Friday, January 27, 2012

கலியுக காவல் தெய்வம் ஸ்ரீ காலபைரவர்


ஸ்ரீ பைரவர் சிவனது  அம்சமாகும். சிவபெருமானின் 64 மூர்த்தங்களில் பைரவ அம்சம் அதி முக்கியமானது. பைரவர் என்னும் சொல் பயத்தை நீக்குபவர். அடியார்களின் பாபத்தை உண்டு நீக்குபவர். படைத்தல் காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து  இறையருள் தொழில்களை தமது சிவாய நம என்ற  பஞ்சாட்சர தாரக மந்திரத்தின் மூலம் 84 லட்சம் உயிரினங்களையும் காத்து ஆன்மாக்களை நொடிப் பொழுதில் தனது சூல நுனியினால் தொட்டு உடன் நீக்கி காலம் கருதாது காப்பதால் கால பைரவராகின்றார்.
 
படைத்தலை உடுக்கையும், காத்தலை கையில் உள்ள கபாலமும், ஒடுக்குதலை உடலில் பூசிய விபூதி பஸ்பமும், திரிசூலம் அதிகார ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. இவரே ஆனந்த பைரவராக உலகை படைக்கின்றார். பின்பு காலபைரவராக உலகை காக்கின்றார். அடுத்து காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார்.
 
எவ்வித ஆச்சாரமும், அனுஷ்டானமும் இல்லாமல் இக்கட்டான காலத்தில் அவரை ஒரு  முகமாக மனதில் எண்ணினாலே போதும் மனதுடன் தொடர்புடைய ஆகாச பைரவர், உடனே செயல்பட்டு  ஆபத்து  காலத்தில் நம்மை காப்பாற்றுவார். ஸ்ரீ பைரவரைப் பற்றி ருக்வேதத்திலும், அதர்வண வேதத்திலும், விளக்கமாக கூறப்பட்டுள்ளது. ஸ்ரீகாசி காண்டத்தில் ஸ்ரீ பைரவர் சரித்திரம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
 
திருக்கோவில் நடை திறப்பதற்கு முன் கால பைரவருக்கு அதிகாலை பூஜை  வழிபாடு செய்து  சாவியை அவரிடமிருந்துதான் பெற்று நடை திறக்கப்படும். இரவு நடை சாத்திய பிறகு பைரவர் பூஜை செய்து  பைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு பைரவர் காலில் திருக்கோவில் ஒப்படைத்து விட்டுதான் செல்வார்கள்.
 
பைரவ வழிபாடு ஆலய சொத்துக்களை பாதுகாப்பதுடன், ஆலயத்திற்கு வருகை தந்து தெய்வ அருளுக்கு பாத்திரமாகும் மக்களையும் பாதுகாக்கின்றார். பைரவர் பார்ப்பதற்கு உக்கிரமாக காணப்பட்டாலும் அடியார்களின் பாவத்தை போக்கி பயத்தை உண்டு பண்ணுபவராகவும் காட்சியளிக்கின்றார்.

நன்றி ! மாலை மலர் !!

No comments: