Saturday, January 29, 2011




பைரவர்

எல்லா சிவன் கோவில்களிலும் விநாயகர், முருகன் சன்னதி, அம்பாள் சன்னதி இருக்கும். அதே போன்று நவக்கரஹ சன்னதியும் காணப்படும். இன்னொரு முக்கியமான சன்னதியாக விளங்குவது பைரவர் சன்னதியாகும். அதுவும் சற்று ஒதுக்குப்புறமாக, தனியாக உள்ளடங்கியே பெரும்பாலான கோயில்களில் காணப்படும். மேலும் அந்தக் கோயில்களின் காவல் தெய்வமாக விளங்குவதே ஸ்ரீபைரவர் தான்!

ஆமாம்! யார் இந்த பைரவர்?. இவர் ஏன் காவல் தெய்வமாக வழிபடப்படுகின்றார்?. சங்க காலத்திலோ, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களிலோ ஏன் இவரைப் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. இவர் தம் வழிபாடு எப்பொழுது நம் நாட்டில் காலூன்றியது என்பது பற்றி இனிப் பார்க்கலாம்.

அநேகமாக இந்த பைரவ வழிபாடு முதன் முதலில் வட இந்தியாவில் தோன்றிப் பின்னரே இங்கு பரவியிருக்க வேண்டும். (வாதாபியிலிருந்து கணபதி வந்தது போல). அதுவும் குறிப்பாக ஆதிசங்கரரின் அவதாரத்திற்குப் பின்னரே இந்த பைரவவழிபாடு ஏற்றம் பெற்றிருக்க வேண்டும் என்பது புலனாகின்றது. அவர் தாம் முதன் முதலில் வழிபாட்டு முறைகளைப் பிரித்துஷண்மத ஸ்தாபனத்தை உருவாக்கியவர். அவற்றுள் ஒன்றான சாக்த வழிபாட்டில் உள்ளடங்கி உள்ளது தான் ஸ்ரீ பைரவ வழிபாடாகும். பைரவர் தம் பெருமையைப் புகழ்ந்துகால பைரவாஷ்டகத்தையும் அவர் பாடியுள்ளார். வேதங்களிலும், உபநிஷத்துக்களிலும் பைரவர் பற்றிய குறிப்புகள் உள்ளனவா என்பது ஆராய்ச்சிக்குரியது.

பின்னரே தமிழ்நாட்டில் இவ்வகை வழிபாடு காலூன்றியிருக்க வேண்டும். அதுவும் காபாலிகர்கள் வட இந்தியாவிலிருந்து இங்கு வந்தேறிய பின்னரே தொடங்கியிருக்க வேண்டும். (பெரும்பாலும் காபாலிகர்கள், நிர்வாணமாகத் திரிந்தவர்கள், கையில் சூலத்தை ஏந்தியவர்கள். பைரவரும் திகம்பரர். கையில் சூலாயுத்ததினை உடையவர்). முதலில் இரகசிய வழிபாடாக, குகை போன்றவற்றில் வழிபடப்பட்டுப் பின்னர் கோவில்களில் வழிபாடுதொடங்கியிருக்க வேண்டும். வட இந்தியாவில், காசியில் கால பைரவர் சன்னதி உள்ளது. இங்கு வந்து சென்று, வழிபட்டுக் கறுப்புக்கயிறு கட்டிக் கொண்டால் திருஷ்டி தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. ஆனால் பைரவருக்கென்று தனிக் கோயில்கள் எதுவும் தமிழ்நாட்டில் உள்ளதாஎன்பது தெரியவில்லை.

பைரவர் சிவனின் ஒரு அவதாரம் என்ற கருத்து உள்ளது. மகன்மை முறை உடையவர் என்ற கருத்தை கிருபானந்த வாரியார் கூட ஒரு சொற்பொழிவில் கூறியிருக்கின்றார். சிவனின் சூலத்திலிருந்து தோன்றியவர் என்றும் கூறப்படுகின்றது. மேலும் கந்த புராணம், காசி புராணம், கடம்பவனப் புராணம் போன்ற, பிற்காலத்தில் தோன்றிய புராண நூல்களிலே தான் பைரவரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. எனவே இதிலிருந்து பொதுவாக பைரவர் வழிபாடு என்பது பிற்காலத்தில் தான் தமிழ் நாட்டில் வேரூன்றியிருக்க வேண்டும் என்ற முடிவிற்கே வர வேண்டியுள்ளது.

முதல் பைரவர்:

பைரவ மூர்த்தங்களில் மொத்தம் 108 வகைகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. அவற்றில் முதன்மையானதும், மூலமானதாகவும் விளங்குவது ஆதி பைரவராகும்.

இவர் எழுந்தருளியுள்ள தலம் திருப்பத்தூர்திருத்தளி நாதர் ஆலயம் ஆகும். இத்தலம்காரைக்குடி திருப்பத்தூர் மார்க்கத்தில், பிள்ளையார்பட்டி, குன்றக்குடிக்கு வெகு அருகே உள்ளது. இத்தலம் பல சிறப்புகள் வாய்ந்த தலமாகும். (இத்தலத்தின் சிறப்புகள் பற்றித் தனியாகப் பின்னர் எழுதுகிறேன்). இத்தலத்தின் ஒரு புறத்தில் தனிச்சன்னதியில் இந்த பைரவர் காணப்படுகின்றார்.

இவர் சிறப்புகள்:

உலகில் தோன்றிய முதல் பைரவர் இவர் தான் என இந்த ஆலயக் குறிப்பு கூறுகின்றது. அதானால் இவர் 'ஆதி பைரவர்' என அழைக்கப்படுகின்றார். பொதுவாக பைரவர், பெரும்பாலான இடங்களில், கையில் சூலத்துடன், நாய் வாகனத்துடன், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே ஐதீகம். ஆனால் இங்கு பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில், காணப்படுகின்றார். அதனால் யோக பைரவர் என்றும் அழைக்கப்படுகின்றார். இந்திரன் மகன் ஜெயந்தனைக் காப்பதற்காக இவர் திரு அவதாரம் செய்ததாக இத் திருக்கோயில் குறிப்பு கூறுகின்றது. சஷ்டி, அஷ்டமி போன்ற நாட்களில் இவருக்கு சிறப்பு ஆராதனை, அபிசேகம், வழிபாடு, யாகங்கள் செய்யப்படுகின்றது. இவற்றில் கலந்து கொண்டாலோ அல்லது இங்கு வந்து வழிபாடு செய்து வேண்டிக் கொண்டாலோ சத்ரு பயம், ஏவல் போன்ற தொல்லைகள், வியாபாரக் கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்னைகள் நீங்குவதாக நம்பிக்கை.

இந்த பைரவர் மிக உக்ரமானவர். பொதுவாகப் பலரும் இங்கு தனியாகச் சென்று வழிபடவே அஞ்சும் அளவிற்கு மிக உக்ரமானவராக ஒரு காலத்தில் விளங்கினாராம். (காஞ்சி காமாட்சி போல) இப்பொழுதும் பலர், வழிபாடு முடிந்து பைரவர் சன்னதி மூடப்பட்டால், ஆலயத்தைச் சுற்றி வரும் பொழுது, அங்கு மட்டும் தனியாகச் சென்று வழிபட அஞ்சுவர். அந்த அளவிற்கு உக்ரமானவர். அவர் தம் உக்ரத்தைக் குறைக்க, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக, அவரை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதே இதற்குச் சான்று.

பிள்ளையார்பட்டி, குன்றக்குடி செல்லும் அன்பர்கள் அவசியம் இத் திருத்தலத்தைத் தரிசிக்கவும். திருப்பத்தூர் பேருந்து நிலையத்தின் அருகிலேயே இக்கோயில் அமைந்துள்ளது.

மொத்தம் இந்தப் பகுதியில் பைரவ வழிபாட்டின் சிறப்பைக் குறிக்குமாறு அஷ்டபைரவர்கள் காட்சி தருகின்றனர்.

அவையாவன

1. யோக பைரவர் திருத்தளி நாதர் ஆலயம் திருப்பத்தூர்

2. மெய்ஞானபைரவர் மெய்ஞான வைரவ சுவாமி ஆலயம் தி.வயிரவன்பட்டி

3. கால பைரவர் ஆண்டப்பிள்ளை நாயனார் ஆலயம் கண்டரமாணிக்கம்

4. வைரவர் ஸ்ரீவளரொளிநாதர் ஆலயம் வைரவன்பட்டி.

5. பைரவர் ஸ்ரீதிருமேனிநாதர் ஆலயம் ஒழுகமங்கலம்

6. இரட்டை பைரவர் அழகுமுனீசுவர பைரவர் அழகாபுரி

7. கால பைரவர் துருவாசபுரம்

8. வடுக பைரவர் கொடுங்குன்ற நாதர் ஆலயம் பிரான்மலை


மற்றும் கோட்டை பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர், சேத்ரபாலகர், ஸ்ரீ பிஷாடணர், பூதநாதர், கபால பைரவர், ஆபதுத்தாரணர் எனப் பல பைரவ அம்சங்கள் உள்ளன அவற்றைப் பற்றியும், சிறப்புகள், வழிபாட்டு முறைகள் பற்றியும் இனி விரிவாகப் பார்க்கலாம்.

கால பைரவர்:

மற்றொரு வரலாறும் பைரவர் பற்றிக் கூறப்படுகின்றது. சம்பாசுரனை வதம் செய்வதற்காக, சஷ்டித்திதி அன்று சிவபெருமானின் மூர்த்தமாக, கால பைரவர் அவதரித்து அவனை வதம் செய்ததாகக் கூறப்படுகின்றது. அதனால் தான் 'சம்பா சஷ்டி' என்பது பைரவருக்கான விழாவாக ஒரு ஆலயத்தில் கொண்டாடப்படுகின்றது.

அந்த ஆலயம்...

(தொடரும்...)

No comments: