கும்பகோணத்தின் புறநகர்ப் பகுதியாக இன்று மாறி இருக்கும் பட்டீஸ்வரம்
கும்பகோணம் நகரில் இருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் உள்ளது. திருவலஞ்சுழியும்,
ஸ்வாமிமலையும் போய் விட்டுத் திரும்பும் வழியில் சற்றுத் தென்மேற்கே வந்து
பட்டீஸ்வரம் போனோம். காமதேனுவும் அதன் மகள்களான நந்தினியும், பட்டியும் பூஜித்த
தலம். அதுவும் பட்டி தன் பாலைப் பொழிந்து பூஜித்த காரணத்தால் அவள் பெயரிலேயே
"பட்டீஸ்வரம்" என்ற பெயர் கொண்டது. வடமொழியில் தேனுபுரம் என்ற பெயர் கொண்ட
இந்தக் கோயிலின் சுயம்பு லிங்கம் ஆன மூலவர் "தேனுபுரீஸ்வரர்" என்று அழைக்கப்
படுகிறார். மார்க்கண்டேயர் பூஜித்த தலமும் கூட. அன்னை ஞானாம்பிகை. வசிஷ்டர்
விஸ்வாமித்திரருக்குப் "பிரம்ம ரிஷி"ப் பட்டம் கொடுத்த தலம். மேலும் "திருச்
சத்தி முற்றத்தில்" இருந்து வந்த ஞான சம்மந்தப் பெருமானுக்கு இந்தக் கோயில்
தேனுபுரீஸ்வரர் ஞானசம்மந்தரை வெயிலின் கொடுமை தாக்காமல் இருக்க முத்துப் பந்தல்
அனுப்பி வைத்து இருக்கிறார். ஞானசம்மந்தர் முத்துப் பந்தலில் வரும் அழகைத் தன்
கண்ணால் காண வேண்டி நந்தியை விலகி இருக்கும்படித் தேனுபுரீஸ்வரர் பணித்தாராம்.
திருக்கோயிலின் ஐந்து நந்திகளுமே "சற்றே விலகி இருக்கும் பிள்ளை" களாக
இருக்கின்றன. ராமேஸ்வரத்தில் ராமநாதரைப் பிரதிஷ்டை செய்த ராமர் இங்கும் வந்து
வில்முனையால் கோடிதீர்த்தத்தை உண்டாக்கி வழிபட்டதாக வரலாறு.
உயர்ந்த பாணமான மூலவரையும், அம்மனையும் நிதானமாகத் தரிசனம் செய்ய முடிகிறது.
காரணம் கூட்டம் எல்லாம் துர்க்கை சன்னதியில்தான். திருப்பணி செய்த கோவிந்த
தீட்சிதர் சிலையையும் காட்டுகிறார்கள். ஸ்வாமி சன்னதிப் பிரஹாரத்தில் உள்ள
பைரவர் சன்னதியின் பைரவர் நிஜமாகவே ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கிறார். கண்ணையும்
கருத்தையும் கவரும் அழகு வாய்ந்த சிற்பம். மற்றக் கோவில்களில் சிறு சிற்பமாகக்
காணப்படும் காவல் தெய்வமான பைரவர் இங்கே நிஜமான ஒரு ஆள் போல இருக்கிறார்.
அந்தச் சன்னிதியின் குருக்கள் எங்களைக் கூப்பிட்டுத் தரிசனம் செய்து வைத்தார்.
வடக்குக் கோபுர வாயிலில் துர்க்கை அம்மன் அருள் பாலிக்கிறாள். இவளும் அண்ணாந்து
பார்க்கும் உயரம் கொண்டிருக்கிறாள். பக்தர்கள் கூட்டம் எல்லாம் இங்குதான்.
தற்சமயம் கோவிலின் நுழைவாயிலே வடக்குக் கோபுர வாயிலாக மாறி
விட்டிருக்கிறது.எட்டுக்கைகளுடன் அருள் பாலிக்கும் அன்னை வேண்டியவர்களுக்கு
வேண்டியதை அள்ளித் தருகிறாள். அதனால்தான் கூட்டம் தாங்கவில்லை என்கிறார்கள்.
இங்கிருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே "சத்தி முற்றம்" உள்ளது. உண்மையில்
திருஞானசம்மந்தர் முதலில் இங்கே வந்துவிட்டுத்தான் தேனுபுரீஸ்வரர் அனுப்பிய
முத்துப்பந்தலில் "பட்டீஸ்வரம்" சென்றிருக்கிறார். முத்துப்பந்தல் விழா ஆனி
மாதம் நடைபெற்றிருக்கிறது. திருநாவுக்கரசர் இங்கே வந்துவிட்டு தழுவக்
கொழுந்தீஸ்வரரை வணங்கிச் சென்ற பின் தான் திருநல்லூர் சென்று திருவடி தீட்சை
பெற்றிருக்கிறார்.மனைவியைப் பிரிந்து பாண்டிய நாடு சென்ற புலவர் ஒருவர்
நாரையின் மூலம் தூது விட்ட
"நாராய்! நாராய்!, செங்கால் நாராய்!" என்ற பாடலை எழுதிய சத்திமுற்றப்புலவர்
இந்த ஊர்தான்.
வேத ஆகமங்களின் பொருள் தெரிய ஆசை கொண்ட அன்னை அண்ணலை வேண்ட அண்ணலும்
கூறுகிறார். தன் பக்தியின் மூலம் உலகத்தோர்க்கு "பக்தியே முக்திக்கு வித்து" என
உணர்த்த எண்ணிய அன்னை சக்தி வனம் வந்து ஒற்றைக்காலில் கடுந்தவம் செய்கிறாள்.
அன்னையின் தவத்தையும், பக்தியையும் உலகத்தோர்க்கு உணர்த்த எண்ணிய அண்ணல்
அன்னையைச் சோதிக்க எண்ணி அனல் பிழம்பாக வருகிறார். ஞானாம்பிகையான அன்னை தன்
ஞானத்தால் வந்தது தன் பதியே என உணர்ந்து அந்தப் பரஞ்சோதியை, எல்லை இல்லாப்
பரம்பொருளைத் தன் கைகளால் கட்டிக் குழைய அண்ணல் அன்னைக்கு அருள் பாலிக்கிறார்.
அன்னை கட்டித் தழுவிய நிலையிலேயே ஒரு தனி சன்னதி மூலவருக்கு இடப்பக்கம் உள்ளது.
அதன் பின்னாலேயே அன்னை ஒற்றைக் காலில் தவம் இருந்த கோலத்தையும் கண்டு
களிக்கலாம். மூலவர் கருவறையில் "சிவக்கொழுந்தீஸ்வரர்" ஆக அருள் பாலிக்கிறார்.
திருமேனியில், தீச்சுடர்கள் தெரிகின்றன. தெரியாதவர்கள் குருக்களிடம் கேட்டால்
தீப ஆராதனை செய்து காட்டுகிறார். ஆனால் நன்றாகப் பார்க்கும் வண்ணம் மூன்று
சுடர்கள் புடைத்துத் தெரிகின்றன. அன்னை பெரியநாயகியாகத் தெற்கு நோக்கி அருள்
பாலிக்கிறாள்.
திருமணம் ஆகாதவர்களும், விதிவசத்தால் பிரிந்து போன தம்பதியரும் தழுவக்குழைந்த
அன்னைக்கும் , ஈசனுக்கும் சிறப்பு.
No comments:
Post a Comment