Sunday, November 27, 2011

அஷ்ட பைரவ தரிசனம்!


பைரவரை முழுமுதலாகக் கொண்ட சமயம்- பைரவம். தவிர, காபாலிகர்களும் பாசுபதர்களும்கூட ஸ்ரீபைரவரைச் சிறப்பாக வழிபடுகின்றனர். ஸ்ரீபைரவரை சூரிய சமயத்தவர் (சௌமாரம்) மார்த் தாண்ட பைரவராகவும், முருகன் ஆலயத்தில் குமார பைரவராகவும், விநாயகர் கோயிலில் பிரமோத பைரவராகவும் வழிபடுவர்.

சிவனாரின் வீரச்செயல்கள் எட்டாகும். அதேபோல், அவரது வீரவெளிப்பாடாக விளங்கும் பைரவரும்... அஜிதாங்கன், ருரு, சண்டன், உன்மத்தன், கபாலன், பீஷ்ணன், க்ரோதன் மற்றும் சம்ஹார பைரவர் என எட்டு திருவடிவங்களுடன் அருள்கிறார். இவர்கள் எண்மருக்கும் தேவியராகத் திகழும்... பிராம்மஹி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி, சண்டிகை ஆகியோர் அஷ்ட மாதர்களாகப் போற்றப்படுகின்றனர்.

புண்ணியமிகு காசியில்... அனுமன் காட்டில்- ருரு பைரவரும்; துர்காமந்திரில்- ஸ்ரீசண்ட பைரவரும்; விருத்தகாளேசுவரர் ஆலயத்தில் அமிர்த குண்டத்தின் முன்புறம்- ஸ்ரீஅஜிதாங்க பைரவரும்; லட் பைரவர் கோயிலில்- ஸ்ரீகபால பைரவரும், காமாச்சா எனும் இடத்தில்- ஸ்ரீவடுக பைரவர் எனும் பெயரில் ஸ்ரீகுரோதன பைரவரும், தேவரா கிராமத்தில்- ஸ்ரீஉன்மத்த பைரவரும்; திரிலோசன கஞ்ச் (பாட்டன் தர்வாஜாவுக்கு அருகில்) ஸ்ரீசம்ஹார பைரவரும்; காசிபுரா எனும் இடத்தில்- ஸ்ரீபீஷண பைரவரும் அருள்பாலிக்கின்றனர்!

சீர்காழி, ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயத் தின் (தெற்கு) வெளிப் பிராகாரத்தில் உள்ள வலம்புரி மண்டபத்தில் சுதந்திரர், சுயேச்சர், லோகர், காலர், உக்ரர், பிரச்யர், நிர்மாணர், பீஷ்ணர் ஆகிய அஷ்ட பைரவர்களைத் தரிசிக்கலாம். குற்றாலம் சித்திர சபையில் அஷ்ட பைரவரின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

நகரத்தார் சீமையிலுள்ள... திருப்பத்தூர், பிள்ளையார்பட்டியை அடுத்துள்ள வைரவன் பட்டி, அழகாபுரி, பெருச்சிக் கோயில், திருமெய்ஞானபுரம் வைரவன்பட்டி, காரையூர், நெடுமரம், இலுப்பைகுடி என்ற எட்டும் அஷ்ட பைரவ தலங்களாகப் போற்றப்படுகின்றன.

நன்றி ! சக்தி விகடன் 

No comments: