Tuesday, April 24, 2012

பைரவரின் பெருமைகள் 


பைரவர் ஈசனின் பல்வேறு வடிவங்களில் மிக முக்கியமானவர். இவரே கோயில்களின் பாதுகாப்புக்கும் உரிய கடவுள் ஆவார். ஈசன் கோயில்களை பைரவரே காத்து வருவதாக ஐதீகம். முன்காலங்களில் கோயில்களைப் பூட்டிச் சாவியை வெளிப் பிராஹாரத்தில் காணப்படும் பைரவர் சந்நிதியில் வைத்துவிடுவார்களாம். பைரவர் தன் வாகனம் ஆன நாயுடன் கோயிலைச் சுற்றி உலா வந்து கொண்டிருப்பார் என்றும் பலர் கண்களிலும் பட்டிருக்கிறார் என்றும் கூறுவார்கள். சிதம்பரத்தில் பைரவர் தனம் தருபவராக இருந்திருக்கிறார். தில்லை வாழ் அந்தணர்கள் தங்கள் பிழைப்புக்குப் பணமோ, பொருளோ இல்லாமல் வருந்த ஈசன் பைரவருக்கு ஆணை யிட ஒவ்வொரு நாளும் இரவில் பைரவர் பொற்காசுகளை நடராஜர் சந்நிதியில் வைத்து விடுவார் என்றும் அதைக் காலையில் அன்றாட வழிபாட்டுக்கு வரும் தீக்ஷிதர்கள் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்வார்கள் என்றும் சிதம்பரம் வாழ் தீக்ஷிதர்கள் கூறுவார்கள். சிதம்பரத்தில் நடராஜர் சந்நிதிக்கு அருகேயே கீழ்ப்பக்கமாக பைரவருக்கும் தனி இடம் உண்டு. அவருக்கு அபிஷேஹமும் உண்டு. இங்கே பைரவருக்கு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் என்று பெயர். இனி பைரவர் குறித்த செய்திகளை ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாம்.

சதுர்முகன் ஆணவத் தலையினைக்
கொய்தான் சத்தோடு சித்தானான்”

என்று ஸ்வர்ணாகர்ண பைரவாஷ்டகம் கூறுகிறது. பைரவரின் அவதாரத்தின் காரணமும் சதுர்முகனின் தலையைக் கொய்வது தான். ஈசனைப் போலவே ஐந்து முகங்களுடனே இருந்தான் பிரம்மாவும். சதுர்முகனின் ஐந்து முகங்களையும் ஒரு சமயம் ஒரு சேரப்பார்த்த தேவியே ஈசனுக்கும், சதுர்முகனுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒரு கண நேரம் மயங்க சதுர்முகனின் ஆணவம் தலைக்கு ஏறியது. மதிமயங்கிய சதுர்முகன் சிவநிந்தனை செய்யத் துவங்க, அவனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டி ஈசன் அந்த ஐந்தாவது சிரத்தைத் துண்டிக்க எண்ணி பைரவரைத் தோற்றுவித்தார். வடுகனாக, (சின்னஞ்சிறு பிரம்மசாரியை வடு என்பார்கள்) சிவந்த நிறத்துடனும், ஜூவாலை வீசும் ஜடாமுடிகளுடனும், அந்த சிவந்த ஜடாமுடியில் குளிர் நிலவான சந்திரப் பிறையுடனும், கைகளில் உடுக்கை, சூலம், ஏந்தியவண்ணம், பாசக்கயிற்றையும் ஏந்திய வண்ணம் தோன்றிய பைரவர் பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கொய்து எடுக்க அதுவும் அவர் கரங்களில் தங்கலாயிற்று. நான்கு வேதங்களும் நான்கு நாய்களாக மாறி வாகனமாக மாற, மூன்று கண்களோடும், இவ்வுலகையும், மற்றும் அனைவரையும் காப்பாற்றும் க்ஷேத்திர பாலகராய், பூத, பிசாசுக்கூட்டங்களுக்கும் தலைவனாய்த் தோன்றினார் பைரவர். இவரை வடுக பைரவர் என்பார்கள்.

இந்தக் கதையை பிரம்மாவும், விஷ்ணுவும் அடிமுடி தேடிய கதையோடும் சம்பந்தப்படுத்தி, அதிலே பிரம்மா பொய்யுரைத்ததால் பிரம்மாவின் சிரத்தை அறுக்குமாறு கட்டளையிட்டதாயும் ஒரு கூற்று உண்டு. எப்படி இருந்தாலும் பிரம்மாவின் ஆணவத்தை அடக்கி ஒடுக்கத் தோன்றியவரே பைரவர். இந்த நிகழ்வு நடந்த இடம் திருக்கண்டியூர் என்பார்கள். ஈசனின் அட்ட வீரட்டானத் தலங்களில் முதன்மையான வீரமும் இதுவே. முதன்மையான வீரட்டானத் தலமும் இதுவே. பிரம்மாவின் சிரத்தைக் கொய்த பைரவருக்கு இங்கே தனிச் சந்நிதி இருப்பதாய்க் கேள்விப் படுகிறோம். பிரம்மாவின் சிரத்தைக் கொய்தவண்ணம் காணப்படும் சிற்ப அதிசயம் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் உள்ளதாயும் கேள்விப் படுகிறோம். இதிலே பிரம்மா தன் ஐந்தாவது தலையை இழந்துவிட்டு அந்த பயத்துடனேயே நிற்பது போல் காட்சி அளிக்கிறார் என்றும் தெரிய வருகிறது. கொஞ்சம் கோபத்துடன் பைரவர் காணப்படுவார். இவ்வுலகைக்காக்கும் பொறுப்பை ஈசன் பைரவருக்கு அளித்திருப்பதாயும், இரவெல்லாம் தன் வாகனமும், தோழனுமான நாயுடன் பைரவர் சுற்றி வந்து காவல் புரிவதாயும் ஐதீகம்.

பைரவர் என்றாலே பயங்கரமான ஆள் என்றே அர்த்தம். பாதுகாவலர் என்பதால் பெண்கள் இவரை வழிபட்டால் பெண்களுக்குப் பாதுகாவலாக இருந்து காத்துவருவார். வைரம் எப்படி உறுதியாக இருக்கிறதோ அவ்வாறே இவரும் உறுதியாகத் தன் காவல் வேலையைச் செய்து வருவதால் சில இடங்களில் இவர் வைரவர் எனவும் அழைக்கப் படுகிறார். வைரவன் பட்டி என்ற பெயரில் ஒரு தலம் செட்டிநாட்டுப் பகுதியில் காண முடியும். சில இடங்களில் ஒரே ஒரு நாயுடனேயே காணப்படுவார். சிவன் கோயில்களின் வெளிபிரஹாரத்திலேயே குடி கொண்டிருக்கும் வைரவர் என்னும் பைரவரின் சந்நிதியில் கோயிலைப் பூட்டிச் சாவியை வைத்துவிடுவார் என்றும் மறுநாள் காலை வரை சாவி அந்த இடத்திலெயே இருக்கும் என்று செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.

இந்தியாவில் பைரவ வழிபாடு பிரபலமான ஒன்று என்றாலும் ராஜஸ்தானிலும், நேபாளத்திலும், காசியிலும் மிகச் சிறப்பாக வழிபடுகின்றனர். பெளத்தர்களுக்கும் பைரவ வழிபாடு உண்டு என்றும் ஒரு செய்தி தெரிவிக்கிறது. இது குறித்த உறுதியான தகவல் இல்லை. பைரவரை எட்டு விதமாக வழிபடுகின்றனர்.
கால பைரவர்
அஸிதாங்க பைரவர்
சம்ஹார பைரவர்
ருரு பைரவர்
க்ரோத பைரவர்
கபால பைரவர்
ருத்ர பைரவர்
உன்மத்த பைரவர்

கால பைரவர் தான் சனி பகவானின் குரு என்றும் கருதப்படுகிறார். சிங்களத்திலும் பைரவ வழிபாடு உண்டு. சொத்துக்களைப்பாதுகாப்பவராய்க் கருதப் படுகிறார். தமிழ்நாட்டிலோ வைரவர் என்ற பெயரில் எட்டுத் திக்கையும் காக்கும் கிராம தேவதையின் உருவிலோ, அல்லது வைரவர் என்ற பெயரிலோ வணங்கப் படுகிறார். சிவ வழிபாட்டின் அகோர வழிபாடு என்னும் பிரிவில் பைரவர் முக்கியமான அங்கம் வகிக்கிறார்.

பைரவர்களின் எட்டு வடிவங்களும், அவருக்கு ஏற்ற பெண் தெய்வங்களும்.
அஷ்டாங்க பைரவர்- பிராம்மி
ருரு பைரவர்- மாஹேஸ்வரி
சந்த பைரவர்- கெளமாரி
க்ரோத பைரவர்- வைஷ்ணவி
உன்மத்த பைரவர்- வாராஹி
கபால பைரவர்-நாரசிம்ஹி
பீஷண பைரவர்- சாமுண்டி
சம்ஹார பைரவர்- சண்டிகா
எட்டு பைரவர்களையும் இயற்கையின் எட்டு சக்திகளாய்க் குறிப்பிடப் படுவது உண்டு. அவை மண், விண், காற்று, நீர், நெருப்பு, சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா. இவர்களில் காசியில் இருப்பவரைக் காலபைரவர் என்று அழைப்பார்கள். ஆனாலும் காசியில் அஷ்ட பைரவர்களுக்கும் எட்டு இடங்களில் சந்நிதி இருப்பதாகவும், தீவிர சிவ பக்தர்கள் இந்த இடங்களுக்கு “அஷ்ட பைரவ யாத்திரை” செல்வதாகவும் அறிகிறோம். சீர்காழியிலும் தோணியப்பர் சந்நிதியின் வெளிப் பிரகாரத்தின் தென்பகுதியில் அஷ்ட பைரவர்களைக் காண முடியும். தமிழ் நாட்டிலும் அஷ்ட பைரவத் தலங்கள் உள்ளன. அவை செட்டிநாடு என அழைக்கப் படும் காரைக்குடிப் பக்கம் திருப்பத்தூர், அழகாபுரி, வைரவன்பட்டி, பெருஞ்சிக்கோயில், திருமெய்ஞானபுரம், காரையூர், நெடுமரம், இலுப்பைக்குடி ஆகிய இடங்கள் அஷ்ட பைரவத் தலமாகப் போற்றப் படுகிறது. ஆந்திராவின் தேவார வைப்புத்தலமான ராமகிரியில் விஜய பைரவர் என்ற பெயரில் தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய பைரவர் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதாயும் அறிகிறோம். அங்கே பைரவரின் பீடத்தின் கீழே பைரவ சக்கரமும் ஸ்தாபித்திருப்பதாய் அறிகிறோம்.

தமிழ்நாட்டில் பைரவ வழிபாடு மிகவும் பிரசித்தியாக இருந்தது என்பதற்கு அடையாளமாக, நாயன்மார்களில் முக்கியமானவரான சிறுத்தொண்ட நாயனார், பைரவ சமயத்தைச் சார்ந்திருப்பதை வைத்து அறிகிறோம். மேலும் இயற்பகை நாயனாரும் பைரவ சமயம் என்றும் ஈசன் இவர்களை எல்லாம் பைரவ வடிவிலேயே காட்சி கொடுத்து அருளியதாகவும் அறிகிறோம். வடுகர், க்ஷேத்திரபாலகர் போன்ற பெயர்களும் பைரவருக்கு உரியது. பழைய தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே க்ஷேத்திரபாலபுரம் என்ற பெயரில் பைரவருக்குத் தனியாகக் கோயில் உள்ளது. சீர்காழிக் கோயிலில் கட்டுமலையில் தோணியப்பர் சந்நிதிக்கு மேலே உள்ள தென்கோடி விமானத்தின் தேவர் வடுகநாதர், சட்டைநாதர் என்றெல்லாம் வழங்கப் படும் பைரவரே ஆவார். ஆண் மகன் தன் குழந்தைப் பருவத்தைக்கடந்து வாலிபப் பருவத்தை எய்தும் முன்னர் இருக்கும் நிலையே வடுகன் எனப்படும். அந்தக் கோலத்திலேயே இருப்பதால் இவருக்கு வடுகநாதர் என்று பெயர்.

இந்த வடுகநாதர் அத்திமரத்தால் ஆனவர் என்பதால் அவருக்கு அபிஷேஹம் கிடையாது. புனுகு சார்த்துவார்கள். இவருக்குப் பூஜையும் இரவு நேரத்திலேயே நடைபெறும். பெண்கள் தலையில் மலர் சூடிக்கொண்டு இவரைத் தரிசிப்பதைத் தவிர்க்கச் சொல்லுவார்கள். வெள்ளிக்கிழமைகளில் நள்ளிரவு நேரத்தில் வடுக நாதருக்குப் புனுகு சார்த்தி, நெய்யில் வடைமாலை சாற்றி, முழுத்தேங்காயை நிவேதனம் செய்தல் சிறப்பாகச் சொல்லப் படும். மேற்கண்ட எட்டு பைரவர்களைத் தவிர ஸ்வர்ணாகர்ஷண பைரவர் அனைவரிலும் சிறப்பாக வழிபடுபவர். சிதம்பரம் கோயிலில் நடராஜருக்கும் சிவகாம சுந்தரிக்கும் இடப்பக்கம் இருக்கும் விக்கிரஹங்களில் சந்திரசேகரருக்கு அடுத்து ஸ்வர்ணாகர்ஷண பைரவர் இடம் பெற்றிருப்பார். ஒரு காலத்தில் இவரே தில்லை வாழ் அந்தணர்களின் பொருளாதாரத்தின் ஆதாரமாக இருந்ததாகச் சொல்கின்றனர். தினசரி காலை சந்நிதி திறக்கையில் அங்கே ஓர் ஓலைச்சுவடியில் பொற்காசுகள் வைக்கப் பட்டிருக்கும் எனவும், அதை தீக்ஷிதர்கள் தங்களுக்குள் குடும்பத் தேவைக்கு ஏற்பப் பிரித்துக்கொள்வார்கள் எனவும் கூறுகின்றனர். இன்றும் பணக் கஷ்டம் ஏற்பட்டால் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு அபிஷேஹ, ஆராதனைகள் செய்தல் கடைப்பிடிக்கப்படுகிறது. திருமணம் நிறைவேற வேண்டியும் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்குத் தேய்பிறை அஷ்டமியில் அர்ச்சனை, அபிஷேஹம் செய்யலாம். எல்லாச் சிவன் கோயில்களிலும் தினசரி வழிபாடுகள் சூரியனில் ஆரம்பித்து இரவு பைரவரில் முடியும். என்னதான் ஈசனின் அம்சம் என்றாலும் இவரையும் ஈசனாகவே கருதுவார்கள். பைரவர் சந்நிதி கிழக்குப் பார்த்து இருப்பது நல்லதில்லை என்றும் ஐதீகம். பொதுவாக பைரவர் கோயில்களில் வடக்குப்பார்த்தே இருப்பார். தெற்குத் திசையில் சந்நிதி அமைந்திருக்கும்.

நன்றி !

No comments: