சுவர்ணம் என்றால் தங்கம் என்று பொருள். தன்னுடைய பெயரிலேயே சுவர்ணத்தைக் கொண்ட இவர் அளவற்ற கீர்த்தியையும் தனத்தையும் அள்ளி அள்ளி தருபவர். நினைத்ததையெல்லாம் தரும் கற்பக மரத்தடியில் அழகிய சிம்மாசனத்தில் சிவசக்தி வடிவில் சுந்தரரூபனாக மடியில் சுவர்ணாதேவி அமர்ந்த நிலையில் காட்சித் தருபவர் சுவர்ணாகர்சன பைரவர் ஆவார்.
“சுவர்ணாகர்சன” என்றால் “எளிதில் கவரக்கூடிய” என்று அர்த்தம். சுவர்ணாகர்சன பைரவர் என்றால் பொன்னை இழுத்துத் தருபவர், அதாவது தன்னை பயபக்தியுடன் உண்மை அன்பு கொண்டு வேண்டுபவர்களிடம் பொற்குவியலை கவர்ந்து இழுத்து தானாக சேரும்படி செய்பவர் என்று பொருளாகும்.
பண்டைக் காலங்களில் அரசர்கள் தங்கள் பொக்கிஷ சாலைகளில் பைரவப் பெருமானை நிறுவி அவருக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டு வ்நதமையினால் அவர்களது நிதிச் சாலைகளில் பொன் குவிந்து கொண்டே இருந்ததுடன் அவர்களை எவராலும் எளிதில் வெல்ல இயலாத அளவு சக்தியைப் பெற்றிருந்தனர். இதுதான் உண்மை. பைரவர் திகம்பரராய்த் திகழ்ந்த போதிலும் உண்மையான அன்பர்களுக்கு பொன்னையும் பொருளையும் வாரி வாரி வழங்குபவர்.
“ஸ்ரீதத்துவநிதி” என்னும் நூலில் சொர்ணாகர்சன பைரவர் பொன்னிறம் கொண்டவர். மஞ்சள் நிறப் பட்டாடைகளை அணிந்தவர். மூன்று கண்களும் நான்கு கரங்களும் கொண்டவர். நவரத்தின மணிகள் இழைத்த பொன்னாலான அட்சயப் பாத்திரம் ஏந்தியவர். சூலம், சாமரம், ஈட்டி ஆகியவற்றைத் தரித்தவர். அனைத்து தேவாதி தேவர்களாலும் போற்றப்படக்கூடியவர். எல்லையில்லா ஆனந்தத்திலிருப்பவர். சகல சித்திகளையும் அருள்பவர் என்றும்,
“ஸ்ரீ மஹாலட்சுமி மந்திரகோசம்” என்ற நூலில் சுவர்ணாகர்சன பைரவமூர்த்திக்கான மந்திரம், யந்திரம் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. மேலும் சுவர்ணாகர்சன பைரவர் மடியில் அமர்ந்திருக்கும் பொன் நிறமாகப் பிரகாசிக்கும் தேவியை ஸ்வர்ணா என்றும சுவர்ணபைரவி என்று அழைத்தும் சகல அணிமணிகள் பூண்ட இவள் பொன் கொட்டும் சூடம், தாமரை, அபய முத்திரை தரித்தவளாகவும் பைரவரைத் தழுவிக் கொண்டு இடது பாகத்தில் வீற்றிருப்பவளாகவும் அடியார்களுக்கு செல்வம் அனைத்தும் தருபவளாகவும் விளக்கப்பட்டுள்ளது.
ஆகம சாஸ்திர நூல்களில் சுவர்ணாகர்சன பைரவர் பற்றிக் குறிப்பிடும் போது மஞ்சள் பட்டு உடுத்தி, விலையுயர்ந்த அணிமணிகளை அணிந்து, நவரத்ன கிரீடம் சூடி, செந்நிற மேனியராய், அன்றலர்ந்த தாமரை போல் புன்னகை பூக்கும் திருமுகத்துடன், பொன்னிற முடியில் சந்திரனைச் சூடி, சுந்தரரூபனாக கரங்களில் தாமரை, பொன்மணிகள் பதித்த கங்கம், அமுதக்கும்பம், அபய, வரத முத்திரைகளுடன் பொன் பொழியும் குடந்தனை கரத்தில தாங்கி மறுகரத்தால் தம்மைத் தழுவும் ஆதிசக்தியான சர்வ சக்தி வாய்ந்த புன்முறுவர் பூத்த முகத்தினனாய் பொற்குடம் வைத்திருக்கும் சுவர்ணதா என்னும் அஜாமிளா தேவியை ஒரு புறத்துத் துழுவியவர் என்று விளிக்கிறது. சிவசக்தி வடிவில் உள்ள ஸ்ரீ சொர்ணாகர்சன பைரவரை உள்ளன்போடு வணங்கி வர சகல செளபாக்கியங்களும் தானாய் இல்லம் வந்து சேரும் என்று ஸ்ரீதேவி மாாத்மியம் கூறுகிறது.
நன்றி ! பைரவர் ஃபவுண்டேசன்