் இவர் சிவாம்ஸ அதிகாரம் நிறைந்த நிலையில் இருப்பதால் மிக முக்கியமாகப் போற்றப்படுகிறார்.
காசியில் ஈசன் விஸ்வநாதராகவும், இறைவி அன்னபூரணியாகவும் விளங்கி பக்தர்கட்கு அருள் பாலிப்பதோடு காலபைரவருக்கே ஆளுமைப் பொறுப்பு பரம்பொருளால் தரப்பட்டுள்ளதால் அவரே முழுமை பெற்ற அதிகாரியாக விளங்குவதால் அவருடைய அருள் பெற்றுவரல் அதிமுக்கிய நிலையாக விளங்குகிறது.
பல பிறவிகளில் நாம் செய்த பாபங்கள் நீங்க காலபைரவரை தரிசனம் செய்வது சிறப்பாகும். காசிக்குச் சென்று காலபைரவநாதரை வழிபாடு செய்ய முடியாதவர்கள், சிவன் கோவில்களில் உள்ள பைரவரை வணங்கி, மன ஒருமைப்பாட்டுடன் வழிபட்டால் காசி காலபைரவர் அனுக்கிரகம் தானே வந்து சேரும். தீவினைகள் மாறும்.
இராமாயணத்தில் இராமேஸ்வரத்தில் சீதாராமர் சிவலிங்க பூஜை செய்ய அனுமன் காசிக்குச் சென்று லிங்கம் கொணரச் சொல்லவும், அனுமன் காசிக்குச் சென்று அங்குள்ள லிங்கங்களில் சுயம்பு லிங்கம் எதுவெனத் தேடியபோது, உதவுமுகமாக பல்லி ஒன்று லிங்கத்தின் மேலிருந்து ஒலி எழுப்ப, அதனைக் கண்டு அதனையும், அதன் பக்கத்திலிருந்த சகஸ்ரலிங்கத்தில் பல்லி இருக்கக் கண்டு அதனையும் எடுத்துக் கொண்டு புறப்படும்போது கருடன் வட்டமிட்டு ஆசிகூற, காலபைரவர் கண்டு ஆஞ்சனேயருடன் சண்டை ஏற்பட்டது. தேவர்கள் காலபைரவரிடம் விவரங்களைக் கூறி அனுமனை லிங்கங்களுடன் செல்ல அனுமதித்ததாக புராண வாயிலாக அறிகிறோம்.
அனுமன் லிங்கம் கொணரத் தாமதமாகியதால் சீதாபிராட்டி பிடித்த மணல் லிங்கத்திற்குப் பூஜை செய்தார்கள். அனுமன் தான் கொணர்ந்த லிங்கத்தை வைத்து பூஜை செய்யக் கோரியதன் பேரில் மணலில் நிறுவிய லிங்கத்தை தன் வாலால் எடுக்க முயன்றார் அனுமன். முடியாத நிலையில் அனுமனுக்கு கர்வ பங்கம் நீங்கியது.
சீதாராமர் பூஜித்த லிங்கச் சந்நிதிக்கு அருகில் அனுமன் கொண்டு வந்த லிங்கச் சந்நிதி உள்ளது. தவிர அனுமன் சந்நிதிக்குள், அவர் கொண்டு வந்த சகஸ்ரலிங்கமும் அவர் தினமும் வணங்கிட உள்ளது.
காசியில் சுயம்பு லிங்கம் உள்ளதைச் சுட்டிக்காட்டிய கருடன் நகருக்குள் பறப்பதில்லை. பல்லியின் ஒலியும் காசியில் ஒலிக்காது. பூ ஒன்று லிங்கத்தின் அருகே இருந்ததால், பசு ஒன்று கொம்பினை ஆட்டியதால் எளிதில் அனுமன் அடையாளம் கண்டு தூக்கி வரமுடிந்தது.
தேவர்கள் பைரவரை சமாதானப் படுத்திய காரணத்தால் காலபைரவர் அனுமதித்தார். ஆனாலும் தன் காவலை மீறி, அனுமதியின்றி வந்த அனுமனுக்கு தன் அனுமதியின்றி உதவியதால் “கருடன் காசி எல்லை வரை வந்தாலும் ஊருக்குள் பறக்க முடியாது. பல்லிச் சத்தம் ஒலிக்காது. மாடுகள் முட்டாது. பூக்கள் மணக்காது.” என்று காசி நகருக்குள் உள்ள இச்செயல்கள் கால பைரவரின் ஆணையினால் ஏற்பட்டவை.
இவற்றின் மூலம் இராமாயண நிகழ்வின் உண்மையும், காலபைரவர் ஆணையால் நிகழும் செயல்களும் நமக்கு ஞானம் உணர்த்தும் வழிகளாகும்.
காசிக்கும் தெய்வமாக, காவல் தெய்வமாக சிவாம்ச நிலையாக உள்ள கால பைரவரைத் தொழுவது சாலச்சிறந்தது.
“தனம் பொலிமலரோன் ஆதி
வானவர் தாழ்ந்து போற்ற
உளம் பொலி காசி மேவும்
உயிர்கள் செய் பாபமெல்லாம்
களம் பொலியாது தண்டம்
கண்டாலி பொழிந்து முந்தி
வளம் பொலி வகை செய் கால
பைரவர்க் கன்பு செய்வாம்.”
வானவர் தாழ்ந்து போற்ற
உளம் பொலி காசி மேவும்
உயிர்கள் செய் பாபமெல்லாம்
களம் பொலியாது தண்டம்
கண்டாலி பொழிந்து முந்தி
வளம் பொலி வகை செய் கால
பைரவர்க் கன்பு செய்வாம்.”
பைரவரைப் பணிந்து பற்பல நன்மை பெற்று பாரினில் சிறப்புற்று பக்தியில் நிலைப்போம்.
பைரவரை வழிபட நவகிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் துன்பங்கள் நீக்கப்படுகின்றன. பற்பல நன்மை கிட்டும். வழக்குகளில் வெற்றிக்கும் வழிகாட்டும். பைரவரை தேய்பிறை அட்டமி நாளில் வழிபட்டால் நன்மைகள் நாடிவந்து நலமாக்கும் என்பது முன்னோர் கூறிய மதுரமொழியாகும்.
சிவன் கோவில்களில் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்குத் திக்கில் காலபைரவர் நின்ற திருக்கோலத்தில் இருப்பதைக் காணமுடியும். தினமும் இரவில் பூஜை முடிந்ததும் சந்நிதியை மூடித்தாளிட்டு சாவியைக் காலபைரவர் காலடியில் வைத்து கோவில் நடை சாத்தப்படும். மறுநாள் காலை கோவில் திறந்ததும் காலபைரவரை பூஜித்து சந்நிதியைத் திறப்பது சிவாலய முறையாகும்.
துக்கத்திற்குக் காரணமான பாபங்கள் நீக்கும் ருத்ரர், காலபைரவராகக் காட்சி தருவதை மனத்தில் இருத்தி மகிழ்வுற காலபைரவரைப் பணிவோம்.
நன்றி !!! பண்டித கே. சுப்புலட்சுமி எம்.ஏ.
No comments:
Post a Comment