Tuesday, February 1, 2011


தொடர்ச்சி........................................



கால பைரவர்:


மற்றொரு வரலாறும் பைரவர் பற்றிக் கூறப்படுகின்றது. சம்பாசுரனை வதம் செய்வதற்காக, சஷ்டித்திதி அன்று, சிவபெருமானின் மூர்த்தமாக, கால பைரவர் அவதரித்து அவனை வதம் செய்ததாகக் கூறப்படுகின்றது. அதனால் தான் 'சம்பா சஷ்டி' என்பது பைரவருக்கான விழாவாக ஒரு ஆலயத்தில் கொண்டாடப்படுகின்றது.

அந்த ஆலயம்...

துர்வாசபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. அந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில்,திருமயம் (ஊமையன் கோட்டை புகழ்) என்னும் ஊருக்கருகே, பொன்னமராவதி செல்லும் வழியில் அமைந்துள்ளது. கீழச்சிவல்பட்டியிலிருந்து, குருவிக்கொண்டான்பட்டி வழியாக ராங்கியம் என்னும் ஊர் செல்லும் பாதை வழியாகவும் வரலாம்.

இறைவன் பெயர் போன்றவை நினைவில்லை. ஏனெனெனில் நான் சிறுவனாக இருந்த பொழுது சென்ற ஆலயம் அது. ஆனால் பைரவர்க்குக் கொண்டாடப்படும் விழாவும் அன்றுவழங்கப்படும் பிரசாதமான சம்பாச் சாதமும் இன்னமும் நினைவில் இருக்கின்றது.

விழா:

சம்பாசுரனை, இறைவன் கால பைரவராக அவதரித்து வதம் செய்ததற்காக, இவ்விழா ஒவ்வொரு வருடமும், கார்த்திகை மாதச் சஷ்டித்திதி அன்று கொண்டாடப்படுகின்றது. முருகனுக்கு எப்படி ஐப்பசி மாதச் சஷ்டித்திதி என்பது கந்த சஷ்டியாக விசேடமோ அது போன்று இங்குள்ள பைரவருக்கு கார்த்திகை மாதச் சஷ்டி விழா சம்பா சஷ்டியாக விசேடம். சுற்றுப் புற கிராமங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் இவ்வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவின் இறுதி நாளன்று 'சம்பாச் சாதம்' செய்து, இறைவனுக்கு நைவேத்தியம் செய்த பின்னர் மக்களுக்கு விநியோகம் செய்கின்றனர். (சம்பாச் சாதம் என்பது, சாதத்துடன், நெய், மிளகு, சீரகம் போன்றவற்றைக் கலந்து செய்வதாகும். சற்றேறக்குறைய நம் வெண் பொங்கல் போல இருக்கும். அதன் ருசி இன்னமும் எனக்கு நாவில் இருக்கின்றது)

துருவாசபுரம் என்ற பெயருக்கும் ஒரு காரணம் இருக்கின்றது. துருவாச முனிவர் வழிபட்ட தலம் எனவும், அவர் தவம் செய்த இடம் என்றும், அவர் ஜீவ சமாதி உள்ளது என்றும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

பெயருக்கேற்றவாறு சற்று வளர்ச்சிக் குறைவானதாகத் தான் இந்த ஊர் விளங்குகின்றது.

No comments: