Saturday, December 17, 2011

பைரவரை வணங்கினால் வெற்றி எதிலும் வெற்றி



ஒருசமயம் பிரம்மன், சிவபெருமானை கண்டும் வணங்காமல் ஆணவமாக சென்று விடுகிறார். “மகாவிஷ்ணுவே மகேஸ்வரனை வணங்கிவிட்டு செல்கிறார். ஆனால் இந்த பிரம்மனின் கர்வத்தை பாருங்கள்“ என்று கைலாய மலையில் இருக்கும் தேவரிஷிகள் பேசி கொண்டார்கள். ஆனால் ஈசன், பிரம்மனின் செயலை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. இருந்தாலும், உலகமே வணங்கும் தம் கணவரை, பிரம்மதேவன் இப்படி அலட்சியம் செய்கிறாரே என்று மனம் வருந்தினார் அன்னை பார்வதிதேவி. தன் மனகவலையை தன் கணவரிடமும் சொன்னார் தேவி. இதனால் பிரம்மனை அழைத்த ஈசன், “உன்னை விட பெரியவர்களாக இருந்தாலும், சிறியவர்களாக இருந்தாலும் எவருக்கும் மரியாதை தர வேண்டும்.” என்று பிரம்மனுக்கு அறிவுரை சொன்னார்  சிவன்.  
கிளி பிள்ளைக்கு சொல்லுவது போல் பிரம்மனுக்கு புத்தி சொன்னாலும் அதை காது கொடுத்து கேட்காமல் அங்கும் இங்குமாக பார்ப்பதும் சைகையை செய்து கொண்டே சிவனின் பேச்சை அலட்சியம் செய்தபடி இருந்தார் பிரம்மன்.
“சிவனே.. எமக்கும் எல்லாம் தெரியும். உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் ஐந்து தலைதான். அதனால் நீங்கள் எனக்கு எந்த அறிவுரை சொல்லியும் என் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீணாக்க வேண்டாம்” என்றார் பிரம்மன்.
பைரவர் உருவானார்
விதி யாரை விட்டது.? பிரம்மனின் பேச்சும் செயலும் ஈசனுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் தன் உடலில் இருந்து ஒரு சக்தியை வெளிப்படுத்தினார். அந்த சக்திக்கு “பைரவர்” என்று பெயர் வைத்தார். உடல் முழுவதும் திருநீறு பூசி, சர்பங்களை தன் உடலில் சூட்டி கொண்டும், பாதத்தில் சலங்கையை கட்டி கொண்டும், மண்டை ஓடுகளை மாலையாக அலங்கரித்து அணிந்து, சூலம், பாசம் வைத்து கொண்டு சிவந்த விகாரமான சடைகளை கொண்டவராக கோபம் நிறைந்தவராக இருந்தார் பைரவர்.
“அய்யனே… ஆணையிடுங்கள். சிவபெருமானை மதிக்காதவன் கதி என்னவாகும் என்பதை, பிரம்மனின் நிலையே ஒரு உதாரணமாக உலகுக்கு காட்டுகிறேன்.” என்றார் பைரவர்.
“ஐந்து தலை இருக்கிறது என்கிற ஆணவத்தில்தானே பிரம்மன் எம்மை அலட்சியம் செய்கிறான். போனால் போகட்டும் என்று விட்டால், பிரம்மனின் போக்கு பிரம்மனுக்கே அழிவை தந்திடும் போல இருக்கிறது. அதனால் பிரம்மனுக்கு ஆணவ புத்தியை தந்த, அவன் ஐந்தாவது தலையை மட்டும் எடுத்து விடு பைரவா” என்றார் பரமேஸ்வரர்.
“தங்கள் ஆணைபடி செய்வேன்.” என்று கூறிய பைரவர், பிரம்மனின் ஐந்து தலையில் இருந்து ஒரு தலையை தன் நுனி நகத்தால் மலரை பறிப்பது போல் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்தார். இதனால் பிரம்மனின் தலையில் இருந்து ரத்தம் வடிய ஆரம்பித்தது. பல மணிநேரம் ஆகியும் பிரம்மனின் உடலில் இருந்து வெளிவரும் இரத்தம் நிற்கவில்லை.
“என் ஆணவன் அழிந்தது. மன்னித்துவிடுங்கள்” என்று வலியால் துடித்து இறந்தார் பிரம்மன். சிவபெருமானின் விருப்பபடி பிரம்மனை மன்னித்து உயிர் தந்தார் பைரவர்.
“பைரவரே… நான் செய்த தவறுக்கு தண்டனையாக நீங்கள் என் தலையை கீரை கிள்ளுவது போல் கிள்ளி எறிந்தீர்கள். அந்த தலையை நீங்களே என்றும் உங்கள் கையில் வைத்து கொள்ள வேண்டும். உங்கள் கையில் இருக்கும் என் தலையை பார்ப்பவர்களுக்கு ஆணவத்தால் பிரம்மன் ஐந்து தலையில் ஒரு தலையை இழந்தான் என்று தெரிந்து கொண்டு, அவர்களும் என்னை போல் திருந்த வேண்டும்.” என்று பிரம்மன், பைரவரிடம் வேண்டிக் கொண்டதால், பிரம்மனின் மண்டை ஓட்டை பிக்ஷ பாத்திரமாக வைத்து கொண்டார். இந்த சம்பவத்தை கேள்விபட்ட தேவலோகமே பைரவரை கண்டு பயந்தது. சிவபெருமானால் உருவானதால் சிவபிள்ளையாக சிவபெருமானுக்கு மட்டுமே கட்டுப்படுபவராக திகழ்கிறார் பைரவர்.
விஷ்ணுபகவானுக்கு வந்த வினை
முன்னொரு சமயம், பைரவர் விஷ்ணுபகவானை பார்க்க வைகுண்டம் சென்றார். அப்போது அங்கு காவலுக்கு நின்றிருந்த பூத தலைவரான “விஷ்வக்ஸேனர்” பைரவரை வைகுண்டத்தில் அனுமதிக்காமல் தடுத்தார். இதனால் கோபம் கொண்ட பைரவர், விஷ்வக்ஸேனரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து, அவரை உயிர் இழக்கச் செய்து, வைகுண்டத்தில் கோபமாக நுழைந்தார்.
விஷ்ணுபகவான் சயனித்திருந்தாலும் பைரவர் கோபமாக வருவதை அறிந்து அவசர அவசரமாக எழுந்து வரவேற்று மரியாதை செய்தார்.
“நான் வந்திருப்பதை ஞானத்தால் அறிந்தும் அதை பற்றி பெரியதாக நினைக்காமல் சயனித்து கொண்டிருந்தாயா? உன் காவலன் என்னை அலட்சியம் செய்ததை அறிந்தும் கண்டுக்கொள்ளாமல் இருந்த உன்னை என்ன செய்கிறேன் பார்.” என்று கூறிகொண்டே விஷ்ணுபகவானை நெருங்கினார் பைரவர்.
“பைரவா… உனக்கு ஏன் அவ்வளவு சிரமம். நானே என் தலையை அடித்து கொள்கிறேன்“ என்று கூறி தன் தலையை பலமாக அடித்து கொண்டார் பகவான். இதனால் அவருடைய தலை  இரண்டாக பிளந்தது. ரத்தம் நிற்காமல் வெளியேறியது. அதனால் விஷ்ணுபகவானின் உடலில் இருந்த சக்திகள் குறைந்து மயங்கி விழுந்தார்.
ஸ்ரீமந் நாராயணனின் தலையில் இருந்து வடியும் ரத்தத்தை தன் கையில் இருந்த பிரம்மனின் மண்டை ஓட்டில் பிடித்தார் பைரவர்.
தம் கணவரின் நிலை கண்டு கலங்கினார்கள் ஸ்ரீதேவியும் பூதேவியும். அதனால் பைரவரிடம், “தயவு செய்து அவரை காப்பாற்றி தாருங்கள்” என்று வருத்ததுடன் கேட்டு கொண்டார்கள்.
பெண்களின் கண்ணீரை கண்ட பைரவர், மனம் இறங்கினார். விஷ்ணுபகவானை மயக்கத்தில் இருந்து விடுவித்தார். வைகுண்டத்தின் காவலரான விஷ்வக்ஸேனருக்கும் உயிர் தந்தார் பைரவர்.
பைரவருக்கு சிவன் தந்த அந்தஸ்து
“எம்மை வணங்கும் பக்தர்களுக்கு நீயும் துணை இருந்து அவர்களை வழிநடத்து. அத்துடன் யார் உன்னை வணங்குகிறார்களோ அவர்களுக்கு எந்த தீங்கும் நெருங்காமல் காப்பாற்று.” என்று இறைவன் சிவபெருமான் பைரவருக்கு அருளாசி வழங்கினார்.
ஒரு காலத்தில் சிவாலயங்களில் கோவில் நடை சாத்திய பிறகு, அந்த கோவிலின் சாவியை பைரவரின் கால் பாதத்தில் வைத்து விட்டு செல்லும் வழக்கம் இருந்தது.
மிளகு தீப பரிகாரம்
பைரவர் சன்னதியில் தீபம் ஏற்றினால் மிக நல்லது. அதுவும் மிளகை துணியில் சிறு மூட்டையாக கட்டி நல்லெண்ணைய் ஊற்றி தீபம் ஏற்றினால், இன்னல்கள் யாவும் மறையும்.
பைரவருக்கு சிகப்பு நிறத்தில் இருக்கும் மலர்களை சமர்பிக்கலாம் அல்லது பைரவருக்கு பிடித்த அரளிப்பூவை சமர்பித்தால், நினைத்தது நடக்கும். பைரவரை வணங்கினால் விரோதிகளும் அடிபணிவார்கள். முப்பெரும் தெய்வங்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும். பிறகென்ன… வெற்றி வெற்றி எதிலும் வெற்றிதான்.

நன்றி !!! http://bhakthiplanet.com

Thursday, December 8, 2011


"ஸ்வர்ண கால பைரவர் த்ரிசூல யுக்த பாணிநம்
வேதரூப ஸ்ரமேல ஸம்யுதம் மஷேச்வரம்
ஸ்மாச்ரி தேஷுஸர்வ தாஸ மஸ்வஸ்து தாயினம்
மகீந்த்ரி வம்ச பூர்வ புண்ய ரூபினம் ஸமாச்ரயே''.

Tuesday, November 29, 2011


தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் வழியில், நல்லம்பள்ளி - அதியமான்கோட்டை உள்ளது. இங்கே, காசியம்பதிக்கு அடுத்தாற் போல், தனிக்கோயிலில் இருந்தபடி அனைவருக்கும் அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் ஸ்ரீகாலபைரவர்! இங்கே, உன்மத்த பைரவராகக் காட்சி தரும் அழகே அழகு!
அதியமான் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயிலின் விதானத்தில், 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களுக்கான நவக்கிரகச் சக்கரங்கள் உள்ளன என்பது சிறப்பு. எனவே, 27 நட்சத்திரக் காரர்களும் வணங்கி வழிபட்டால், நவக்கிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்! தொடர்ந்து 12 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் தேய்பிறை அஷ்டமி ஆகிய நாட்களில், மாணவர்கள் விளக்கேற்றி வழிபட, கல்வி - கேள்வியில் சிறந்து விளங்குவார்கள்; தடைப்பட்ட திருமணத்தால் கலங்குவோர், மஞ்சள்கிழங்கு மாலை அணிவித்து வேண்டிக்கொள்கின்றனர். குடும்பத்தில் கடனும் கஷ்டமும் தீரவேண்டும் என்று சாம்பல் பூசணி விளக்கேற்றி ஸ்ரீகாலபைரவரை வழிபட்டுப் பலன் பெறலாம்; நினைத்தது நிறைவேறும் எனப் போற்றுகின்றனர் தருமபுரி வாழ் மக்கள்!

நன்றி ! சக்தி விகடன்

Monday, November 28, 2011


ஸ்ரீதத்துவநிதி எனும் நூல் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைர வரைப் பற்றி விவரிக்கிறது. ஸ்ரீஸ்வர்ண பைரவியை தன் மடிமீது அமர்த்தியவாறு காட்சி தரும் இந்த மூர்த்தியை மனமுருகி வழிபட, பொன்-பொருள் சேரும்; ஐஸ்வரியம் பெருகும் என்பர்.

சிதம்பரம் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஒரு பைரவர், ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் எனப்படுகிறார். திகம்பரராக, டமருகம், சூலம், பாசம் மற்றும் கபாலம் ஏந்தியவராக நின்ற கோலத்தில் அருள்கிறார். அருகில், நாய் வாகனமும் உள்ளது.

முற்காலத்தில், தில்லை கோயிலில் சேவை செய்யும் அந்தணர்கள், பூஜை முடிந்ததும் செம்பினால் ஆன தாமரையை பைரவரின் பாதத்தில் வைத்து வணங்கிச் செல்வார்களாம். மறுநாள், ஸ்வாமியைப் பணிந்து அந்த மலரை எடுத்துக் கொள்வர். அது, அவர்களுடைய பணிகளுக்கேற்ப, பொன்னாக மாறியிருக்கும் என்றொரு (செவிவழி) தகவல் உண்டு! இன்றும் தன்னை வணங்கும் அன்பர்களின் மனப்பூர்வமான கோரிக்கைகளை ஏற்று, அருள் வழங்கி வருகிறார் ஸ்ரீபைரவமூர்த்தி!

நன்றி ! சக்தி விகடன் 

Sunday, November 27, 2011


பைரவரை முழுமுதலாகக் கொண்ட சமயம்- பைரவம். தவிர, காபாலிகர்களும் பாசுபதர்களும்கூட ஸ்ரீபைரவரைச் சிறப்பாக வழிபடுகின்றனர். ஸ்ரீபைரவரை சூரிய சமயத்தவர் (சௌமாரம்) மார்த் தாண்ட பைரவராகவும், முருகன் ஆலயத்தில் குமார பைரவராகவும், விநாயகர் கோயிலில் பிரமோத பைரவராகவும் வழிபடுவர்.

சிவனாரின் வீரச்செயல்கள் எட்டாகும். அதேபோல், அவரது வீரவெளிப்பாடாக விளங்கும் பைரவரும்... அஜிதாங்கன், ருரு, சண்டன், உன்மத்தன், கபாலன், பீஷ்ணன், க்ரோதன் மற்றும் சம்ஹார பைரவர் என எட்டு திருவடிவங்களுடன் அருள்கிறார். இவர்கள் எண்மருக்கும் தேவியராகத் திகழும்... பிராம்மஹி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி, சண்டிகை ஆகியோர் அஷ்ட மாதர்களாகப் போற்றப்படுகின்றனர்.

புண்ணியமிகு காசியில்... அனுமன் காட்டில்- ருரு பைரவரும்; துர்காமந்திரில்- ஸ்ரீசண்ட பைரவரும்; விருத்தகாளேசுவரர் ஆலயத்தில் அமிர்த குண்டத்தின் முன்புறம்- ஸ்ரீஅஜிதாங்க பைரவரும்; லட் பைரவர் கோயிலில்- ஸ்ரீகபால பைரவரும், காமாச்சா எனும் இடத்தில்- ஸ்ரீவடுக பைரவர் எனும் பெயரில் ஸ்ரீகுரோதன பைரவரும், தேவரா கிராமத்தில்- ஸ்ரீஉன்மத்த பைரவரும்; திரிலோசன கஞ்ச் (பாட்டன் தர்வாஜாவுக்கு அருகில்) ஸ்ரீசம்ஹார பைரவரும்; காசிபுரா எனும் இடத்தில்- ஸ்ரீபீஷண பைரவரும் அருள்பாலிக்கின்றனர்!

சீர்காழி, ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயத் தின் (தெற்கு) வெளிப் பிராகாரத்தில் உள்ள வலம்புரி மண்டபத்தில் சுதந்திரர், சுயேச்சர், லோகர், காலர், உக்ரர், பிரச்யர், நிர்மாணர், பீஷ்ணர் ஆகிய அஷ்ட பைரவர்களைத் தரிசிக்கலாம். குற்றாலம் சித்திர சபையில் அஷ்ட பைரவரின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

நகரத்தார் சீமையிலுள்ள... திருப்பத்தூர், பிள்ளையார்பட்டியை அடுத்துள்ள வைரவன் பட்டி, அழகாபுரி, பெருச்சிக் கோயில், திருமெய்ஞானபுரம் வைரவன்பட்டி, காரையூர், நெடுமரம், இலுப்பைகுடி என்ற எட்டும் அஷ்ட பைரவ தலங்களாகப் போற்றப்படுகின்றன.

நன்றி ! சக்தி விகடன் 

Saturday, November 26, 2011


பொங்கல் திருநாள், மகர சங்கராந்தி, ரதசப்தமி, உத்தராயன புண்ணியகாலத் துவக்கம் என எண்ணற்ற வைபவங்களுடன் திகழும் தை மாதத்துக்கு இன்னொரு விசேஷமும் உண்டு. ஆமாம், காவல் தெய்வமாம் ஸ்ரீபைரவர் வழிபாட்டுக்கும் உகந்த மாதம், தை!
தை மாதம் முதல் செவ்வாயில் துவங்கி, இந்த மாதத்தின் அனைத்துச் செவ்வாய்க்கிழமைகளிலும் பைரவரை வழிபடுவது சிறப்பு.
அதிலும், ஸ்ரீபைரவரின் மகாத்மியத்தை அறிந்து வழிபடுவதால், பலன்கள் பன்மடங்கு அதிகம் கிடைக்குமே! அறிந்துகொள்வோமா ஸ்ரீபைரவ மகிமையை!
சிவாலயங்களில், ஸ்ரீவிநாயகர் தரிசனத்துடன் ஆரம்பிக்கும் வழிபாடு,  ஸ்ரீபைரவ தரிசனத்துடன் நிறைவடையும். ஆமாம், அகில உலகங்களையும் காத்து ரட்சிக்கும் சிவனாரின் கோயில்களுக்கு, ஸ்ரீபைரவரே காவல் தெய்வம்! உலகையும் அதில் அமைந்த திருத்தலங்கள் மற்றும் தீர்த்தங்களையும் காவல் புரியும் தெய்வம் ஆதலால், க்ஷேத்ரபாலகன் என்றும், தீர்த்தபாலகன் என்றும் ஸ்ரீபைரவரை பலவாறு போற்றுகின்றன புராணங்கள்!
தன்னுடைய அன்பர்களுக்குத் துன்பம் விளைவிக்கும் தீயோர் களுக்கு பயங்கரமானவராகத் திகழ்வதால் ஸ்ரீபைரவர் என்றும், வஜ்ஜிரகோட்டையாகத் திகழ்ந்து, தன்னைச் சரணடையும் பக்தர்களைக் காப்பவர் ஆதலால் ஸ்ரீவயிரவ மூர்த்தி என்றும் இவருக்குத் திருப்பெயர்! இவர், ஞானிகளிடம் அறிவை வளர்க்கும் ஸ்ரீஞான பைரவராகவும், யோகிகளுக்குக் காவலாக இருப்பதுடன், தாமே பெரிய யோகியாக விளங்கி ஸ்ரீயோக பைரவராகவும், வீரர்களிடம் உக்கிர பைரவராகவும், பஞ்சபூதங்களின் சீற்றங்களில் இருந்து பூமியைக் காப்பதால் ஸ்ரீபூத பைரவராகவும் அருள் புரிவதாக ஆன்றோர்கள் சிலாகிக்கிறார்கள்!
உலகையும் உயிர்களையும் காக்கும் தன்மை சிவ பெருமானுக்கே உரியது என்பதால், அவருடைய ஒருகூறே பைரவமூர்த்தியாக எழுந்தருளி, அன்பர்களுக்கு அருள்கிறது என்று சிறப்பிக்கின்றன ஞானநூல்கள்.
மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மன், ஆதி காலத்தில் சிவனாரைப் போன்றே ஐந்து தலைகளுடன் திகழ்ந்தார். ஒருமுறை, அவர் அகந்தையால் அறிவு மயங்கிச் சிவ நிந்தனை செய்தபோது, சிவபெருமான் பைரவரைத் தோற்றுவித்தார். பைரவர், பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்து எடுத்துக் கபாலமாக்கிக் கொண்டார்.அடி-முடி தேடியபோது, 'திருமுடி கண்டேன்எனப் பொய்யுரைத்ததால், பிரம்மனின் 5-வது தலையை பைரவர் மூலம் கொய்ததாகவும் ஒரு புராணத் தகவல் உண்டு.
பிரம்மனின் சிரம் கொய்யப்பட்ட திருவிடம் திருக்கண்டியூர் ஆகும். தஞ்சாவூர்- திருவையாறு பாதையில் உள்ள இந்த ஊர், சிவனாரின் அட்ட வீரட்ட திருத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு அருள்பாலிக்கும் திருக்கண்டீஸ்வரரையும், பிரம்மனின் சிரம்கொய்த பைரவரையும் தரிசிப்பது சிறப்பு.
ந்தகாசுரன் என்பவன் தேவர்களைத் துன்புறுத்தியதுடன், அவர்களைப் பெண் வேடத்துடன் திரியும்படிச் செய்து அவமானப் படுத்தினான். தேவர்கள், சிவபெருமானைச் சரணடைந்தனர். அவர், ஸ்ரீமகாபைரவரைத் தோற்றுவித்து அந்தகனை அழிக்கும்படி ஆணையிட்டார். அதிஉக்கிரத்துடன் அந்தகன் மீது போர்தொடுத்த பைரவர், அவனைத் தனது சூலத்தில் குத்தித் தூக்கியவாறு மூன்று உலகங் களிலும் திரிந்தார். அவனுடைய உடலிருந்து வழிந்த ரத்தத்தைக் குடித்தார். அஞ்சி நடுங்கிய அந்தகாசுரன், பைரவரைத் துதித்தான். அதனால் மகிழ்ந்த ஸ்ரீபைரவர், அவனைச் சூலத்தில் இருந்து விடுவித்தாராம். அதேபோல், முண்டகன் முதலிய இன்னும்பல அசுரர்களையும் அழித்து, ஸ்ரீபைரவர் தேவர்களைக் காத்து பரிபாலித்த கதைகளும் புராணங்களில் உண்டு.
வானவர்களுக்கு மட்டுமல்ல, தூய பக்தியுடன் தன்னை வழிபடும் பக்தர்களுக்கும் வேண்டிய வரம் தந்து அருள்பாலிக்கும் கண்கண்ட தெய்வம் ஸ்ரீபைரவர். கடன் தொல்லை நீங்கவும், சத்ருபயம் அகலவும், பில்லி-சூனியம் போன்ற தீவினைகளின் பாதிப்புகள் இல்லாமல் இருக்கவும் ஸ்ரீபைரவரை பலவாறு போற்றி வழிபடுகின்றனர்.
தேய்பிறை அஷ்டமி திருநாள் ஸ்ரீபைரவரை வழிபடுவதற்கு உகந்த தினம். குழந்தை இல்லா மல் வருந்தும் தம்பதியர், தொடர்ந்து 6 தேய்பிறை அஷ்டமி திருநாட்களில்... செவ்வரளி மலர்கள் மற்றும் வில்வத்தால் பைரவரை அர்ச்சித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பர்.
அதேபோல், தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ ஹோமம் செய்வ துடன், பைரவருக்கு அபிஷேகிக்கப்படும் கலச தீர்த்தத்தைப் பருகுவதால் தீராத பிணிகளும் தீரும் என்பர்.
அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று, அங்கு அருள்பாலிக்கும் பைரவமூர்த்திக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி, தயிர் அன்னம், தேன் மற்றும் தேங்காய் சமர்ப்பித்து வழிபடுவதால், பில்லிசூனியம் போன்ற தீவினைகள் நீங்கும்; பகைவர்களும் நண்பர்களாவார்கள். வீட்டிலேயே நேரம் கிடைக்கும்போது, ஸ்ரீபைரவ சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்வதாலும் மிகுந்த பலன் உண்டு.
ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில், ஸ்ரீபைரவருக்கு விபூதி அபிஷேகத்துடன், வடைமாலை அணிவித்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்வதால், திருமணத் தடை அகலும் என்பார்கள். வளர்பிறை அஷ்டமி திருநாட்களில் அல்லது வெள்ளிக்கிழமை மாலை வேளையில்,
வில்வம் மற்றும் வாசனை மலர்களைச் சமர்ப்பித்து ஸ்ரீபைரவருக்கு  நெய் தீபம் ஏற்றிவைத்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் வறுமைகள் நீங்கும்; செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
சனீஸ்வரரின் அதிதேவதை பைரவர். சனிக்கிழமைகளில் ஸ்ரீபைர வருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், சனி கிரகத்தால் ஏற்படும் சகலவிதமான தோஷங்களும் விலகுமாம். ஸ்ரீமகாபைரவரை திரிபுர பைரவராகவும் வழிபடும் வழக்கம் உண்டு. கரைசேர முடியாத பெருந்துன்பங்களையும் நீக்கி அருள்புரிவாராம் ஸ்ரீதிரிபுர பைரவர்.
கோயில்களில் நடைபெறும் பிரம்மோற்ஸவத்துக்கு  முன்பாகவும் விழா முடிந்த பின்னரும் ஸ்ரீபைரவரை வழிபட வேண்டும் என்கின்றன ஆகம நூல்கள். முன்பெல்லாம், சிவாலயங்களில் இரவில் பைரவரை பூஜித்து வழிபட்டு, ஆலயக் கதவுகளை மூடி, சாவியை அவரது சந்நிதியில் சமர்ப்பிப்பது வழக்கம். இப்போது, கைமணியையும் கலசத் தையும் அவர்முன் வைத்துச் செல்கின்றனர்!
கோயிலுக்குச் சென்று வழிபாடு முடித்துத் திரும்புமுன் ஸ்ரீபைரவரை மனதார தரிசித்து வழிபட்டு, உங்கள் பிரச்னைகளையும் அவரின் திருப்பாதத்தில் சமர்ப்பித்து வாருங்கள்; ஒட்டுமொத்த இன்னல் களையும் நீக்கி, உங்களையும் உங்கள் சந்ததியையும் சிறப்பாக வாழ வைப்பார் ஸ்ரீபைரவர்.

நன்றி ! சக்தி விகடன் 

Sunday, November 20, 2011


புண்ணியதேசமான காசியம்பதியை அறிவோம். அந்த தேசத்தைக் கட்டிக் காத்தருள்பவர், ஸ்ரீகால பைரவர். புண்ணிய ஸ்தலத்தைக் காபந்து செய்யும் இவரின் திருச்சந்நிதியில் வேண்டிக்கொண்டு, காசி கயிறு எனப்படும் திருஷ்டிக் கயிற்றைக் கையில் கட்டிக்கொண்டால், நமக்குக் கைகொடுத்து, துயரங்களிலிருந்து நம்மைக் கரையேற்றிவிடுவார், ஸ்ரீகால பைரவர்.

சிவனாரின் அம்சமான ஸ்ரீகால பைரவர், ஆணவத்தால் தலை கால் புரியாமல் ஆடிய ஸ்ரீபிரம்மனின் ஒரு தலையைக் கொய்தார். இதனால் பிரம்மஹத்தி தோஷத் துக்கு ஆளாகி, புண்ணியத் தலங்கள் பலவற்றுக்கும் சென்று வழிபட்டார்; புனித குளத்தில் நீராடினார். பலனில்லை. இறுதியாக, காசியம்பதிக்கு வந்து, கங்கையில் நீராடி, சிவ தரிசனம் செய்த பிறகுதான், அவரின் தோஷம் நீங்கியது என்கிறது ஸ்தல புராணம். இதையடுத்து, இங்கே ஸ்ரீகால பைரவருக்கு அழகிய ஆலயமும் உருவானது. காசியின் முக்கியப் பகுதியான மைதாகினியில் உள்ள ஸ்ரீவிஸ்வேஸ்வர் கன்ச்சில் அமைந்துள்ளது இந்த ஆலயம். உள்ளே நுழைந்ததும், வெள்ளிக் கவசத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகால பைரவரின் திருமேனியை கண்ணாரத் தரிசிக்கலாம்.




''ஸ்ரீகால பைரவர் சுயம்புத் திருமேனி. 'இவருடைய அனுமதியில்லாமல், காசியில் காற்று கூட நுழையாது; காசி மரத்து இலைகள்கூட அசையாது’ என்றொரு சொல் வழக்கு உண்டு. இவரை வணங்கினால், பஞ்சமா பாதகங்களும் விலகிவிடும்; முக்தி கிடைக்கப் பெறலாம். இங்கு இவருக்கு சைவ- அசைவ உணவு ஆகிய இரண்டுமே படைக்கப்படுகின்றன. அஷ்டமி, சதுர்த்தசி மற்றும் அமாவாசை ஆகிய நாட்களில் இவரை வழிபடுவது சிறப்பு'' என்கிறார் பைரவர் கோயிலின் பரம்பரை அர்ச்சகர் விஸ்வநாத் பாண்டே.




காசி, அனுமன்காட்டில் உள்ள சங்கரமடத்தில் சேவையாற்றி வரும் பி.ஆர்.நாராயணசாமி நம்மிடம், '''காசியில் கால பைரவர், அசிதாங்க பைரவர், பூத பைரவர், பீஷ்ண அல்லது சண்ட பைரவர், கபால பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், ருரூ பைரவர், சம்ஹார பைரவர் மற்றும் ஆனந்த பைரவர் என பத்து விதமான பைரவர் கோயில்கள் உள்ளன. இவர்களில், காலத்துக்கு அதிபதியான
கால பைரவர் சக்தி வாய்ந்தவர். இவரை வழிபட, எதிரிகளின் தொல்லை ஒழியும்'' என்றார். 'ஸ்ரீகால பைரவரை வணங்கு; காசி கயிற்றைக் கட்டு’ என்பார்கள். காசிக்குச் சென்று, ஸ்ரீகால பைரவரை தரிசிக்க இயலாதவர்கள்கூட, அங்கிருந்து பிரசாதமாகக் கொண்டு வரப்பட்ட காசி கயிற்றை, மனதாரப் பிரார்த்தித்துக் கட்டிக் கொண்டால், கவசமென அந்தக் கயிறு நம்மைக் காக்கும்!  
இதோ... வந்துவிட்டது தீபாவளித் திருநாள். வாசகர்கள் பூரண நலமுடன் வாழ, ஸ்ரீஅன்னபூரணி குடிகொண்டிருக்கும் காசியம்பதியின் ஸ்ரீகால பைரவர் திருச்சந்நிதியில் பிரத்யேகமாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதில் காசி கயிறுகள் வைத்தும் பூஜிக்கப்பட்டது. அந்தக் காசி கயிறு பிரசாதம் இப்போது உங்கள் கைகளில்!
கூடவே, உலகுக்கே படியளக்கும் ஸ்ரீஅன்னபூரணியின் தாய்மையும் கருணையும் ததும்புகிற திருமுகம் கொண்ட அழகிய ஸ்டிக்கரும் உங்கள் கரங்களில்! காசி கயிற்றைக் கட்டிக்கொண்டு, தீப ஒளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்; ஸ்ரீகால பைரவர் உங்கள் குடும்பத்தைக் காவலனாக நின்று காப்பார்!  
படங்கள்: ராஜேஷ்குமார் சஹானி

நன்றி !!! சக்தி விகடன்