Tuesday, June 24, 2014

காசிக்கு நிகரான திருச்சி பைரவர் கோவில்


திருச்சி நகரில் சாதாரண பிளாஸ்டிக் பொருட்கள், மருந்து பொருட்கள், மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் தங்க வைர நகைகள் வரை அனைத்தையும் விற்பனை செய்யும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் நிறைந்து இருப்பதால் காலை முதல் இரவு வரை பரபரப்பாக காணப்படுவது திருச்சி பெரிய கடைவீதியாகும். இந்த பெரிய கடைவீதியில் நூறாண்டு பெருமைமிக்க ஸ்ரீ பைரவநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவராக பைரவர் வீற்றிருப்பதால் இது பைரவருக்கான தனி ஸ்தலமாக விளங்கி வருகிறது. வடக்கே புனித ஸ்தலமான காசியில் கங்கையை பார்த்தபடி வீற்றிருக்கும் பைரவருக்கு நிகரான சக்தி வாய்ந்தவராக நம்பப்படுவதால் இந்த கோவிலை திருச்சியின் காசியாகவே கருதி வழிபட்டு வருகிறார்கள் ஆன்மிக வாதிகள். முன்பெல்லாம் இந்த பகுதியில் உள்ள பக்தர்கள் மற்றும் திருச்சியின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பக்தர்கள் மட்டுமே வழிபட்டு வந்த இந்த கோவில் தற்போது பிரபலங்களின் வருகையால் திக்குமுக்காடி வருகிறது. தேய்பிறை அஷ்டமி தினங்களில் இந்த ஆலயத்திற்கு வந்து பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டாலும், சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடத்தி வழிபட்டாலும் எம பயம் நீங்கும், ஆயுள் நீடிக்கும், எதிரிகள் துவம்சம் ஆகி விடுவார்கள், ஆட்சியில், அதிகாரத்தில் இருந்தவர்கள் இழந்த பதவியை மீண்டும் பெறலாம். இருக்கும் பதவியை இழக்காமல் தக்க வைத்துக்கொள்ளலாம் என நம்பப்படுவதால் சமீபத்தில் இந்த கோவிலுக்கு அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தில் உள்ள பிரபலங்களின் பார்வை இந்த கோவிலின் பக்கம் திரும்பி உள்ளது. தேய்பிறை அஷ்டமி நாட்களில் இந்த கோவிலுக்கு வந்து பூஜை நடத்தியதால் பதவியை இழந்த அரசியல் பிரபலங்கள் மீண்டும் பதவி பெற்றிருப்பதே இந்த கோவிலின் சிறப்புக்கு காரணம் என்கிறார்கள் பைரவரின் பக்தர்கள்.

நன்றி !தின தந்தி

Saturday, June 7, 2014

சனிதோஷம் போக்கும் பைரவர் வழிபாடு

இலந்தையடிவிளை முத்தாரம்மன் தலத்தில் பைரவர் நாய் வாகனத்துடன் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார். சுதை வடிவில் இருப்பதால் இவருக்கு அபிஷேகம் இல்லை. தொடர்ந்து 8 வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களின் இரவு வேளையில் பைரவருக்கு புனுகு சாத்தி, மரிக்கொழுந்து மாலை அணிவித்து நெய் தீபமேற்றி வழிபட்டு வந்தால், நாம் நினைத்த நற்காரியங்கள் யாவும் ஈடேறும். இந்நாட்களில் அசைவத்தை தவிர்ப்பது நலம் பயக்கும். 

பைரவர், சனீஸ்வரரின் குரு. ஆதலால் இத்தல பைரவரை சனிக்கிழமை மாலை வேளையில், எள் எண்ணெய் எனும் நல்லெண்ணெய் தீபமேற்றி, 8 சனிக்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டு வந்தால், சகலவிதமான சனி தோஷங்களும் அடியோடு அகன்று விடும்.

வெள்ளிக் கிழமைகளில் இத்தல பைரவருக்கு வில்வ மாலை அணிவித்து, நெய்யில் சுட்ட உளுந்து வடை நிவேத னம் செய்து வழிபட்டால் செல்வமும், சகல ஐஸ்வரி யங்களும் கிடைக்கப்பெறும்.

அமாவாசை அல்லது ஞாயிறு மாலை ராகு காலத்தில் பைரவருக்கு எலுமிச்சை மாலை, நாகலிங்கப்பூ மாலை சூட்டி, எள் அன்னம் படைத்து முன்னோர்களை நினைத்துப் பிதுர் பூஜை மந்திரம் கூறி அர்ச்சித்து, 10 பேருக்காவது அன்னதானம் செய்தால் முழுமையான பித்ரு தோஷத்தை பைரவர் நீங்கி அருள்வார்.

வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு புனுகு சாத்தி, தாமரை பூ சூட்டி, அவல் கேசரி, பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து 8 வாரங்கள் செய்து வர, திருமணத் தடைகள் அகன்று, மனதுக்குப் பிடித்த துணை அமையும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு புனுகு சாத்தி, நாகலிங்கப் பூ சூட்டி,

பால் பாயசம் நிவேதனம் செய்தால் நாக தோஷமும், சனிக்கிழமை ராகு காலத்தில் புனுகு சாத்தி, நாகலிங்கப் பூ சூட்டி, பால்பாயசம், கருந்திராட்சை நைவேத்தியம் படைத்து வழிபட்டால் விஷய பயமும் அடியோடு அகலும். தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவரை அஷ்டலட்சுமிகளும் வழிபட்டு, தங்கள் தனத்தை பெருக்கிக் கொள்வதாக புராணங்கள் கூறுகின்றன.  

 நன்றி ! மாலை மலர்