Tuesday, June 5, 2012

திரிபுர பைரவர் வழிபாடு !


சிவபெருமானின் அட்ட வீரட்டக் கோலங்கள் எட்டும் பைரவ கோலங்களே. இதில் பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எடுத்த கபால பைரவர் பற்றிய குறிப்புகள் உள்ளன. அந்தகாசூர வதத்தின்போது அவர் திரிசூல பைரவராக வெளிப்பட்டு நெடுஞ்சூலத்தில் அவனைக் குத்தித் தூக்கிக் கொண்டு மூவுலகிலும் பவனி வந்தார்.

யானையை உரித்து வீரம் விளைத்த கஜசம்ஹார கோலம், கோலகால பைரவரென்று தேவாரத்துள் குறிக்கப்படுகிறது. அப்பர் சுவாமிகள் வேழம் உரித்த விகிர்தனான சிவபெருமானைப் போற்றித் திருச்சேறையில் அருளிய பதிகத்தில் பைரவனாகவே போற்றுகின்றார்.

இது போன்றே முப்புரங்களைத் தீயூட்டி திரிபுராதிகளை அழித்து மீண்டும் அவர்களுக்கு அருள் புரிந்த திருக்கோலமே திரிபுர பைரவர். இதில் வில்லேந்திய கோலத்தில் அவர் விளங்குகிறார். டமருகம்(உடுக்கை), பாசமாகிய முத்தலைப் பாம்பு, வாள், கேடயம், திரிசூலம், கபாலம், வில் அம்புடன் காட்சி தருகிறார்.

இந்தக் கோலத்தில் அவர் நின்றபோது, தேவர்கள் அவரைக் கண்டு அச்சத்தால் துவண்டு சரணடைந்து போற்றித் துதித்ததே ஸ்ரீருத்ரம். அதுவே யசூர் வேதத்தின் மையப்பகுதி. தேவர்களின் ஸ்ரீருத்ர தோத்திரத்தாலும்,அவர்களின் வேண்டுகோளாகிய சமகத்தாலும், மகிழ்ந்து சிவபெருமான் அவர்கள் வேண்டிய வரங்களை அளித்தார் என்று சிவமகாபுராணம் கூறுகிறது.

சகல செல்வங்களையும் தந்து மகிழ்ச்சியை அருளும் திரிபுர பைரவரை வணங்கினால், மேலான வாழ்வு பெறலாம். திரிபுரங்களை எரித்த பின், அந்தச் சாம்பல் படிந்து எங்கும் வெண்மையாக இருந்தது.

அந்த வெண்மையான இடத்தில் பெருமான் பிரம்மன் கீழ் திரிபுர தாண்டவத்தை ஆடினான். பின்னர் தனது உக்கிர வடிவை மாற்றி ஆனந்த வடிவாக நின்றான். அந்த வடிவை புராணங்கள் திரிபுராந்தகன் என்று கொண்டாடுகின்றன.

No comments: