Friday, January 20, 2012

பைரவமூர்த்தி திருவுருவ நெறி

பைரவமூர்த்தி திருவுருவ நெறி - ஒன்று : -

பெரும் பயங்கரமான தோற்றம் வாய்ந்த உருவம் இது என்பதைப் பெயரே குறிப்பிடுகின்றது. கருணை வடிவான இறைவன் பயங்கரமான தோற்றம் கொண்ட சமயங்களும் இருக்கின்றன. வலிமை மிக்க ஞானமூர்த்தியாக பைரவரை சிருஷ்டித்து உலகைக்காக்கும் பொறுப்பை அளித்தார் ர் சிவனார். எதிரிகளுக்குப் பயத்தையும், தன்னை வேண்டியவர்க்கு அருளையும் தரும் சிவமூர்த்தி இவர்.

பிரமனை ஒறுக்கும் வேளை தோன்றிய உருவமே இது. பிரமன் ஐந்து முகங்களுடன் விளங்கிய காலத்தே பரமன் போன்று தானும் ஒரே தோற்றத்தினன் என்று தன்னை அவருடன் சம நிலையில் வைத்து இறுமாந்தான். பிரமனது அகங்காரத்தை அடக்க பரமன் உக்கிரத் தோற்றங்கொண்டு தன் நகத்தினால் பிரமனின் உச்சியில் உள்ள சிரம் கொய்த பொழுது பிரமன் நான்முகனாயினன். பிரமனின் மண்டையோட்டை ஏந்தி நிற்கும் இவருக்கு " கபாலி " எனும் சிறப்புப் பெயரும் உண்டு.

பைரவமூர்த்தி திருவுருவ நெறி - இரண்டு : -

இறைவன்,பிரமனிடம் கோபம் கொண்ட பொழுது அவன் தலையினைக் கொய்யும் வண்ணம் பைரவரைப் பணித்ததான வரலாறும் உண்டு. சிவனின் ஆதி அந்தம் காண முடியாத பிரம்மா, தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி திருமுடியைக் கண்டதாகப் பொய்யுரைத்து திருமுடியில் இருந்து வீழ்ந்ததாகத் தாழம்பூவையும் பொய்யுரைக்க வைத்தார். குறிப்பாக பிரமனின் ஐந்தாம் தலை இப்பொய்யை திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருக்க சினம் கொண்ட சிவனார், தனது புருவ மத்தியில் இருந்து பைரவ மூர்த்தத்தை உண்டு செய்தார். " பைரவனே ! பொய்யுரைத்த பிரமனின் தலைகளை அறுத்தெறி " என உத்தரவிட, உச்சந்தலையை அறுதெறிந்த பைரவர் பின் மற்ற தலைகளையும் அறுக்க முற்பட அங்கு தோன்றிய திருமால், " முன்னர் பிரமன் செய்த தவத்தில் மகிழ்ந்து அவனுக்கு ஐந்து முகங்கள் அருளினீர், இப்போது அவனை நீரே நான்முகனாக்கிவிடீர், அனவே அவனை மன்னியுங்கள் ! " என்றார். இதையடுத்து பிரம்மாவும் மன்னிப்புக் கேட்டார்.

வேதம் ஓதுபவருக்கு இனி நீரே அரசன், அனைத்து வேள்விகளுக்கும் நீயே குரு, யாக யக்ஞங்களின் பலனை அனைவருக்கும் நீ வழங்கு " என அருளினார் ஈசன். பைரவரையும், வீரபத்திரரையும் சிவனின் மூர்த்தி பேதங்களாக நூல்கள் கூறுகின்றன.

அடிப்படைத் தோற்றங்கள் :-

பெருந்தொந்தி, உருண்ட கண்கள், இரு கடைவாய்களிலும் கோரப் பற்கள், அகன்ற மூக்குத் துவாரங்கள், கபால மாலை, பாம்பினாலான அணிகலன்கள், யானைத்தோலாடை ஆகியன பைரவமூர்த்தியில் நாம் காணும் சிறந்த அம்சங்கள். ஆடையெதுவுமற்ற நிலையிலேயே இவர் பெரும்பாலும் வடிக்கப்படுவர்.
அறுபத்து நான்கு வேறுபட்ட நிலைகளில் பைரவரை உருவாக்குவார்கள். இவாறு நான்கு வேறுபாடுகளும் பைரவரின் எட்டு அடிப்படைத் தோற்றங்களின் விரிவு. இவ்வெட்டுவகை மூல பைரவர்கள்,

1.அசிதாங்க பைரவர்
2.ருரு பைரவர்
3. சண்ட பைரவர்
4. குரோத பைரவர்
5. உன்மத்த பைரவர்
6. கபால பைரவர்
7. பீஷண பைரவர்
8. சம்ஹார பைரவர்

என்பனவர்களாம்.


நன்றி! சிறகடிக்கும் மனசு !!!


No comments: