Tuesday, February 1, 2011


கோட்டை பைரவர்: திருமயம்

'திருமயம்' தீரர் சத்திய மூர்த்தி பிறந்து வாழ்ந்த ஊர். இங்குள்ள சத்தியகிரீசுவர் ஆலயமும், சத்திய மூர்த்திப் பெருமாள் ஆலயமும் மிகவும் புகழ் பெற்றவை. இரண்டுமே மலையைக் குடைந்து பாறைகளைச் செதுக்கிப் பல்லவர் காலத்தில், குடைவரையாய் உருவாக்கப்பட்டவை. பல்வேறு அற்புதங்களையும், சுரங்கப் பாதைகளையும் உடைய ஆலயம் இது. உலகத்திலேயே இரண்டாவது பெரிய பள்ளி கொண்ட பெருமாள் இங்கு தான் வீற்றிருக்கிறார். திருமுகத்தை ஒரு சாளரம் வழியாகவும், திருப்பாதத்தை மற்றொரு சாளரம் வழியாகவும் காணும் அளவிற்கு நீளமான, ஒரே கல்லால், பாறையைக் குடைந்து உருவாக்கிய சிற்பம். திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஸ்ரீரங்கத்திற்கு முன்பாகவே இந்த திருத்தலம் தோன்றியதாகஐதீகம். பல்வேறு சிறப்புகளை உடைய இந்த ஆலயங்கள் பற்றியும், மலைக்கோட்டை பற்றியும் மற்றுமொரு சமயத்தில் விரித்து எழுதுகின்றேன்.

இந்தக் கோட்டையைக் காவல் காக்கும் பைரவர் தான் கோட்டை பைரவர் என அழைக்கப்படுகின்றார். கோட்டை முனீசுவரர் என்றும் சிலர் கூறுகின்றனர். ஆயினும் நின்ற திருக்கோலம், நாக சூல பாசங்களை ஏந்தியுள்ளது போன்றவற்றைப் பார்க்கும் பொழுது பைரவர் என்பதே சரியானதாக இருக்கும் என்று தோன்றுகின்றது.
மிகவும் சக்தி வாய்ந்தவராகக் கருதப்படும் இவர், இந்த மலையையும், ஆலயத்தையும், இந்த ஊரையும் காப்பதாக ஐதீகம். கோட்டையின் வடக்கு வாசலில், வட புறத்தைப் பார்த்தவாறு காட்சி அளிக்கின்றார். அவர் தம் கண்ணுக்கு முன்னால் பரந்து விரிந்து காணப்படுகின்து பாம்பாறு. பாம்பு போல வளைந்து, நெளிந்து காணப்படுவதால் இப்பெயர்.
(ஆனால் தண்ணீர் தான் பெரும்பாலும் இருப்பதில்லை).

வாகனங்களில் அந்த வழியாகச் செல்வோர், பெரும்பாலும் இறங்கி, நின்று, தரிசித்த பின்னரே பயணத்தை மேற் கொள்கின்றனர். (வழித்துணையாக இவர் உடன் வந்து காப்பதாக ஐதீகம்). புதுக்கோட்டை டூ மதுரை, காரைக்குடி மார்க்கத்தில், பேருந்துகள் செல்லும் சாலையின் வழியில் தான் இந்த ஆலயம் உள்ளது. 24 மணி நேரமும்தரிசிக்கலாம்.


No comments: