Friday, June 3, 2011

Bairavar History & Method of Worship 1 - பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்! - 1



எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் - அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்தக் கடவுளே ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகை காக்கின்றார். அதன்பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். இவருக்குத் தகுந்த பூசைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எந்தவிதமான பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.

பைரவர் வழிபாடு ஏன்?
பைரவர் வழிபாடு கைமேற் பலன்
இது தமிழகத்தில் வழங்கி வரும் பைரவர் வழிபாடு குறித்த ஆன்மீக மொழியாகும். துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப் பிடிக்காமல் அதனைத் தீர்த்துவிடத்தான் மனம் ஏங்கும். அப்படி சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அமுத மொழியாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது. கடவுள் வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார். அதனால் தான் பைரவர் வழிபாட்டின் பலனைக் குறிக்க இந்தப் பழமொழி வழங்கப்பட்டது. நவக்கிரகங்களின் வக்கிரத்தால் பலர் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தை அடைகிறார்கள். அதுவே அவர்களின் நல்ல பார்வையால் சிலர் எதிர்பாராத நன்மைகளையும், புகழையும் அடைகிறார்கள். நன்மைகள் கிடைத்தால் சரி, ஆனால், வரும் துன்பங்களிலிருந்து மீள என்ன வழி என்று கேட்டால் பைரவர் பூசை செய்யுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பைரவர் பூசை செய்வதனால் கடுமையான தோஷங்களும் நீங்கும் என்று பைரவர் வழிபாட்டில் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. நமது ஜாதகத்தை தகுந்த சோதிடர்களிடத்தில் காண்பித்து நிலவும் கிரக நிலைகளை ஆராய்ந்து, எந்தக் கிரகத்தால் தோஷம் உள்ளதோ, அல்லது எந்தக் கிரகம் பலவீனமாக உள்ளதோ, அது பலமடைய எந்தக் கிரக திசாபுத்தி நடப்பில் உள்ளதோ அதற்குரிய பைரவரை வழிபட்டு நலம் பெறுதல் வேண்டும். நவக்கிரகங்களின் தொல்லைகளிலிருந்து மீள ஒன்பது விதமான பைரவ வழிபாடுகள் பரிகாரங்களாக சோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளன.நீங்கள் நல்ல பயனை அடைய, கிரகங்களின் பிராணனாக உள்ள பைரவரின் காயத்ரீயையும், அந்த பைரவரின் உபசக்தியின் காயத்ரீயையும் சேர்த்து துதித்து வந்தால் உங்கள் துன்பங்கள் யாவும் ஓடி ஒளியும். இன்பங்கள் எல்லாம் தேடி வரும்.

நவக்கிரக பைரவர்களும் உபசக்திகளும்
நவக்கிரகங்கள் -பிராண பைரவர் - பைரவரின் உபசக்தி


1. சூரியன்-சுவர்ணாகர்ஷணபைரவர்- பைரவி
2.
சந்திரன் -  கபால பைரவர்- இந்திராணி
3.
செவ்வாய்- சண்ட பைரவர்- கௌமாரி
4.
புதன்- உன்மத்த பைரவர்- வராஹி
5.
குரு - அசிதாங்க பைரவர் - பிராமஹி
6.
சுக்கிரன்- ருரு பைரவர்  - மகேஸ்வரி
7.
சனி - குரோதன பைரவர்- வைஷ்ணவி
8.
ராகு - சம்ஹார பைரவர் - சண்டிகை
9. 
கேது - பீஷண பைரவர்- சாமுண்டி    

நன்றி !!! தினமலர்    

No comments: