Tuesday, February 1, 2011


வடுக பைரவர்: பிரான்மலை

வடுகன் என்ற பிரம்மச்சாரி என்ற பொருள் உண்டு. வீரன் என்ற பொருளும் கூறப்படுகின்றது.

ஆகாயம், பூமி, பாதளம் என மூன்று நிலைகளில் காணப்படும் ஒரே ஆலயம் பிரான்மலை கொடுங்குன்ற நாதர் ஆலயம் தான்.

இங்கு மங்கைபாகர் சன்னதி ஆகாய நிலையில் விளங்குகின்றது. இது மேல் பகுதியில் விளங்குகின்றது.

வடுகபைரவர், விநாயகர் மற்றும் தஷிணாமூர்த்தி சன்னதி பூமி என்ற நிலையில் காணப்படுகின்றது. அதாவது ஆகாயநிலைக்குக் கீழே, பாதாள நிலைக்கு மேலே நடுத்தரமாகக் காணப்படுகின்றது.

அதன் கீழே கொடுங்குன்ற நாதர் சன்னதி காணப்படுகின்றது. இது பாதாள நிலை எனக் கூறலாம்.

இந்த நடுத்தரமான பூமி நிலையில், சூலம், உடுக்கை, கபாலம், நாகபாசம் போன்றவற்றைக் கொண்டவராக விளங்குகின்றார் இந்த வடுக பைரவர். சற்று உக்ரமான தோற்றத்துடன் காணப்படும் இவருக்கு, வீரத்தின் அடையாளமான வாள் சார்த்தி வைக்கப்படுள்ளதே சான்றாகும். நின்ற திருக்கோலம். பண்டை அரசர்களால் வழிபாடு செய்யப்பட்டதால் வீரத்தின் அடையாளமான வாள் சார்த்தி வைக்கப்படுள்ளதாகக் கூறுகின்றனர்.

மற்றொரு கதையும் உண்டு. முண்டாசுரன் என்னும் அரக்கன், சிவனைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவில்லை என்ற வரம் பெற்றதால், ஆணவத்துடன் அனைவரையும் கொடுமைப் படுத்தினானாம். பிரம்மனையே அவன் போருக்கு அழைக்க, அவன் செருக்கை அழித்து அவனை அழிக்க, சிவன் ஏற்ற திருக்கோலமே ஸ்ரீ வடுகபைரவராம்.

ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றையும், காரியத்தடைகளையும் உடனடியாகக் களைபவர் இந்த வடுக பைரவர். இவருக்குக் கருப்புத் வஸ்திரம் சார்த்தி, எலுமிச்சை மாலை அணிவித்து வேண்டிக் கொண்டால் உடனடியாகப் பலன் கிடைக்கும் என ஆலய அர்ச்சகர் திரு பைரவப் பட்டர் தெரிவிக்கின்றார். (இவர் ஒரு பைரவ உபாசகர்). வாய்ப்புக் கிடைப்பவர்கள் இங்கு செல்லலாம்.

மேலைச்சிவபுரி அருகில் இத்தலம் உள்ளது. சிங்கம்புணரி (??) என்ற ஊரிலிருந்தும், பொன்னமராவதியிலிருந்தும் பேருந்துகள் உள்ளன.

மலைக்கு மேலே, சிறு ஆலயமும், ஆண்டவரின் தர்காவும் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்றாகும்.


No comments: