Wednesday, March 28, 2012

கேட்டதையெல்லாம் தந்தருளும் வயல்வெளி                           அஷ்டபுஜ பைரவர்,வேலூர்



தமிழ்நாட்டின் வடக்கு எல்லையில் அமைந்திருக்கும் கல்வி நகரம் வேலூர் ஆகும்.இங்கு வேலூர் டூ சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் ,வேலூரிலிருந்து 3 கி.மீ.தூரம் சென்றால் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் வரும்;இந்த நீதிமன்றத்தைக் கடந்து ஒரு கி.மீ.தூரத்தில் ரங்காபுரம் என்னும் கிராமம் அமைந்திருக்கிறது.இந்த கிராமத்தின் வழியாக செங்காநத்தம் என்னும் மலையோர கிராமத்துக்கு 4 கி.மீ.தூரத்துக்குப் பயணிக்க வேண்டும்.இந்த கிராமத்திற்கு அருமையான சாலை வசதி மலைமீது கொண்டை ஊசிவளைவுகளோடு அமைக்கப்பட்டுள்ளது;இந்த கிராமத்தின் நுழைவாயிலில் வயல்வெளி வழியாக சுமார் 1 கி.மீ.தூரம் பயணித்தால்,இருப்பவரே வயல்வெளி அஷ்டபுஜ கால பைரவர் கோவில் ஆகும்.

இவருடன் வயல்வெளி முனீஸ்வரரும்,மற்ற ஆவரண தேவதைகளும் இருக்கின்றனர்.இங்கு பூசாரி கிடையாது;கோவிலுக்குப் பின்னால் வறண்ட ஓடையை ஒட்டி இருக்கும் புற்றுமண்ணே இங்கு விபூதிப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.நாமே பூஜை செய்ய வேண்டியதுதான்!!!


தினமும் ஒருமுறை வீதம் 3 நாட்கள் அல்லது வாரம் ஏதாவது ஒரு நாள் என்று 3 வாரத்துக்கு வந்து இவரை வழிபடுபவர்களுக்கு அவர்களின் கடும் சிக்கல்கள் உடனடியாகத் தீர்ந்துவிடுகின்றன;தவிர,இங்கு வரும் பெண் பக்தைகள் திடீரென பரவசமடைந்து சாமியாடுவதும் உண்டு.கேட்டவரம் எதுவாக இருந்தாலும் இவர் தருவதால்,இவரை நோக்கி படையெடுத்துவரும் பக்தர்கள்,பக்தைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

நன்றி!  ஆன்மீகக்கடல்  மற்றும் சிவனருள் சிவமயம்.

Tuesday, March 27, 2012

பைரவ மூர்த்தி



பார்க்கும் யாவரும் அச்சப்படும் "அந்தகன் என்ற பெயருடைய அசுரனொருவன் சிவபெருமானை நினைத்து, பஞ்சாக்கினி மத்தியில் தவம் செய்தான். அத்தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் பார்வதி தேவியுடன் இடப வாகனத்தில் வந்து என்னவேண்டுமென்றுக் கேட்டார். நான்முகன், விஷ்ணு இவர்களை விட பலமும், யாவரும் அழிக்கமுடியாத ஆற்றலும் வேண்டுமென்றான். உடனே தந்து மறைந்தார் சிவபெருமான். சிவபெருமான் கொடுத்த வரத்தினால், பெற்ற ஆங்காரத்தினால் இந்திரன், விஷ்ணு, நான்முகன் என அனைவரிடமும் சண்டைப் போட்டான். அவனது சண்டைக்கு முன் அனைவரும் தோல்வியுற்றனர். அவனை மிஞ்சுபவர்கள் யாருமில்லை எனவே அவனிடமே சேர்ந்து விடுவதென முடிவெடுத்து விஷ்ணு முன்செல்ல தேவகணங்ளும் பின்சென்றனர். அனைவரும் அந்தகனிடம் சரணடைந்தனர். இதனால் அந்தகன் அனைவரையும் பெண்களைப்போல் உடை, நடை, பாவனைகளில் இருக்கும்படி கட்டளையிட்டான். அதன்படியே அனைவரும் பெண்களாயினர். பெண்களானபின்பும் அவனது கொடுமைத் தொடர அனைவரும் அக்கோலத்துடன் சிவபெருமானை வழிபட்டனர். சிவபெருமான் உடன் தோன்றி அவர்களை பார்வதியின் அந்தப்புரத்துப் பெண்களுடன் இருக்கச் செய்தார். இருப்பினும் விடாமல் தொல்லைக் கொடுத்து வந்தான் அசுரன். பொறுத்துப்பார்த்த தேவகணத்தினர் கையிலை அடைந்து சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் தன்னால் தோற்றுவிக்கப்பட்ட பைரவர்க்கு ஆணையிட்டு அந்தகனை அழிக்க உத்தரவிட்டார். பைரவர்க்கும், அந்தகனுக்கும் இடையே அதிபயங்கரப் போர் நிலவியது. ஆனால் அசுரனின் சேனைகள் சுக்கிராச்சாரியால் உயிர் பெற்று வந்தன. <உடனே சிவபெருமான் சுக்கிரனை விழுங்கினார். அடுத்த நொடி அசுரசேனைகள் அழிந்தன. பைரவர் தனது சூலத்தால் அந்தகனை குத்திச் சிவபெருமானை அடைந்தார். இதனால் மனம் மாறிய அந்தகன் தனது அகங்காரமெல்லாம் மறைய சிவபெருமானிடம் தன்னை பூதகணங்களுக்கு தலைவனாக்க வேண்டினார். அவனது ஆசையை நிறைவேற்றினார். சிவபெருமானின் வயிற்றிலிருந்த சுக்கிரன் அவரது சுக்கிலத்துடன் வெளிவந்தான். பின்னர் தேவர்கள் தொல்லையின்றி நிம்மதியுடன் வாழ்ந்திருந்தனர். அந்தகனின் அகந்தையை அழிக்க சிவபெருமான் எடுத்த வடிவமே "பைரவமூர்த்தி யாகும்.

(சிவபெருமானைப் போல் ஐந்துதலையுடன் இருந்த நான்முகனின் அகந்தையை அடக்க சிவபெருமான் பைரவரை தோற்றுவித்து நான்முகனின் ஐந்தாவது தலையை கிள்ளியெடுத்தார் என்றும் புராணங்கள் கூறுகின்றன)

காசி முதல் பதினாறு பைரவர்

தேய்பிறை அஷ்டமியில் செவ்வரளியால் சகஸ்ரநாமம் தொடர்ந்து ஆறு தேய்பிறைகள் கூற புத்திரபாக்கியம் கிடைக்கும். பன்னிரெண்டு தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் சகஸ்ரநாமம் கூறி ஜென்ம நட்சத்திரர் அர்ச்சித்து பூந்தியை நைவேத்தியமாகக் கொடுக்க சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டிற்க்கு வரும். தேனாபிசேகம் செய்து நெய்விளக்கிட்டு உளுந்தவடை சாற்றி ஜென்ம நட்சத்திரத்தில் வழிபட வியாபாரம் செழிக்கும், மேலும் நாயுருவி இலை அர்ச்சனையும், சுத்த அன்னம் வெண்ணிற பசுவின் பால் கொண்டு சனிதோறும் நைவேத்தியம் கொடுக்க யமபயம் நீங்கி சுகம் உண்டாகும்.

நன்றி ! தினமலர் 

Monday, March 26, 2012

சேத்திரபால மூர்த்தி



ஆரம்பம் முடிவு இல்லாதவனும், ஆதியும் அந்தமும் கொண்டவனாகிய சிவபெருமானே பலகோடி உயிரினங்களைப் படைக்கின்ற பிரம்மனாகவும், உருத்திரனாகக் கொன்றும், மகேஸ்வரராக மறைந்தும், திருமாலாகி காத்தும், சதாசிவமூர்த்தமாகி அருள் செய்தும், இவ்வாறு மேற்கண்ட ஐந்தொழில்களையும் செய்து வருகிறார். அவர் அசைந்தால் மட்டுமே அசையும் உலகமனைத்தும் அவரது கட்டளையாகவே அனைத்துக் கோடி உயிரினங்களும், கோடிகோடியான அண்டங்களும் இயங்குகின்றது. அவரே அனைத்து மாசமுத்திரங்களையும் உருவாக்குபவர், முடிவில் அதனலேயே அழிப்பவர். தீவாந்திரங்களையும், ஈரேழு உலகத்தையும், ஆக்கவொண்ணா அண்டங்களையும் அவரே படைத்தார்,  படைக்கின்றார். அதுவொரு காலம். இந்த அண்டத்தினை ஒரு ஊழிக்காலமானது அலைகளால் மூடியது. அதில் மூழ்கியவை எட்டு பர்வத மலைகளையும் மூழ்கடித்ததுடன் அனைத்து பர்வதங்களையும் அழிக்கும்படி பெரும் வெள்ளம் தோன்றியது. அவ்வழி வெள்ளத்தில் நவகிரகங்கள் சூரிய, சந்திர, தேவர்குழாம், மகாநாகங்கள், எட்டு திசை காவலர்கள், கற்பகத்தரு, வாழ்வன, பறப்பன, ஊர்வன, மிருகங்கள், தாவரங்கள் மனிதர்கள், இந்திரன் என அனைவரும் அழிந்தனர். உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் அழிந்துப்போயின நீண்ட நாட்கள் இந்நிலையேக் காணப்பட்டது.

பின்னர் மான், மழு ஏந்தி பாம்பு, புலித்தோலாடை அணிந்து கொன்றை மலர் சூடி நீலகண்டமும், நெற்றிக் கண்ணை மறைத்து, பார்வதியுடன், ஆயர்க்கலைகளையும் அழைத்து கொண்டு ஒரு படகில் ஏறிய சிவபெருமான் . உலகை ஒளியால் நிரப்பி, இருளை இருட்டடீப்பு செய்தார். அழிவுக்கு காரணமான வருணன் அவர்களை வணங்கி தம்பதி சமேதரான இறைவனுக்கும், இறைவிக்கும் முத்து, பவளம் கொண்டு அர்ச்சித்து ஆசிவேண்டினார். சிவபெருமான் அருளாசி வழங்கினார். பின்னர் வெள்ளத்தை ஒரு நொடியில் துடைத்தெரிந்தார். பின்னர் மாண்டுவிட்ட அனைவரையும் எழுப்பி அவரவர் பணியில் அமர்த்தி அனைத்து உயிரினங்களையும் காத்தருளி ஈரேழு உலகத்திற்கும் நேர்ந்த துன்பத்தைக் கலைத்தார். அனைத்து உயிர்களுக்கும் ஊழிக்காலத்தில் ஏற்பட்ட துன்பத்தைப் போக்கி அங்கிருந்த உயிர்களை காத்ததால் அவருக்கு சேத்திரபால மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது. இவர் சேத்திரபாலபுரத்தில் உள்ளார். இவரை இடைவிடாது தரிசிக்க எதிரிகளிடமிருந்து விடுதலைக் கிடைக்கும். அரக்க குணமுடையவர்களிமிருந்து நம்மையும், நம் சொத்துக்களையும் காப்பவர் இவரே. இவரது படத்தை தொழில் நடைபெறும் இடம், வீடுகளில் வைத்து வழிபட தீயவர்கள் ஓடுவார்கள். இவர்க்கு நவமுக ருத்திராட்ச அர்ச்  னையும், இனிப்பு நைவேத்தியமும் சனிக்கிழமைகளில் கொடுக்க நம்முடைய தொழில் விருத்தியடையும்.

Wednesday, March 21, 2012


கடவுள்களில் தரிசிக்க மிகவும் அபூர்வமான தரிசனம் சிவபெருமானின் தரிசனமும்,முருகக் கடவுளின் தரினமும் ஆகும்.நாம் சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் குறிப்பிட்ட வழிபாடு செய்தால்,உரிய கடவுளின் தரிசனம் நேரடியாகக் கிடைக்கும் என்று எனது ஆன்மீக குருக்களும்,ஜோதிட வழிகாட்டிகளும் அடிக்கடி சொல்லியிருக்கிறார்கள்.ஏன் என்று கேட்டால் அதற்குரிய பதில் பூமியில் இல்லை என்பதுதான் விடை ஆகும்.
ஆறுமுகக்கடவுளுக்கு ஆறுபடைவீடு இருப்பதுபோல,சிவனின் ஒரு பகுதி படைப்பாகிய பைரவருக்கும்,எட்டுபடை வீடுகள் இருக்கின்றன என்பது ஆச்சரியம் மட்டுமல்ல;அந்த எட்டுபடை வீடுகளுக்குச் சென்று தரிசனம் செய்பவர்களுக்கு ,வாழ்க்கை முழுவதும் சிரமங்கள்,துயரங்கள்,கஷ்டங்கள்,தோல்விகள் இராது;மேலும் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் எமவாதனை இருக்காது என்பதும் பைரவ உபாசகர்,கொல்லிமலை சித்தர்,காகபுஜண்டர் ஆசிரமத்தை நிறுவியவருமாகிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ தருமலிங்கசுவாமிகள் தனது அனுபவத்தை பைரவ ரகசியம் என்னும் நூலில் வெளியிட்டிருக்கிறார்.


ஒருவன் இந்த பிறவியில் பைரவ வழிபாடு செய்கிறான் எனில்,அவன் முற்பிறவிகளில் ஏதாவது ஒரு சித்தராகவோ,துறவியாகவோ,ஞானியாகவோ பிறந்திருக்க வேண்டும்.அல்லது முற்பிறவிகளில் ஏதாவது ஒரு சித்தர் அல்லது துறவி அல்லது ஞானி அல்லது பழுத்த சிவாச்சாரியாரின் ஆன்மீக வழிகாட்டுதலோடு வாழ்ந்திருக்க வேண்டும்.குறைந்த பட்சம் முற்பிறவிகளில் ஏதாவது ஒரு பிறவியில் இவ்வாறு இருந்திருக்காமல்,இந்த பிறவியில் பைரவர் வழிபாடு,பைரவர் உபாசனை,பைரவர் கோவில் கட்டுதல் என எதுவும் செய்ய இயலாது என்பது அனுபவ உண்மையாகும்.

ஒவ்வொரு மதத்திலும் பைரவர் வழிபாடு இருக்கிறது;அது வேறு வேறு பெயர்களில் இருந்தாலும்,வழிபாட்டுமுறையில் சிறு சிறுமாற்றங்கள்  இருந்தாலும்,முடிவில் அனைத்துமதத்தினரும் பைரவர் வழிபாடு செய்துவருவதும்,பைரவர் தரிசனம் பெறுவதும் யுகயுகமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது.இன்று உலக அரசியலில் அசையாத சக்தியாக இருக்கும் மதங்களின் தலைமையகங்களில் பைரவர் வழிபாடு பல நூற்றாண்டுகளாக செய்யப்பட்டு வருவதால்தான்,அவர்கள் உலகை ஆண்டுகொண்டிருக்கின்றனர் என்று சொன்னால் நம்ப முடியுமா?நீங்கள் நம்பாவிட்டாலும்,அதுதான் உண்மை.



பைரவரின் எட்டு படைவீடுகளுக்கு அட்ட வீரட்டானங்கள் என்று பெயர்.பைரவர் வீரதீரச் செயல்கள் புரிந்த இடங்களாக இருப்பதால் இவை இந்தப் பெயர் பெற்றன.இந்த அட்ட வீரட்டானங்களுக்குச் சென்று பைரவரை முறையாக வழிபாடு செய்தால் மட்டுமே பைரவரின் திரு அருள் முழுமையாக ஒருவருக்குக் கிடைக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட பைரவ ரகசியங்களுள் ஒன்று !!!


தேவாரம் அருளிய நால்வரில் ஒருவராம் என்னப்பர் அப்பர் பெருமான் தேவாரத்தில் அட்ட வீரட்டானத்தின் பெருமையை விவரிக்கிறார்.


காவிரியின் கரைக்கண்டி வீரட்டானம்
கடவூர் வீரட்டானம்,காமருஞ்சீர் அதிகை
மேவீய வீரட்டானம்,வழுவை வீரட்டம்
வியன்பறியல் வீரட்டம்,விடையூர் திக்கிடமாம்
கோவல்நகர் வீரட்டம்,குறுக்கை வீரட்டம்
கோத்திட்டைக்குடி வீரட்டானமிரை கூறி
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே!


திருக்கண்டியூர், திருக்கடவூர்,திருவதிகை,வழுவூர்,திருப்பறியலூர்,திருக்கோவிலூர்,திருக்குறுக்கை,திருவிற்குடி ஆகிய தலங்களில் சென்று சிவலிங்கத் திருமேனியாக எழுந்தருளியிருக்கும் பைரவப் பெருமானை வழிபடும் அன்பர்களை எமன் எக்காலமும் நெருங்கிடான்.இவர்கள் சிவபெருமானுக்கு நெருக்கமானவர்கள் என எமன் இவர்களைக் கண்டு அஞ்சி வணங்கி ஒதுங்குவான்.


1.திருக்கண்டியூர்


இத்திருத்தலம் தஞ்சை திருவையாறு சாலையில் திருவையாற்றிற்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.இத்திருத்தலம் ஆதி வில்வாரண்யம் என வழங்கப்படுகிறது.
இறைவனின் திருநாமம்  பிரமசிர கண்டீஸ்வரர்.பிரம்மனின் அகந்தையை அழித்து அருள் கொடுத்த இடம்.இத் தலத்திற்கு வந்து பக்தியோடு வழிபாடு செய்தால்,மறுபிறவியில்லை;திருமணத்தடை நீக்கும் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.இந்தக் கோவிலின் சுற்றுப்பிரகாரத்தில் வடமேற்குத் திசையில் பைரவரின் தனி சன்னதி உள்ளது.
ஞாயிறு,செவ்வாய்க்கிழமைகளில் வழிபாடு செய்வது சிறப்பு.இந்த நாட்களில் இலுப்பையெண்ணெய்,புங்கெண்ணெய்,நல்லெண்ணைய் கலந்து 8 விளக்கேற்றி மூலவருக்கு அர்ச்சனை,அபிஷேக ஆராதனை செய்ய வேண்டும்.


திரு மூலப்பெருமானும்
கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையத் தடிந்திட்டுத் தானங்கியிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையைப் பரிந்திட்டு சந்தி செய்தானே(திருமந்திரம் 340)

என்று திருமந்திரத்தில் விளக்கியுள்ளார்.இதுவே நான்முகனின் தலையை கொய்த வரலாற்றோடு தொடர்புடையது ஆகும்.
சுவாதிஷ்டமாகிய சக்கரத்திலிருந்து விந்து நாதம் செய்து கொண்டிருந்த அலையும் மனமாகிய நான்முகனை(மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்ற நான்கு முகம்) ,விந்து நீக்கம் செய்வதைத் தடுத்து,சுத்தக்கினியால் இறையருளால் விந்து சக்தியை நிலைப்படுத்தி,மனதின் உலகச் செயல்களை செயல்படுமாறு செய்து குறும்பை,அகங்காரத்தை நசுக்கிக் காத்து அருள் செய்தார் பைரவர்.


2.திருக்கோவிலூர்



திருக்கோவிலூர் கோவல்நகர் வீரட்டம்,திருக்கோவிலூர் நகருக்குள்ளேயே தென்பெண்ணை நதி தீரத்தில் அமைந்துள்ளது.
இறைவனின் திருநாமம் அந்தகாசுர சம்ஹார மூர்த்தி.அன்னை சிவானந்தவல்லி என்ற பெரிய நாயகி.
ஆலயத்தில் ஈசானிய மூலையில் பைரவர் தனி சன்னிதியில் அருள் பாலிக்கிறார்.ஞாயிறு,வெள்ளி,வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்தல் சிறப்பு.
இங்குள்ள மஹாகணபதி சன்னதியில் தான் ஸ்ரீமஹா கணபதியின் வேண்டுகோளுக்கிணங்க அவ்வையார் விநாயகர் அகவலை அருளினார்.
இத்தலத்தில் அபிஷேகம் செய்தால்,நல்ல குருவின் திருவருள் முழுமையாக அமையும்.சோழச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த ராஜராஜ சோழன் பிறந்த ஊர் இது!!! ஸ்ரீராஜராஜசோழன்        ஸ்ரீகருவூரார் சித்தரின் அருளின் படி பைரவரை வணங்கி ஈடில்லாத புகழ் பெற்றார்.அவரது சாம்ராஜ்ஜியம் ஆசியா முழுவதும்,ஆஸ்திரேலியா வரையிலும் பரவியிருந்தது.

கருத்துறை அந்தகன் தன் போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ் செய்தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கை கொண்டு கொன்றானே= திருமூலரின் திருமந்திரம் 339
(மனதில் பொறாமை,காமம் முதலான தீய எண்ணங்கள் இறை வழிபாடு விடாமல் செய்து வரும்போதுதான் எழுச்சி பெறும்;அவ்வாறு எழுச்சி பெற்று நம்மை ஆன்மீக முன்னேற்றத்தைத் தடுக்கும்;இப்படி காம,பொறாமை எண்ணங்கள் தோன்றிடக் காரணம் நான் என்ற அகங்காரம் தான்!!!இந்த எண்ணங்களை முறியடிக்க நாம் பைரவரை விடாமல் தொழுதால்,மனதில் மெய்ஞான எண்ணங்களை தோற்றுவித்து,நமது மனதில் தோன்றும் தேவையில்லாத எண்ணங்களை அழித்து,நல்லெண்ணத்தால் மெய் இறைஞான நிலையை பைரவரே உருவாக்கிவிடுவார்.


3.திருவதிகை



பண்ருட்டியிலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் அமைந்துள்ள திருத்தலம் இது.இறைவனின் திருநாமம் வீரட்டானேஸ்வரர்.ஈசானிய மூலையில் இங்கு பைரவர் எழுந்தருளியுள்ளார்.திரிபுரம் எரித்த இடம் இதுவே! வித்யுமாலி,தாரகாசுரன்,கமலாக்ஷன் ஆகிய அசுரர்களை அழித்த இடம் இது.வெள்ளி,புதன் கிழமைகளில் இங்கு வழிபடுவது சிறப்பாகும்.தீராத நோய்கள் தீர இங்கு வந்து வழிபட வேண்டும்.
சுந்தரமூர்த்தி நாயனார் திருவடி தீட்சை பெற்ற இடம் இது.சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு திரும்பிய திருநாவுக்கரசரின் தீராத குன்ம வியாதியை நீக்கி தடுத்தாண்ட தலம் இது.உடல் நோய்களும்,பிறவி நோய்களும் நீங்கும் இடம் இதுவே! நமது கர்மத்தடைகளை நீக்கி,யோக மற்றும் ஞான நிலைகளை வழங்கும் திருத்தலமும் இதுவே தான்!!!


அப்பணி செஞ்சடை ஆதிபுராதனன்
முப்புரஞ்செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறிவாரே! (திருமூலரின் திருமந்திரம் 343)

காமம்(உடல் இச்சை மட்டும் காமம் அல்ல;பேராசை;பணத்தாசை;பொன்னாசையும் தான்!), கோபம்,தாபம்(நீண்ட கால ஏக்கம்) ஆகிய மும்மலங்களை(நம்மை ஆன்மீக வாழ்க்கையில் வளரவிடாமல் தடுக்கும் கழிவுகள் அனைத்தும் மலம் ஆகும்)எரித்து நமது மூலாக்கினியை ஞானக்கினியால் சேர்த்து யோக சித்தி,ஞான சித்தி அருளும் சிறப்பான திருத்தலமே இந்த திருவதிகை ஆகும்.


4.திருப்பறியலூர்


மாயவரம் திருக்கடையூர் சாலையில் 8 கி.மீ.தூரத்தில் செம்பொனார் கோவில் இருக்கிறது.இந்த செம்பொனார் கோவிலில் இருந்து 2 கி.மீ.தூரத்தில் திருப்பறியலூர் இருக்கிறது.
சுவாமியின் திருநாமம் வீரட்டேஸ்வரர்.அம்பாளின் பெயர் இளங்கொம்பனையாள். அகந்தை கொண்ட தட்சனை அழித்த இடம் இது.தட்சன் யாகம் செய்த இடமே  தற்சமயம் கோவிலின் குளமாக இருக்கிறது.இங்கு வந்து வழிபட்டால்,தீராத கடன்கள் தீரும்;பூர்வ ஜென்மங்களில் ஏற்பட்ட சாபங்கள்,தோஷங்கள்  ஆகியவற்றை நீக்கி,நல்வாழ்வு தருமிடம் இதுவே!!!


5.திருவிற்குடி



திருவாரூர் நாகூர் சாலையில் திருப்பயந்தங்குடியிலிருந்து பிரிந்து 2கி.மீ.தூரம் சென்றால் திருவிற்குடியை அடையலாம்.
மேற்கு நோக்கிய திருக்கோவிலாக இது அமைந்திருக்கிறது.இந்தக் கோவிலின் இறைவனின் திருநாமம் ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி.
திருமால் சுதர்ஸன சக்கரம் வேண்டி இறைவனுக்கு துளசியால் அர்ச்சித்து அருளையும்,சுதர்ஸன சக்கரத்தையும் பெற்றார்.எனவே,இங்கு சிவபெருமான் வடிவில் இருக்கும் பைரவருக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.இங்கு திருமால் தனது தேவியான லட்சுமியோடு இருக்கிறார்.
பெரும் வறுமை நீங்கிட அல்லது மகத்தான செல்வ வளம் வேண்டுவோர்,இங்கு 16 வெள்ளிக்கிழமைகளுக்கு வர வேண்டும்.வந்து விநாயகர்,சுவாமி,அம்பாள்,இலக்குமி,பைரவர் ஆகியோருக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்ய வேண்டும்;இதைச் செய்ய இயலாத அளவுக்கு பொருளாதாரத்தில் சாதாரண நிலையில் இருப்போர் அர்ச்சனை செய்தால் போதும்.இவ்வாறு செய்து முடித்தால், வறுமை நீங்கும்;செல்வ வளம் பெருகும்.


குழந்தைப்பாக்கியம் இல்லாதவர்கள் 27 செவ்வாய்க்கிழமைகளுக்கு மேற்கூறியவாறு வழிபாடுகள் செய்து விட்டால்,தடைகள் எதுவாக இருந்தாலும் அவை நீங்கி புத்திரபாக்கியம் பெறுவது நிச்சயம்.
திருமணமாகாதவர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு தங்கக் காசுகளை சுவாமிக்கு காணிக்கையாக வேண்டி ஒன்பது மாதங்கள்(வெள்ளி அல்லது தேய்பிறை அஷ்டமியன்று) வேண்டிக்கொள்ள ,நல்ல முறையில் திருமணம் நடக்கும்.
தொழிலில் நசிந்தோர்கள்,இலாபமில்லாதவர்கள் இங்கு பைரவருக்கு அபிஷேகங்கள் செய்துவர அற்புதமான பலன்களை அனுபவத்தில் உணரமுடியும்.நீங்கள் இவ்வாறு வழிபாடுகள் செய்து வர,நாய்கள் உங்களைத் தொடர்ந்து வருவதையும் அனுபவத்தில் காணலாம்.


எங்கும் பரந்தும் இரு நிலந்தாங்கியும்
தங்கும் படித்தவன் தாளூணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன் தலை முன்னற
அங்கு அச்சுதனை உதிரங்கொண்டானே(திருமூலரின் திருமந்திரம் 341)

6.வழுவூர்



மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 8 கி.மீ.தூரம் சென்றதும்,வலப்புறம் திரும்ப வேண்டும்.அங்கிருந்து அரை கி.மீ.தூரத்தில் இருப்பது வழுவூர் ஆகும்.
இறைவன் கிருத்திவாஸர் என்ற திருநாமத்தோடு அருள்பாலித்துவருகிறார்.


அகங்காரத்துடன் தான் என்ற அகந்தையில் இருந்த முனிவர்களின் ஆணவத்தை அழித்து,திருக்காட்சி கொடுத்து அவர்களுக்கு ஞானச் செல்வம் தந்தருளும் இடம் இது.
ஸ்ரீஐயப்பன் அவதரித்த இடமும் இதுவே!!! எத்தனையோ பேர்கள் தியானம் செய்கிறேன்;தவம் செய்கிறேன் எனக்கு எந்த முன்னேற்றமும் இல்லை என புலம்புபவர்கள்,இங்கு வருகைதந்து,இறைவனை வழிபட வேண்டும்.மாதம் ஒரு நாள் வீதம் பத்து நாட்களுக்கு இங்கிருக்கும் மூலவரின் முன்பாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்;இவ்வாறு செய்வதால்,அவர்களின் தியானம் சித்திக்கும்;கூடவே இறைவனின் திருவருட்காட்சியும்(தரிசனம்!!!) பெற்று இறைமார்க்கத்தில் முன்னேறமுடியும்.


இத்தலத்தில் அமர்ந்து தியானம் செய்து வந்தால், ‘பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்த பரிபூரண ஆனந்தமே’ என்னும் வாக்கினை அனுபவபூர்வமாக உணரலாம்.
இங்கும் ஈசான மூலையில் பைரவர் எழுந்தருளியுள்ளார்.இவருக்கு அருகிலேயே சனீஸ்வரர் அமர்ந்திருக்கிறார்.


ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்த அஷ்டமச்சனி(4 ஆம் இடத்துச்சனி),சனி திசையால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் 8 சனிக்கிழமைகளுக்கு இங்கு வர வேண்டும்;அவ்வாறு வந்து,இவரது சன்னிதியில் 8 தீபம் நல்லெண்ணெய் ஊற்றி,ஏற்ற வேண்டும்.அதன்பிறகு அபிஷேகம் ஆராதனை செய்ய வேண்டும்;முடியாதவர்கள் அர்ச்சனை செய்து வர சனிக்கிரகத்தின் பாதிப்புகள்,தொல்லைகள் நீங்கி,எல்லையில்லாத மனநிம்மதியைப் பெறலாம்.


7.திருக்குறுக்கை


மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு சாலையில் கொண்டல் என்ற இடம் வந்ததும்,பிரிந்து செல்ல வேண்டும்.அங்கிருந்து 3 கி.மீ.சென்றால் திருக்குறுக்கை வரும்.
இறைவனின் திருநாமம் வீரட்டேஸ்வரர்.இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை ஆகும்.காமனை எரித்த இடம் இதுவே!!!
தியானம் செய்பவர்கள்,இறை நெறி செல்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் சுழுமுனை கூடி,வாக்கு சித்தியும் தவ உயர்வும் பெறமுடியும்.


குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து 8 வியாழன் அல்லது 8 செவ்வாய்க்கிழமை அல்லது மாதாந்திர வியாழன் அல்லது மாதந்திர செவ்வாய்க்கிழமை என்று  8 முறை வழிபட்டு,அன்னதானம் ஒவ்வொரு தடவையும் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்தால் கண்டிப்பாக மழலைச் செல்வம் பெறுவார்கள்.


இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி இலிங்க வழியதுபோக்கி
திருந்திய காமன் செயலழித்தங்கண்
அழுந்தவ யோகங்கொறுக்கை அமர்ந்ததே(திருமூலரின் திருமந்திரம் 346)


இந்தக் கோவிலுக்கு வந்துவிட்டு,வீடு சென்றவர்களுக்கு கனவில் பைரவர் அல்லது கூட்டமாக நாய்களையோ காண்பார்கள்.ஸ்ரீபைரவரின் திருவருளுக்கு இது ஒரு சான்று ஆகும்.


8.திருக்கடவூர்



திருக்கடையூர் என்ற திருக்கடவூர் ஆதியில் வில்வாரண்யம் என்ற பெயரில் விளங்கியது.
அமிர்தகடேஸ்வரர்,அபிராமி என்ற பெயர்களில் அப்பாவும் அம்மாவும் அருள்பாலித்து வருகின்றனர்.எமனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயரைக் காத்தருளிய இடம் இதுவே!!!
இதய நோயில் வருந்துவோர்கள்,ஆயுளுக்கு கண்டமுள்ளவர்கள் இங்கு வந்து வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.அதன்பிறகு தியானம் செய்ய வேண்டும்.இவ்வாறு 8 சனிக்கிழமைகளுக்குச் செய்து வந்தால்,மரண பயம் அகன்று நீடூழி வாழலாம்.


பிரம்ம தேவருக்கு உபதேசம் செய்த இடம் இது.


மூலத்துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கி முற்காலுற்று
காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே(திருமூலரின் திருமந்திரம் 345)


இது சித்தர்கள் தவம் செய்த பூமி ஆகும்.இங்கு ஈசான மூலையில் அமர்ந்திருக்கும் பைரவரை ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம்  8 நாட்களுக்கு தவம் செய்து,வில்வம் மற்றும் செண்பகப் பூக்களால் அர்ச்சனை செய்து வந்தால்,அஷ்டமாசித்திக்குச் செல்ல நமக்கு நல்ல குருவை,சித்தரை அடையாளம் காட்டும்.இந்த ஊருக்கு 2 கி.மீ.தொலைவில் திருக்கடவூர் மயானம் என்னும் இடத்துக்குச் சென்று பிரம்மபுரீஸ்வரர்,மலர்க்குழல் மின்னம்மை தம்பதியராக இருக்கும் அருள்ஞான பெற்றோர்களை வழிபட,மெய்ஞானம் கைகூடும்.


கொன்றாய் காலனை; உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு,
மான் கன்றாருங் காவாக்கடவூர் திருவீரட்டத்துள்
என் தாதை பெருமான் எனக்கு யார் துணை நீயலதே என்பது சுந்தரரின் தேவாரப்பாடல் ஆகும்.


நன்றி:பைரவ ரகசியம்,எழுதியவர்:கொல்லிமலைச் சித்தர்,ஸ்ரீகாகபுஜண்டர் தருமலிங்க சுவாமிகள்,விலை ரூ.100/-முகவரி:காகாஸ்ரமம்,காஞ்சி சாலை,பெரியகுளம்,திருஅண்ணாமலை மாவட்டம்.செல்:9786012345.04188= 293981,252344.
ஓம்சிவசிவஓம்

நன்றி !  ஆன்மிகக்கடல் மற்றும் தினமலர் !


Friday, March 16, 2012

தாடிக்கொம்பு சௌந்தராஜ பெருமாள் கோவில்  தேய்பிறை அஷ்டமி ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் சிறப்பு பூஜை




தாடிக்கொம்பு சௌந்தராஜ பெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நடைபெற்ற ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .

திண்டுக்கல் அடுத்துள்ள தாடிக்கொம்பு சௌந்தராஜ பெருமாள் கோவிலில் ஒவொருமாதமும் தேய்பிறை அஷ்டமியின் முதல் நாள் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் சிறப்பு பூஜை ஐந்து கால பூஜையாக நடத்தப்பட்டு வருகிறது .

இதன் தொடர்ச்சியாக இம்மாத சிறப்பு பூஜை 15.03.2012 அன்று நடந்தது.  இதில்  கலந்து கொண்ட பக்தர்களால் வழங்கப்பட்ட அபிஷேக பொருட்களை கொண்டு பால் அபிஷேகம் , தேன் அபிஷேகம் , சந்தன அபிஷேகம் , மஞ்சள் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது .

ராஜ அலங்காரம்

இதன் பின்னர் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவரவருக்கு  பக்தர்களால் வழங்கப்பட்ட மலர் மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது .  இதன் பின்னர் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளினார் .

சிறப்பு பூஜையில் ஏராளமான தொழில் அதிபர்கள் , முக்கிய பிரமுகர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் தரிசித்து சென்றனர் .


நன்றி!



Wednesday, March 14, 2012


ஒவ்வொரு தமிழ் மாத அஷ்டமியும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில் பைரவரை வழிபாட்டால் எல்லா நலமும் பெற்று வாழலாம். பைரவர் மிக சக்தி வாய்ந்தவர்.

அஷ்டமி விபரம்

சித்திரை: - சநாதனாஷ்டமி

வைகாசி: - சதசிவாஷ்டமி

ஆணி: - பகவதாஷ்டமி

ஆடி: - நீலகண்டாஷ்டமி

ஆவணி: - ஸ்தாணு அஷ்டமி

புரட்டாசி: - சம்புகாஷ்டமி

ஐப்பசி: - ஈஸ்வராஷ்டமி

கார்த்திகை: - ருத்ராஷ்டமி

மார்கழி: - சங்கராஷ்டமி

தை: - தேவதேவாஷ்டமி

மாசி: - மகேஸ்வராஷ்டமி

பங்குனி: - த்ரயம்பகாஷ்டமி

நன்றி !


Thursday, March 1, 2012


காசிக்குப் போனால் பாவம் தொலையும் என்பார்கள். காசியிலேயே பாவம் செய்பவர்கள் இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் தண்டபாணி பைரவர்.
காசியில் இரண்டு பைரவர் கோயில்கள் <உண்டு. ஒன்று காலபைரவர் கோயில், இது
மிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால், இதன் அருகிலுள்ள "தண்டபாணி மந்திரில்' உள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம்பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார். இவரைத் தெரிந்து கொள்வோமா!
குபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். இவர்களில் குணபத்திரன் என்பவர் கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தார். இவர் தவமிருந்து பெற்ற பிள்ளை ஹரிகேசவன். இவர் சிறந்த சிவபக்தராகத் திகழ்ந்தார். குணபத்திரன், தன் மகனை தங்கள் குல தலைவரான குபேரனை வழிபடும் படி தூண்டினார்.
""ஆஹா! குபேரனா நம் தலைவர்! அவர் சிவபெருமானிடம் இருந்து சகலநிதிகளையும் பெற்று உலகத்திற்கே பொருள் தருபவராயிற்றே! அவரது தயவிருந்தால், அவரே என்னை சிவபெருமானிடம் சேர்த்து விடுவாரே!'' என்று அப்போதும் சிவபெருமானின் பெருமைகளையே பேசினார்.
ஒருநாள், சிவனைக் காண வேண்டும் என்ற உந்துதல் அதிகமானது. அவர் காசியில் வசிக்கிறார் என்பதால், அங்கே செல்ல விரும்பினார் ஹரிகேசவன். வீட்டை விட்டு வெளியேறி வெகுதூரம் சென்று, சிவபெருமானை நினைத்து தவத்தை தொடங்கி விட்டார். உணவு. உறக்கம் மறந்து தியானத்தில் ஆழ்ந்ததால், எலும்பும் தோலுமாகி விட்டார். இத்தகைய பக்தனுக்கு அருள்புரிய வந்தார் சிவபெருமான். ஆழ்ந்த தியானத்தில் இருந்த தன் பக்தனை எழுப்பினார். ஹரிகேசவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவன் முன்னால் ஒரு பெரிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது.
பக்தர்கள் "ஹரஹர சங்கர, சிவசிவ சங்கர' என்ற கோஷம் எழுப்பியபடி சென்று கொண்டிருந்தனர். அப்போது ரிஷப வாகனத்தில் சிவன் காட்சியளித்தார். ""ஹரிகேசவா! நீ விரும்பியபடியே காசிக்கு வந்துவிட்டாய். உன் தவத்தை மெச்சினேன். உன் விருப்பப்படி இனி காசியிலேயே தங்கியிரு. இவ்வூரே எனக்கும் மிகவும் பிடித்தமானது. உனக்கு ஒரு பணி தருவேன், அதைச் செய்ய வேண்டும்,'' என்றார்.
தலையை மட்டும் அசைத்து பதிலேதும் சொல்லாமல், கைகட்டி வாய் பொத்தி நின்ற கேசவனிடம்,""இந்த ஊருக்குள் யார் நுழைந்தாலும்< அவர்களைக் கண்காணிக்க வேண்டும். இங்குள்ள எல்லாக் கணங்களுக்கும் (காவல் பூதங்கள்) நீயே தலைவன். நீயே இங்கு வருவோருக்கு உணவும், நீண்ட ஆயுளும் தர வேண்டும். இவ்வுலக வாழ்வு பொய்யானது என்ற ஞானத்தையும் அருளவேண்டும். இனி இந்த காசியின் அதிகாரி நீ தான். இங்கே வருபவர்கள் பாவ சிந்தனையுடன் திரிந்தால், அவர்களை இந்த ஊரை விட்டு வெளியே செல்லும்படியான மனநிலையை உருவாக்க வேண்டும். இங்கே நல்லவர்கள் மட்டுமே தங்க வேண்டும். உன்னை மக்கள் "தண்டபைரவர்' என்பர். உனக்கு தேவ சரீரம் தருகிறேன்,'' என்றார்.
ஹரிகேசவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அப்போது உருவானது தான் "தண்டபாணி மந்திர்'. காசிக்குப் போனால், இந்தக் கோயிலுக்குச் சென்று பிறப்பற்ற நிலையை அடைய வேண்டி வாருங்கள்.

நன்றி ! தினமலர் !