Thursday, June 30, 2011

சந்தோஷம் தரும் சொர்ண ஆகர்ஷன பைரவர்

சந்தோஷம் தரும் சொர்ண ஆகர்ஷன பைரவர்




சிவபெருமானின் அம்சத்துடன் நாய் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பவர் பைரவர். பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான். நீங்களும் பொருளாதார சிக்கலில் சிக்கி அவதியுறுபவரா?  அப்படியென்றால் , நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் சொர்ண ஆகர்ஷண பைரவர்.
இவரை தேய்பிறை அஷ்டமியிலும் , ராகு காலம் சனி ஓரையுலும் தரிசிப்பது நல்ல பலன் தரும். இதுதவிர, சொர்ண ஆகர்ஷ்ன பைரவருக்கு நடைபெறும் சகல அபிஷேக, அலங்கர பூகைளில் கலந்து கொண்டு பிராத்திப்பதன் மூலம் அவரது முழுமையான அணுகிரகத்தை அடையலாம்.
அப்போது பால்,தேன்,இளநீர், பன்னீர், திருமஞ்சன பொடி , மஞ்சள்,சந்தனம், பச்சரிசி மாவு ஆகிய அபிஷேகப் பொருட்களுடன் செவ்வரளிப் பூக்கனையும் சொர்ண ஆகர்ஷன பைரவரின் பூஜைக்காக கொடுப்பது நல்லது.
இந்த அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெறும் போதும், செவ்வரளிப் பூக்களைக் கொண்டு பூஜை நடத்தப்படும் போதும்,பைரவர் திருமந்திரத்தை மனதில் பிரார்த்தித்து, கோரிக்கைகளை சொர்ண  ஆகர்ஷன பைரவரிடம் சமர்ப்பித்தால் பிராத்தனைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்கிறார்கள்.
மேலும், சகல தோஷ நிவர்த்திக்கு சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு வடை மாலை சாத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அத்துடன், இவருக்கு நைவேத்தியமாக தயிர்சாதம் படைத்து வழிபடுவதும் சிறப்பு.

Tuesday, June 28, 2011

தீராத வினைகள் தீர்கும் ஸ்ரீ பைரவர்



இத்தகைய  ஸ்லோகங்களை தினமும் சொல்வதால் நம் தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து நன்மை விளையும் என்பது ஐதீகம். கொடிய வினைகளையும் நொடியில் போக்கும் தன்மை கொண்டவை இந்த ஸ்லோகங்கள்.
 
ஆனால் இவற்றைத் துதிகும் முன் கிழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பூரண பலன் கிட்டும்.
 
1. இவற்றைத் துதிப்பவர்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
 
2. தினம்தோறும் குளித்து முடித்து விட்டு பக்தியுடனும் ஆச்சாரத்துடனும் இந்த ஸ்தோத்திரங்களைச் சொல்லி இறைவனைத் வழிபட வேண்டும்.
 
3. புறதூய்மையோடு அகத்தூய்மையும் மிக மிக அவசியம்.
 
4. தொடர்ந்து 48 நாட்கள் தடையில்லாமல் நம்பிக்கையோடு சொல்லி வர பலன் கிடைப்பது உறுதி.
 
5. மந்திரங்களை சரியாக உச்சரிக்க இயலாதவர்கள் குருமார்கள் மூலம் சரியான உச்சரிப்பைக் கேட்டறிந்து  அதன் படி செல்லி வர வேண்டும்.
 
 
ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்:
 
ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே !
சூல ஹஸ்தாய தீமஹி !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!  
ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்  
ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்
 
 
ஸ்ரீ பைரவ த்யானம் ::
 
ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூலகபால பாச டமரும்
லோகஸ்ய ரக்ஷா கரம்
நிர்வாணம் ஸுநவாகனம்
திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாதவடுகம்
ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .  

நன்றி !!!  http://amanushyam.blogspot.com

Sunday, June 26, 2011

காலாஷ்டமி!


              

இந்த விரதத்திற்கு வைக்கம் அஷ்டமி என்றும், மகாதேவ அஷ்டமி என்றும் பெயர் உண்டு. கார்த்திகை மாதம் தேய்பிறையில் வருகின்ற அஷ்டமியே காலாஷ்டமி எனப்படும். இது காலபைரவரின் அவதார தினமாகும். பிரம்மாவுக்கும் முதலில் 5 தலைகளே இருந்தன. சிவனது முடியைக் காணா விட்டாலும், கண்டேன் என்று தவறாக கூறியதால் அவரது ஐந்து முகத்தில் ஒன்றை எடுப்பதற்காக தோன்றியவரே கால பைரவர். அவரே காசிக்கு வருவோரின் பாவத்தை கண்டிக்கும் பொறுப்பை உடையவர். அவர் கொடுக்கும் தண்டனையின் அடையாளமே நாம் கட்டிக்கொள்ளும் காசிக் கயிறு. அதைக் கட்டிக் கொண்டால் நாம் செய்த பாவம் விலகும் என்பது ஐதீகம். பிரம்மனின் தலையை எடுத்த தோஷம் நீங்க பைரவர் தீர்த்தயாத்திரை மேற்கொண்டபோது காசிக்கு வந்ததும் அவரது பாவம் நீங்கிற்று. உண்மையை மறைத்த பிரம்மாவை தண்டித்தது போல எல்லா மனிதரின் பாவங்களையும் நீக்குவதற்காக பைரவர் காசியிலேயே தங்கிவிடுகிறார். நமது பாவங்கள் போய்விடுவதால் மீண்டும் எமன் நம்மை அண்டாமல் சிவனடியில் நம்மை பைரவர் சேர்த்து விடுகிறார். சிவபெருமானுடைய 5 முகங்களில் இருந்து தோன்றிய 25 மூர்த்திகளில் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவர் பைரவர். பேராபத்தையும் சிறுநொடியில் அகற்றிடும் பைரவரை நமக்கு ஏற்படும் அபாயங்களை போக்கிடுமாறு
பரமனை மதித்திடா பங்கய ஆசனன்
ஒருதலை கிள்ளியே ஒழிந்த வானவர்
குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமுன்
புரிதரு வடுகனைப் போற்றி தெய்வமாகும்.
என்று கூறி வணங்கிடுவோம்.

நன்றி !!!

Friday, June 24, 2011

பைரவரை வழிபடுவோம் ! வளம் பெறுவோம் !!




இழந்த பொருட்களை மீண்டும் பெற: பைரவரின் சன்னதி முன்னால் (27) மிளகை வெள்ளைத் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாள் வழிபட்டால் இழந்த பொருட்களும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.
குழந்தைச் செல்வம் பெற: திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப் பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபடின் விரைவில் அத்தம்பதியருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும்.
சனி பகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்க: சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே, நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும்.
தடைபெற்ற திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும்:ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும். 6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைபட்ட திருமணம் கைகூடும். தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.
ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்: துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள். துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம். காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்டவருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார். எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.
மாதங்கள் துவாதச ஆதித்தியர்கள் ஆதித்தியர்களின் பிராண தேவதை:
சித்திரை அம்சுமான்  சண்ட பைரவர்
வைகாசி தாதா  ருரு பைரவர்
ஆனி ஸவிதா  உன்மத்த பைரவர்
ஆடி அரியமான்  கபால பைரவர்
ஆவணி விஸ்வான்  ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
புரட்டாசி பகன்  வடுக பைரவர்
ஐப்பசி பர்ஜன்யன்  ÷க்ஷத்ரபால பைரவர்
கார்த்திகை துவஷ்டா  பீஷண பைரவர்
மார்கழி மித்திரன்  அசிதாங்க பைரவர்
தை விஷ்ணு  குரோதன பைரவர்
மாசி வருணன்   ஸம்ஹார பைரவர்
பங்குனி பூஷா   சட்டநாத பைரவர்.

Wednesday, June 22, 2011

Bairavar Worship 2 - பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள் - 2



வியாழக்கிழமை: (தனுசு, மீனம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி சூன்யம் விலகும்.
வெள்ளிக்கிழமை: (ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
மாலையில் வில்வ இலைகளாலும், வாசனை மலர்களாலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி, செல்வப் பேறு கிட்டும்.
சனிக்கிழமை: (மகரம், கும்ப ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே சனிக்கிழமை அன்று இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லவை நடக்கும். கால பைரவர் உடலில் பூமியைத் தாங்கும் எட்டு நாகங்களும் மாலையாக இருந்து அலங்கரிப்பதால் இவரை வழிபட்டால் சர்ப்ப தோஷங்களும் நீங்கும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து அவரவர் வசதிக்கேற்ப தேங்காய், தேன், தயிர் அன்னம் படைத்து வழிபட்டு பிரசாதமாகப் பக்தர்களுக்கு விநியோகிக்க வழக்குகளில் வெற்றி, வியாபாரத்தில் லாபம் கிட்டும். எதிரிகளால் ஏற்படும் தொல்லை மற்றும் பில்லி, சூனியம் போன்ற மந்திரத் தொல்லைகளும் அடியோடு அகலும். அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகளை அழித்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்ட நாள் வாழலாம். தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம். பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

நன்றி !!! Dinamalar

Worship of Swarna Bairavar


சொர்ண பைரவர் வழிபாடு 



நீங்கள் செய்யும் தொழிலில் இறங்குமுகமாக இருக்கிறீர்களா? அல்லது கொடுத்த கடன்/பணம் திரும்ப வராததால் வறுமைக்குள்ளாகிவிட்டீர்களா?
அல்லது
தொழிலில் நொடித்துப்போகும் நிலை வந்துவிட்டதா?(மின்சாரம் வரும் லட்சணத்துக்கு இதை வேற குத்திக்காட்டணுமா? எனக் கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்) 
அல்லது 
உங்களது குடும்ப உறுப்பினர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் பிரிந்து வாழ்வதை மாற்றிட விருப்பமா
அல்லது 
அரசியலில் நீங்கள் நினைக்கும் பதவிக்கு வர விரும்புகிறீர்களா?
  
தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் சொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னிதியில் வழிபட்டு வர வேண்டும்.வசதியிருந்தால்,தேய்பிறை அஷ்டமியில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பாலாபிஷேகம்/இளநீர் அபிஷேகம் செய்வதற்குரிய பொருட்களை வாங்கித் தந்து அவரது சன்னிதியில் வழிபட வேண்டும்.  
 
நாளை  23.6.2011 வியாழக் கிழமையன்று தேய்பிறை அஷ்டமி நாளாக அமைந்துள்ளது.
 
பின்வரும் தமிழ்நாட்டுக்கோவில்களில் சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னிதிகள்
அமைந்துள்ளன.(வாசகர்களின் ஊர்களில் சொர்ண பைரவர் சன்னிதி இருந்தால் தகவல்
தெரிவிக்கவும்)
 
இந்த சன்னிதிகளில் உங்களுக்கு அருகிலிருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று
இந்த தேய்பிறை அஷ்டமியிலிருந்து வழிபடத் துவங்கவும்.ஒரே ஒரு தேய்பிறை
அஷ்டமியில் வழிபடத் துவங்கினாலே உங்களது பொருளாதார வளர்ச்சியை அடுத்த சில
நாட்களில் உணரலாம்.

திருச்சி மலைக்கோட்டை அருகிலிருக்கும் பெரியகடைவீதியில் உள்ள ஸ்ரீ சொர்ண பைரவநாதர், திருக்கோவில். 
 
படப்பை ஸ்ரீஜெயதுர்கா பீடம்,
 
காஞ்சிபுரம் அருகிலிருக்கும் அழிபடைதாங்கி,
 
சிதம்பரம் கனகசபை,
 
திருமயம் அருகிலிருக்கும் தபசுமலை,
 
திண்டுக்கல் அருகிலிருக்கும் தாடிக்கொம்பு கிராமத்தில் இருக்கும் சவுந்தர
ராஜப்பெருமாள் கோவில்,
 
தேவக்கோட்டை,விருதுநகர் ரயில்வே நிலையம் அருகே,
 
இராஜபாளையம் முடங்கியார் ரோட்டில் இருக்கும் ரேணுகாம்பாள் ஆலயம்(தாலுகா
அலுவலகம் எதிரே குறிப்பிட்ட சமுதாயத்தின் குலதெய்வம்)
 
ராஜபாளையம் தாலுக்கா சிவகிரியிலிருந்து சங்கரன் கோவிலுக்குச் செல்லும்
கிராமத்துப்பாதையில் அமைந்திருக்கும் தென்மலை
 
23.06.11 அன்று அதிகாலை 5.40 மணியிலிருந்து மறுநாள் 24.06.11 வெள்ளிக்கிழமை காலை 7.36 மணி வரை அஷ்டமி இருப்பதினால் வியாழக்கிழமை மதியம் 1.30 லிருந்து மாலை    3.00 வரை உள்ள ராகுகாலத்தில்  சொர்ண ஆகர்ஷண பைரவர் பூஜயில் கலந்து கொள்ள விரைவான,சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம்.
 
அடுத்த தேய்பிறை அஷ்டமி 23.07.11 சனிக்கிழமை தயாராக இருக்கவும்.

நன்றி !!!

Monday, June 20, 2011

Bairavar Worship 1 - பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள் ! - 1


ஞாயிற்றுக்கிழமை: (சிம்ம ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
தள்ளிப்போகும் திருமணங்களுக்குப் பரிகாரம் காண மணமகனோ, மணமகளோ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இராகு காலத்தில் (4.30-6.00) பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கித் திருமணம் கைகூடும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் இராகு காலத்தில் காலபைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நைவேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.
திங்கட்கிழமை: (கடக ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
வில்வார்ச்சனை செய்திட சிவனருள் கிட்டும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.
செவ்வாய்க்கிழமை: (மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளைத் திரும்பப் பெறலாம். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோயிலுக்குச் சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரைப் பொங்கல் செய்து, குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. பிறகு வீட்டிற்கு வந்து பூஜையறையில் பூஜை முடித்து, இனி என்னால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது என உறுதிமொழி எடுக்க வேண்டும். சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பதுதான்.
புதன்கிழமை: (மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)
நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும்.

நன்றி !!! தினமலர் 

Saturday, June 18, 2011

Importance of Bairavar Worship - பைரவர் வழிபாடும் அதன் சிறப்புகளும் !



கும்பகோணம் - திருவாரூர் பாதையில் உள்ள திருச்சேறைத் தலத்திலுள்ள சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் கால பைரவர் அற்புதமாகக் காட்சியளிக்கிறார். அவரை வழிபட்ட திருநாவுக்கரசர், பைரவரைப் போற்றிப் பாடிய ஒரே ஒரு தேவாரப்பதிகம் இது.
விரித்த பல்கதிர்கொள் சூலம்
வெடிபடு தமருகம்கை
தரித்ததோர் கோலகால பயிரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திருமேனி வாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே
பைரவர் வழிபாடும் அதன் சிறப்புகளும்: படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஆற்றும் இந்த பைரவரின் வழிபாடு வடக்கேயிருந்து வந்த கபாலிக வழிபாட்டின் ஒரு பகுதியாகும். அனைத்து சிவாலயங்களில் பரிவார தெய்வ வழிபாடாக வழிபடப்படும் இந்த பைரவ வழிபாடு இல்லங்களில் திரிசூல வழிபாடாகவும் போற்றப்படுகிறது. வீடுகளில் காவல் தெய்வமான பைரவர் வடிவங்களை சிலைகளாகவோ படமாகவோ வைத்து வழிபடுவதற்குப் பதில் வீட்டின் சுவரில் திரிசூலத்தை வரைந்து அதனருகில் திருவிளக்கேற்றி வழிபடுகின்றனர். அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு சூரியனிடமிருந்து ஆரம்பித்து அர்த்தசாமப் பூசையாக பைரவருடன் முடிவடைகிறது. இரவு அர்த்தசாமப் பூசை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம். பாதுகாப்பற்ற இந்நாளில் இப்படி சாவிகளை வைப்பதைத் தவிர்த்து பூசை முடிந்ததன் அடையாளமாக கைமணியையும் அபிஷேக கலசம் அல்லது கைச்செம்பையும் வைக்கின்றனர். ஆலயங்களில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. விசேஷ தினங்களில் இவருக்கு நெய்யபிஷேகம் சிறப்பாகச் செய்யப்படுகிறது. அந்த விசேஷ தின பூசையில் எட்டுவித பட்சணங்களும், எட்டுவித அன்னங்களும், நைவேத்தியப் பொருட்களாக நிவேதிக்கப்படுகின்றன. இன்னும் எட்டுவித மலர்களால் அர்ச்சனை செய்து எட்டுவித ஆரத்திகளும் செய்யப்படுகின்றன.
வழிபாட்டிற்கு உகந்த நேரம்: பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகின்றாராம். அவளுடன் இறைவனும் பைரவராக தலத்தை வலம் வருவாராம். அதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றார்களாம்.

Thursday, June 16, 2011

Bairavar History & Method of Worship 7 - பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்! - 7


கால பைரவர்: காசி கோயிலில் பைரவர்தான் பிரதானமாகக் கருதப்பட்டு வணங்கப்படுகிறார். சனீஸ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர். சனீஸ்வரன், சூரியன் மகனான யமதர்மனால் அலட்சியப்படுத்தப்பட்டு கௌரவக் குறையை அடைந்தார். அவருடைய தாய் சாயாதேவியின் அறிவுரைப்படி பைரவரை வழிபட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப் பதவி கிடைக்கப் பெற்றார். ஆகையால் பைரவர் சனீஸ்வரருக்கு குருவாக விளங்கியும் அருள்பாலிக்கிறார்.
ஸ்வர்ணாகர்ஷண பைரவர்: ஸ்வர்ணாகர்ஷண பைரவர் சிவனின் பிரதிபிம்பம் என்று புராணம் கூறும். ஸ்வர்ணாகர்ஷண என்றால் எளிதில் கவரக்கூடிய என்று பொருள். இவர் செந்நிற மேனியையும் அல்லது மலர்ந்த தாமரை மலர் முகம், பொன்னிற சடை, முடியில் பிறைச்சந்திரன், கரங்களில் தாமரை, அமுத கும்பம், மணிகள் பொதிந்த சங்கம், அபயம், வரதத்தோடு பொன் சொரியும் குடத்தை ஒரு கரத்தால் தாங்கி, மறுகரத்தால் தம்மை தழுவும் ஆதி சக்தியை ஒரு புறத்துத் தழுவியவர் என ஆகமம் கூறுகிறது. ஸ்வர்ணாகர்ஷண பைவர மூர்த்தி அம்பாளுடன் சேர்ந்து அருள்பாலிப்பார். பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் அருளும் அம்பிகை மகா ஸ்வர்ண பைரவி. பொன் சொரியும் குடம் ஏந்தியவள். அபயம் தரும் முத்திரை கொண்டு ஸ்வர்ண பைரவருடன் இணைந்து அருள்பாலிக்கிறார். வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது. தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். இவரை நம்பிக்கையுடன் வழிபவுவதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம் மற்றும் பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியைப் பெறலாம். நம்பிக்கையுடனும், பக்தியுடனும் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டதி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்த வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுகிறார்கள். தினந்தோறும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும்.
ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு ஏற்ற நைவேத்தியம்: வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தரும். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும் தன விருத்தியையும் அடைவார்கள். பவுர்ணமியன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக்கொண்டு பதினெட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். ஒன்பதாவது பவுர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம். கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்பொழுது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.

நன்றி !!! தினமலர் 

Tuesday, June 14, 2011

Bairavar History & Method of Worship 6 - பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்! - 6



பிரமன் தலையைக் கொய்தது (காசி காண்டத்தில்): சிவபெருமானுக்கு இருப்பது போலவே, ஒரு காலத்தில் பிரம்மாவுக்கு ஐந்து தலைகள் இருந்தன. அதனால் சிவபெருமானுக்குத் தான் எந்தவிதத்திலும் குறைந்தவரில்லை என்று பிரம்மா கர்வம் கொண்டிருந்தார். இந்த ஐந்து முகத்துடன் அடிக்கடி கயிலையம்பதிக்கு வந்து போய்க் கொண்டிருக்க, சில சமயங்களில் கயிலைக்கு வருவது சிவனா அல்லது பிரம்மாவா என பார்வதி தேவி குழப்பமடைந்தார். சிவபெருமான் என நினைத்து பார்வதி தேவி பரபரப்புடன் வணங்குகையில், பிரம்மா ஆணவத்துடன் சிரித்துக் கொண்டே செல்வது குறித்து பார்வதி தேவி சிவபெருமானிடம் முறையிட்டார். பிரம்மாவின் செருக்கை சிவபெருமான் அறிந்தவராதலால் அவர் தானே திருந்தட்டும் என்று பொறுமை காத்தார். அவ்வாறிக்கையில் மேரு மலையில் திருமாலிடம் பிரம்மா தன்னை சிவபெருமான் என கருதி பார்வதி தேவி எழுந்து மரியாதையுடன் வணங்கியதைத் தெரிவித்து கேலி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு குழுமியிருந்த தேவர்களும், முனிவர்களும் அவர்களைச் சூழ்ந்து பரப்பிரம்மன் என்பது யார்? என்று கேட்டனர். அதற்கு பிரம்மா, ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதி தேவியே என்னைக் கண்டு எழுந்து வணங்குகிறார்கள் என்றால் பரப்பிரம்மம் நானாகத்தான் இருக்க முடியும் என்பது உங்களுக்குப் புரியவில்லையா? மேலும் பரப்பிரம்மனை என்பதில் என் பெயர் பிரம்மா இருப்பது நானே பரப்பிரம்மன் என்பதைப் புலப்படுத்தவில்லையா? என்றார்.
பிரம்மனின் பதில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் திகைப்பைத் தந்தது. சிவபெருமானைப் பரம்பொருள் என்று கூறுவார் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக பிரம்மா தன்னையே பரப்பிரம்மம் என்று குறித்துக் கொண்டது அவர்களுக்கு ஆச்சரியமளித்தது. சரி திருமால் என்ன சொல்கிறார் என்று திருமாலின் பக்கம் திரும்பினர். உன்னைப் பெற்றெடுத்தவள் நான். அப்படி இருக்கும்போது நீ எப்படி பரம்பொருள் ஆக முடியும். பிறப்பு இறப்பு அற்றவர்தானே பரம்பொருள். நீ என்னிடமிருந்து பிறந்ததால் நீ பரம்பொருளாக இருக்க முடியாது. பிறப்பு இறப்பற்ற நானே பரம்பொருள் என்று திருமால் தெரிவித்தார். சிவனே பரம்பொருள் என்பதை உணர்த்த வேண்டி தாங்கள் கேட்ட கேள்விக்கு, சிவனே பரம்பொருள் என்று அவர்களிருவரும் கூறுவார்கள் என்று எதிர்பார்த்தால், இருவருமே பரம்பொருள் என்று ஒருவரை ஒருவர் வாதிட்டுக் கொள்வது முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் கவலையைத் தந்தது. அதனால் வேதத்திடமும் பிரணவத்திடமும் அவர்கள்  முறையிட்டனர். வேதமும், பிரணவமும் பிரம்மா, திருமால் ஆகிய இருவரிடமும், எல்லா உலகங்களுக்கும் சிவபெருமானே பரம்பொருளாயிருக்க நீங்கள் இருவரும் இப்படி பொருத்தம் இல்லாமல் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்களே என்று கூறின. அப்படியும் அவர்கள் இருவரும் தம் வாதத்தை கைவிடத் தயாராக இல்லை. இவர்களிருவரும் இப்படி சண்டையிடுவதைக் கண்ட சிவபெருமான் அவர்களின் நடுவிலே ஜோதி வடிவில் காட்சியளித்தார். அவர்களோ அதனை ஏதோ ஓர் சுடர் என்று அலட்சியம் செய்தனர். ஆயினும் சிவபெருமான் பார்வதியுடன் அந்தச் சுடரிலே காட்சியளித்தார். அதனைக் கண்ட திருமால் ஐயம் தீர்ந்தவராய் சிவபெருமானே பரப்பிரம்மா என்பதை உணர்ந்தவராய் அவரைப் பணிந்து வணங்கினார். ஆனால் பிரம்மாவோ, என்னைப்போலவே ஐந்து தலைகள் கொண்டிருக்கும் சிவபெருமான் என்னைவிட எந்தவிதத்தில் உயர்ந்தவர். ஆகவே நான்தான் பரம்பொருள் என்று மார்தட்டினார். ஆணவத்தின் காரணமாகத் தன்னை இகழ்ந்த பிரம்மாவுக்குத் தகுந்த புத்தி புகட்டிட பைரவக் கடவுளை அந்த இடத்திலே தோன்றச் செய்தார். தன்னுடைய நடுச்சிரத்தின் மூலம் சிவபெருமானை இகழ்ந்து பேசிய பிரம்மனின் நடுச்சிரம் பைரவரின் நக நுனியால் கிள்ளி எடுக்கப்பட்டது.
தலை அறுபட்ட பிறகுதான் பிரம்மாவுக்குப் புத்தி வந்தது. அகந்தையால் தான் பேசிய பேச்சினை மன்னிக்குமாறு சிவனிடம் கோரினான். தன்னுடைய ஆணவத்தை அடக்கியதற்குச் சான்றாக தன்னுடைய ஐந்தாவது தலை அவருடைய கையிலேயே இருக்கட்டும் என்று பிரம்மா கேட்டுக் கொண்டார். ஐந்து முகங்களைக் கொண்டிருந்த பிரம்மா இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே அன்று முதல் நான்முகன் என்று அழைக்கப்பட்டார். பிரம்மனின் தலை பைரவரால் கிள்ளி எறியப்பட்டதால் அவருக்குப் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கின்றது. பிரம்மனின் தலை பைரவரின் கையில் ஒட்டிக்கொள்கிறது. பிரம்மனின் கபாலம் சுமந்த கையினராய் பைரவர் உலகம் முழுவதும் அலைந்து திரிந்து நர்மதா நதிக்கரைக்கு வருகின்றார். பின்னர் அங்குள்ள முனிவர்களை வணங்கி, தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் விலகும் வழியைக் கேட்க, அவர்களும் நீங்கள் காசிக்குச் சென்றால் உங்கள் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்று கூறுகின்றனர். முனிவர்களின் அறிவுரைப்படியே பைரவர் காசிக்குச் செல்கின்றார். காசியின் எல்லையை மிதித்த உடனேயே பைரவரின் கையில் உள்ள பிரம்ம கபாலம் தெரித்து விழுகின்றது. அங்கே அவரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. அதுவரை கபால பைரவர் (கையில் பிரம்மனின் தலையைத் தாங்கியிருந்தமை யால்) என்றழைக்கப்பட்டவர் அதன்பிறகு காலபைரவராகி காசியிலேயே நிரந்தரமாகத் தங்கி பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருக்கிறார்.
காசியில் கால பைரவர் அதிகாரம்: இராவணனை வதம் செய்ததால் ராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்துடன் முடிசூட்டு விழா செய்வது நல்லதல்ல என்று ராமன் கருதினார். அதற்குப் பரிகாரமாக காசியிலிருந்து உருவான சுயம்புலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்று முனிவர்கள் யோசனை கூறவே ராமன் தன் அருகில் நின்று கொண்டிருந்த அனுமனிடம், நீ உடனே காசிக்குப் புறப்பட்டுச் சென்று ஒரு சுயம்புலிங்கத்தைப் கொண்டு வா! என்று கூறினார். அனுமனும் ராமபிரானின் கட்டளைப்படியே காசியை நோக்கிப் புறப்பட்டார். ஆந்திர மாநிலம் சித்தூர் என்னும் மாவட்டத்தில் உள்ள இராமகிரி என்னும் இத்தலம் இராமாயண காலத்தில் திருக்காரிக்கரை என்று வழங்கப்பட்டது. இதனை காளிதேவி சமேத காலபைரவர் ஆட்சி செய்கிறார். ராமனுக்காக சுயம்புலிங்கம் எடுக்க அனுமன் காசிக்குச் செல்லும் விபரத்தைத் தன் ஞானக்கண்ணால் உணர்ந்த காலபைரவர் அனுமன் கையால் முதலில் கொண்டு வரப்படும் அந்த காசிலிங்கம் தன்னுடைய இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக சில முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். முதலில் சூரிய பகவானிடம் சென்று அனுமன் காசியிலிருந்து இந்தப் பக்கமாகத் திரும்பி வரும்பொழுது அவரது முழு சக்தியுடன் நன்கு பிரகாசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பிறகு கங்காதேவியை அணுகி, தாயே ! அனுமன் காசியிலிருந்து திரும்பிவரும் போது காசி முதல் இந்தத் தலம் வரையில் அனுமனின் கண்களில் படாமல் ஒளிந்திருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அதற்குக் கங்கையும் உடன்பட்டாள்.  அடுத்து வாயு பகவானிடம் சென்று வாயுதேவா! அனுமன் காசியிலிருந்து திரும்பும்போது காசியிலிருந்து திருக்காரிக்கரை வரை தாங்கள் பலமான காற்றை வீசி நல்லது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வாயு தேவனும் பைரவர் கோரிக்கைக்குச் சம்மதித்தார். இறுதியாகத் தன் இருப்பிடம் திரும்பி திருக்காரிக்கரை மக்களின் கனவில் தோன்றி நாளை சூரியோதயம் முதல் மதியம் வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.
கால பைரவரின் இத்திட்டங்களை அறியாத அனுமன் காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராடி காசி விசுவநாதரைத் தரிசித்து அங்கிருக்கும் சுயம்பு லிங்கங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு வான்மார்க்கமாக இராமேசுவரம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் கால பைரவருக்குக் கொடுத்த வாக்கின்படி வானத்தில் சூரியன் உதயமாகி கடுமையான வெப்பத்தைச் சிந்தினான். வாயுவோ தன் பங்கிற்கு தென் திசையிலிருந்து வட திசையை நோக்கி ஊழிக்காற்று போல வீசத் தொடங்கினான். கங்காதேவியும் ஆஞ்சநேயரின் கண்களில் படாதவண்ணம் ஒளிந்து கொண்டாள். வெய்யிலின் கடுமை, காற்றின் எதிர்வேகம், சிவலிங்கத்தின் பாரம் இவைகளைத் தாங்காமல் மிகவும் களைப்படைந்த அனுமன் குடிக்கத் தண்ணீர் தேடி அலைந்தார். இந்தச் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த கால பைரவர், மாடு மேய்க்கும் சிறுவனாக வடிவம் கொண்டு, அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அனுமனும், அந்த சிறுவனை அழைத்து, தம்பி! எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது. தண்ணீர் இருக்கும் இடத்தைக் காண்பிப்பாயா? என்று கேட்டார். சிறுவனும் அனுமனை சிறிது தூரம் அழைத்துச் சென்று கங்காதேவியைத் தோன்ற நினைத்துக் கொண்டார். அவரின் விருப்பப்படியே கங்காதேவி அருணா நதியாக சிறிது தூரத்தில் ஓடத் தொடங்கினாள். காளிங்க மடுக்கரையில் அருணா நதியைக் கண்டு மகிழ்ச்சியடைந்த அனுமன் அந்த மகிழ்ச்சியில் கையில் வைத்திருந்த சிவலிங்கத்தை சிறுவன் வடிவிலிருந்த கால பைரவரிடம் கொடுத்து, தான் தண்ணீர் அருந்திவிட்டு வரும் வரை அதனை வைத்திருக்கும்படி வேண்டினார். சிறுவனும், ஐயோ நானோ சிறுவன்; அதிக நேரம் இந்த பாரத்தைக் கையில் வைத்திருக்க இயலாதே என்றான். அனுமனும் உனக்கு சிரமம் தெரியாதிருக்க வரம் தருகிறேன் என்று சொல்லி காளிங்க மடு அருகினில் நீரருந்தச் சென்றார். குறிப்பிட்ட நல்ல நேரத்தில் லிங்கத்தை வாங்கிச் செல்ல அனுமன் காத்திருந்தார். ஆனால் அதே நல்ல நேரத்தில் அங்கு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்துவிட்டு, மன நிறைவுடன், பாரம் தாங்காமல் லிங்கத்தை பூமியின் மேல் வைத்து விட்டேன் என்று கூறிவிட்டு சிறுவன் ஓடிவிட்டான். சிறுவனின் குரல் கேட்டு அனுமன் திடுக்கிட்டார். ஆனாலும் பூமியில் வைத்த லிங்கத்தை எடுப்பது ஒன்றும் சிரமமான காரியமல்லவே, சஞ்சீவி மலையையே எடுத்து வந்த எனக்கு இந்தப் பூமியிலிருந்து எடுப்பது என்ன பளுவா? என்று கர்வத்துடன் லிங்கத்தை வாலால் சுற்றி எடுக்க முயன்றார். ஆனால் அவரால் சிவலிங்கத்தை எடுக்க முடியவில்லை. ஆணவத்தால் தான் அலட்சியமாக சிவலிங்கத்தை எடுக்க முயன்றதற்கு சிவனாரிடம் மன்னிப்பு கேட்டவாறு இருகை கூப்பி பணிவுடன் வணங்கி நின்றார். அனுமனை மன்னித்த சிவபெருமானும், நான் நல்ல முகூர்த்த நேரத்தில் இந்த இடத்தில் அமர்ந்து விட்டதால் நீ பூசிப்பதற்கு வேறொரு காசி லிங்கத்தை எடுத்துக்கொண்டு போ என்று ஆணையிட்டார். அப்பொழுது இயற்கைச் சூழ்நிலை சாதாரண நிலைக்குத் திரும்பியது. திடீரென நிகழ்ந்துவிட்ட இயற்கை மாற்றத்திற்கு என்ன காரணம் என்று யோசிக்கையில், இது கால பைரவரின் ÷க்ஷத்திரம். அவர்தான் காசியிலிருந்து எடுத்து வந்த சுயம்புலிங்கத்தை இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக இப்படி நடந்து கொண்டார் என்ற உண்மை அனுமனுக்குத் தெள்ளத் தெளிவாகியது.
ராமரின் கட்டளையை நிறைவேற்றுவதற்கு தனக்கு இடையூறாக இருந்தது இந்த காளிங்க மடுதான் என்று கோபம் கொண்டு, அருகில் இருந்த காரிகிரி என்ற மலையைப் பெயர்த்து எடுத்து அந்த மடுவில் போட்டு, இந்த நதிப்பகுதி வனம் சூழ்ந்த பகுதியாக மாறட்டும் என்று சாபமளித்தார் அனுமன். இராமேசுவரத்தில் எல்லோரும் காசி லிங்கத்திற்காகக் காத்திருப்பார்கள் என்பதால் நேரத்தை வீணாக்காமல் மறுபடியும் காசிக்குச் சென்றார். இந்த முறை காசியில் தெரிந்த காட்சிகள் அனுமனுக்கு ஆச்சரியமளித்தது. காரணம் காசியில், கங்கைக் கரையில் எங்கு நோக்கினும் இலிங்கங்களாகவே காட்சியளித்தன. இந்த லிங்கங்களில் எது சுயம்புலிங்கம் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் அனுமன் திணறினார். அப்போது ஒரு குறிப்பிட்ட இலிங்கத்திற்கு மேலே கருடன் வட்டமிட்டது. அதே நேரம் பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புகளினால் அதுவே சுயம்புலிங்கம் என்பதை உணர்ந்த அனுமன் அதனை எடுக்க முயன்றார். காசியின் காலபைரவராகிய தன்னிடம் அனுமதி ஏதும் பெறாமல் அனுமன் இலிங்கத்தை எடுக்க முயல்வது கண்டு கோபமடைந்த கால பைரவர், என் அனுமதி இல்லாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம் என்று அனுமனைத் தடுத்தார். முதல்முறை சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு போகும்போதும் இந்த பைரவர் ஏதோ சூழ்ச்சி செய்து காளிங்க மடுவில் தடுத்துவிட்டார். இப்பொழுது மறுபடியும் தன்னுடைய முயற்சிக்குத் தடை செய்கிறார் என்று கோபமடைந்த அனுமன் கால பைரவரைத் தாக்கத் தொடங்கினார். ஆணவத்தால் செய்த போராகையால் அனுமனுக்குத் தோல்வியே கிட்டுகிறது. அந்த சமயத்தில் அங்கு வந்த முனிவர்கள் பைரவரை வணங்கி, உலக நன்மைக்காகவும், இராமனின் பெருமைக்காகவும் இந்தச் சிவலிங்கம் தென்னாடு போக அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். அனுமனும், விரைவாக எடுத்துச் செல்ல வேண்டுமென்பதாலேயே அவரின் அனுமதி பெறாமல் சிவலிங்கம் எடுக்க முனைந்ததைக் கூறி மன்னிப்புக் கோரினார். கால பைரவரும் மகிழ்ச்சியடைந்து சிவலிங்கத்தை அனுமனுக்குக் கொடுத்தனுப்பினார். தன் அனுமதி பெறாது இலிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணைபுரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக் கூடாது என்றும், சுயம்புலிங்கத்தை அனுமனுக்கு உறுதி செய்த பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் கால பைரவர் சாபமிட்டார். அவரின் அந்த சாபப்படியே இன்றும் காசியின் நகர எல்லையில் கருடன் பறப்பதில்லை. அங்கே பல்லிகளும் ஒலிப்பதில்லை.


நன்றி !!! தினமலர்