Sunday, November 20, 2011


புண்ணியதேசமான காசியம்பதியை அறிவோம். அந்த தேசத்தைக் கட்டிக் காத்தருள்பவர், ஸ்ரீகால பைரவர். புண்ணிய ஸ்தலத்தைக் காபந்து செய்யும் இவரின் திருச்சந்நிதியில் வேண்டிக்கொண்டு, காசி கயிறு எனப்படும் திருஷ்டிக் கயிற்றைக் கையில் கட்டிக்கொண்டால், நமக்குக் கைகொடுத்து, துயரங்களிலிருந்து நம்மைக் கரையேற்றிவிடுவார், ஸ்ரீகால பைரவர்.

சிவனாரின் அம்சமான ஸ்ரீகால பைரவர், ஆணவத்தால் தலை கால் புரியாமல் ஆடிய ஸ்ரீபிரம்மனின் ஒரு தலையைக் கொய்தார். இதனால் பிரம்மஹத்தி தோஷத் துக்கு ஆளாகி, புண்ணியத் தலங்கள் பலவற்றுக்கும் சென்று வழிபட்டார்; புனித குளத்தில் நீராடினார். பலனில்லை. இறுதியாக, காசியம்பதிக்கு வந்து, கங்கையில் நீராடி, சிவ தரிசனம் செய்த பிறகுதான், அவரின் தோஷம் நீங்கியது என்கிறது ஸ்தல புராணம். இதையடுத்து, இங்கே ஸ்ரீகால பைரவருக்கு அழகிய ஆலயமும் உருவானது. காசியின் முக்கியப் பகுதியான மைதாகினியில் உள்ள ஸ்ரீவிஸ்வேஸ்வர் கன்ச்சில் அமைந்துள்ளது இந்த ஆலயம். உள்ளே நுழைந்ததும், வெள்ளிக் கவசத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகால பைரவரின் திருமேனியை கண்ணாரத் தரிசிக்கலாம்.




''ஸ்ரீகால பைரவர் சுயம்புத் திருமேனி. 'இவருடைய அனுமதியில்லாமல், காசியில் காற்று கூட நுழையாது; காசி மரத்து இலைகள்கூட அசையாது’ என்றொரு சொல் வழக்கு உண்டு. இவரை வணங்கினால், பஞ்சமா பாதகங்களும் விலகிவிடும்; முக்தி கிடைக்கப் பெறலாம். இங்கு இவருக்கு சைவ- அசைவ உணவு ஆகிய இரண்டுமே படைக்கப்படுகின்றன. அஷ்டமி, சதுர்த்தசி மற்றும் அமாவாசை ஆகிய நாட்களில் இவரை வழிபடுவது சிறப்பு'' என்கிறார் பைரவர் கோயிலின் பரம்பரை அர்ச்சகர் விஸ்வநாத் பாண்டே.




காசி, அனுமன்காட்டில் உள்ள சங்கரமடத்தில் சேவையாற்றி வரும் பி.ஆர்.நாராயணசாமி நம்மிடம், '''காசியில் கால பைரவர், அசிதாங்க பைரவர், பூத பைரவர், பீஷ்ண அல்லது சண்ட பைரவர், கபால பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், ருரூ பைரவர், சம்ஹார பைரவர் மற்றும் ஆனந்த பைரவர் என பத்து விதமான பைரவர் கோயில்கள் உள்ளன. இவர்களில், காலத்துக்கு அதிபதியான
கால பைரவர் சக்தி வாய்ந்தவர். இவரை வழிபட, எதிரிகளின் தொல்லை ஒழியும்'' என்றார். 'ஸ்ரீகால பைரவரை வணங்கு; காசி கயிற்றைக் கட்டு’ என்பார்கள். காசிக்குச் சென்று, ஸ்ரீகால பைரவரை தரிசிக்க இயலாதவர்கள்கூட, அங்கிருந்து பிரசாதமாகக் கொண்டு வரப்பட்ட காசி கயிற்றை, மனதாரப் பிரார்த்தித்துக் கட்டிக் கொண்டால், கவசமென அந்தக் கயிறு நம்மைக் காக்கும்!  
இதோ... வந்துவிட்டது தீபாவளித் திருநாள். வாசகர்கள் பூரண நலமுடன் வாழ, ஸ்ரீஅன்னபூரணி குடிகொண்டிருக்கும் காசியம்பதியின் ஸ்ரீகால பைரவர் திருச்சந்நிதியில் பிரத்யேகமாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதில் காசி கயிறுகள் வைத்தும் பூஜிக்கப்பட்டது. அந்தக் காசி கயிறு பிரசாதம் இப்போது உங்கள் கைகளில்!
கூடவே, உலகுக்கே படியளக்கும் ஸ்ரீஅன்னபூரணியின் தாய்மையும் கருணையும் ததும்புகிற திருமுகம் கொண்ட அழகிய ஸ்டிக்கரும் உங்கள் கரங்களில்! காசி கயிற்றைக் கட்டிக்கொண்டு, தீப ஒளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்; ஸ்ரீகால பைரவர் உங்கள் குடும்பத்தைக் காவலனாக நின்று காப்பார்!  
படங்கள்: ராஜேஷ்குமார் சஹானி

நன்றி !!! சக்தி விகடன் 

No comments: