Sunday, January 22, 2012

பாவம் போக்கும் பைரவர்


ஸ்ரீ பைரவர் சிவனது  அம்சமாகும். சிவபெருமானின் 64 மூர்த்தங்களில் பைரவ அம்சம் அதிமுக்கியமானது. பைரவர் என்னும் சொல் பயத்தை நீக்குபவர். அடியார்களின் பாபத்தை நீக்குபவர். படைத்தல் காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து  இறையருள் தொழில்களை தமது சிவாய நம என்ற  பஞ்சாட்சர தாரக மந்திரத்தின் மூலம் 84 லட்சம் உயிரினங்களையும் காத்து ஆன்மாக்களை நொடிப் பொழுதில் தனது சூல நுனியினால் தொட்டு உடன் நீக்கி காலம் கருதாது காப்பதால் கால பைரவராகின்றார்.

படைத்தலை உடுக்கையும், காத்தலை கையில் உள்ள கபாலமும், ஒடுக்குதலை உடலில் பூசிய விபூதி பஸ்பமும், திரிசூலம் அதிகார ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. இவரே ஆனந்த பைரவராக உலகை படைக்கின்றார். பின்பு காலபைரவராக உலகை காக்கின்றார். அடுத்து காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார்.

எவ்வித ஆச்சாரமும், அனுஷ்டானமும் இல்லாமல் இக்கட்டான காலத்தில் அவரை ஒரு  முகமாக மனதில் எண்ணினாலே போதும் மனதுடன் தொடர்புடைய ஆகாச பைரவர், உடனே செயல்பட்டு  ஆபத்து  காலத்தில் நம்மை காப்பாற்றுவார். ஸ்ரீ பைரவரைப் பற்றி ருக்வேதத்திலும், அதர்வண வேதத்திலும், விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீகாசி காண்டத்தில் ஸ்ரீ பைரவர் சரித்திரம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. திருக்கோவில் நடை திறப்பதற்கு முன் கால பைரவருக்கு அதிகாலை பூஜை  வழிபாடு செய்து  சாவியை அவரிடமிருந்துதான் பெற்று நடை திறக்கப்படும். இரவு நடை சாத்திய பிறகு பைரவர் பூஜை செய்து  பைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு பைரவர் காலில் திருக்கோவில் ஒப்படைத்து விட்டுதான் செல்வார்கள்.

பைரவ வழிபாடு ஆலய சொத்துக்களை பாதுகாப்பதுடன், ஆலயத்திற்கு வருகை தந்து தெய்வ அருளுக்கு பாத்திரமாகும் மக்களையும் பாதுகாக்கின்றார். பைரவர் பார்ப்பதற்கு உக்கிரமாக காணப்பட்டாலும் அடியார்களின் பாவத்தை போக்குபவராகவும் காட்சியளிக்கின்றார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை சேர்ந்த விஜய் சுவாமிஜி.

பைரவர் ஆட்சி செய்யும் காசி நகரம்......

காசியில் உள்ள கால பைரவர் சன்னதி பிரசித்தி பெற்றது. காசிக்குத் சென்றவர்கள் இரவு கால பைரவ பூஜை பார்க்காமல் திரும்புவதில்லை. கால பைரவர் காசி நகரத்தின் சேனாதிபதி. காசியில் இறந்தவர்களுக்கு யமபயம் கிடையாது. தண்டனை கொடுக்க யமனுக்கு அதிகாரமும் கிடையாது.

காலனின் அதிகாரம் பைரவர்களுக்குக் கிடைத்தால் கால பைரவர் என்று அழைக்கப்படுகிறார். சீர்காழியில் பைரவருக்கு வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் அபிஷேகம், கூரையிலுள்ள பைரவரின் நேர்ப்பார்வையில் கீழே உள்ள பலிபீடத்திற்கு அபிஷேகம்,பால், பஞ்சாமிர்தம், தயிர் எல்லா வாசனை திரவியங்களுடன் அபிஷேகம், பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்.

உத்ஸவருக்கு முத்துச்சட்டை நாதர் என்று பெயர். பலிபீடத்திற்கு அபிஷேக ஆராதனை முடிந்து பிறகு படியேறி மேலே சட்டை நாதருக்குப் புனுகுச் சட்டம் சாற்றி வடை மாலை சாற்றுவார்கள். இந்த ஆலயத்தில் நவக்கிரஹ தேவதைகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நிற்பது அதிசயமாகும். ஈஸ்வரனும், ஈஸ்வரியும், பெரிய திருமேனியுடன் புன்னகை பூத்த திருமுகத்துடன் வீற்றியிருப்பதும், இந்த ஆலயத்தில் காணலாம்.

மற்றும் அஷ்ட பைரவர்களும்,ப்ரதிஷ்டை செய்து ஒரே சமயத்தில் பார்க்ககிடைப்பதும் தோணியப்பர் ஆலயத்தின், பெருமைக்கு ஒரு சான்று. காலத்திற்கு அதிபதியான கால பைரவரை நல்ல நியமத்துடன் வழிபட்டால், மனோ தைரியமும், சாந்தியும் கிட்டும் என்பதில் ஐயமில்லை.

பிரம்மாவுக்கும், சிவபெருமானுக்கும் ஐந்து தலைகள் இருப்பதால் இருவரும் ஓருவராக எண்ணி, சிவபெருமானைவிட தானே உயர்ந்தவர் என்ற  செருக்குடன் பிரம்மா செயல்பட்டு வந்த போது, தேவர்கள், ரிஷிகளும் படைப்பு தொழிலை தொழிலாக செய்து  வரும் பிரம்மாவின் செய்கையால் பயந்து ஒடுங்கி சிவனிடம் முறையிடவே சிவபெருமானின் உடல் சக்தி பைரவர் சக்தியாக வெளியாகி பிரம்மாவின் ஐந்து சிரசில் நடுச்சிரசை  கிள்ளி எறிந்த தேவர்கள் ரிஷிகளின் பயத்தை போக்கும் பிரம்ம கண்டீஸ்வரராக (திருக்கண்டியூர்) எழுந்தருள்கின்றார்

பிரம்மாவின் சிரசு கபாலமாக மாறி பிரமஹத்தி தோஷத்திற்கு பைரவர் சக்தி ஆளாகி முடிவில் காசி மாநகர எல்லையில் கால் வைத்த போது சிவபெருமான் காட்சி தந்து பிரமஹத்தி தோஷத்தை நீக்கி காசிமாநகர காவல் தெய்வமாக எழுந்தருள அருள்புரிந்தார். இன்றும் காசி மாநகரம் பைரவர் ஆட்சி செய்யும் இடமாக உள்ளது.

காசிமாநகர எல்லையில் எட்டு திக்கிலும் அஷ்ட பைரவர்கள் எழுந்தருளி எல்லையை பாதுகாக்கின்றனர். காசி அனுமன் காட்டில் உருபைரவர் ரிஷப வாகனத்தில் தென்கிழக்கு மூலையிலும், ஸ்ரீதுர்க்கை கோவிலில் சண்ட பைரவர் மயில் வாகனத்தில் தெற்கு மூலையிலும், விருதகாலர் கோவிலில் அன்ன வாகனத்தில் கிழக்கு மூலையில் அசி தாங்க பைரவரும், லாட்பஜாரில் கபால பைரவர் யானை வாகனத்தில் வடமேற்கு திசையிலும், ஸ்ரீகாமாட்சி ஆலயத்தில் கருட வாகனத்தில் குரோதன பைரவர் தென்மேற்கு திசையிலும், பீமசண்டியில் குதிரை வாகனத்தில் உன்மத்த பைரவர் மேற்கு திசையிலும், திரிலோசன சங்கமத்தில் வடகிழக்கு திசையில் சம்ஹார பைரவர் நாய் வாகனத்திலும், பூத பைரவரத்தில் சிங்க வாகனத்தில் வடக்கு திசையில் பீஷண பைரவர் ஆகிய அஷ்டபைரவரும் அஷ்டதிக்கிலும் எழுந்தருளி ஆட்சி செய்கின்றார்கள்.

அதனால்தான் காசி மாநகர எல்லையை விட்டு வெளியேறுகின்ற ஒவ்வொரு பொருளும் காசி கால பைரவர் முன் அனுமதி பெற்றே வெளிவர வேண்டும். அதேசமயம் காசியில் யாராவது இறந்தால் யமவர்த்தனை கிடையாது. பைரவ வாதணை நிச்சயம் உண்டு. காசி மாநகர எல்லையை தொடும்போது எமனும் திரும்பிபோவார் என்பது ஐதீகம். அதனால்தான் என்னவோ காசி பைரவர் மஹா பைரவர் சன்னதிக்கு தனி சக்தி உள்ளது. காசி கறுப்பு கயிறு எமபயம் நீங்கி வாழ வைக்கின்றது.

ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிய "காசி கால பைர வாஷ்டகம்'' துதி பாடி வழிபடும்போது எமபயம் நீங்குகிறது. காசி கறுப்பு கயிறு அணியும்போது ஆயுள் விருத்தியாகிறது. எமபயம் நீங்க, எமவாதனை நீங்க காசி கால பைரவாஷ்டகத்துடன் காசி கறுப்பு கயிறு அணிந்து வளம்பெறுவோம்.

சனிபகவானுக்கு கிரக பதவி.....

சூரியன் மகனான சனீசுவரன் தன்னுடைய அண்ணன் யமதர்மனால் அலட்சியப்படுத்தப்பட்டு, கவுரவக்குறைவை அடைந்தார். அவருடைய தாய் சாயாதேவியின் அறிவுரையின் படி பைரவரை வழிபட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப்பதவி கிடைக்கப் பெற்றார். பைரவர் சனீசுவர பகவானுக்கு குருவாக விளங்கி அருள் பாலிக்கின்றார்.  

சிதம்பர ஸ்ரீ சொர்ணகால பைரவர்....

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் சன்னதியில் சிற்சபையில் சிதம்பர ரகசியத்தில் கீழே ஒரு அடி உயரத்தில் தங்கத்திலான லிங்கம் ஒன்றுள்ளது. இந்த ஏகமுகலிங்கத்திற்கு உச்சிவேளையில் ஒரு கால பூஜை மட்டும் செய்யப்படும். மற்றபடி ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள், ஸ்ரீகைலாயத்திலிருந்து கொண்டுவந்த 5 லிங்கங்களில் ஒன்றான மோட்ச லிங்கத்திற்கே ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

இந்த லிங்கத்திற்கு  அருகில் காவலுக்கு ஸ்வர்ண பைரவ சிலை உள்ளது. இவருக்கு அதிகாலை அர்த்தசாம பூஜையின் முடிவில் வில்வம் சொர்ணமாக மாறியதாகவும், இதனால் இவருக்கு சொர்ண கால பைரவராக திகழ்கின்றார். சிதம்பரம் தீட்சிதர்கள் கூறும் சொர்ணகால பைரவ மந்திரத்தை நாளும் கூறி வழிபடுவோம்.

சிதம்பரம் ஸ்ரீ சொர்ண கால பைரவர் மந்த்ரம்,

"ஸ்வர்ண கால பைரவர் த்ரிசூல யுக்த பாணிநம்
வேதரூப ஸ்Öரமேல ஸம்யுதம் மஷேச்வரம்
ஸ்மாச்ரி தேஷுஸர்வ தாஸ மஸ்வஸ்து தாயினம்
மகீந்த்ரி வம்ச பூர்வ புண்ய ரூபினம் ஸமாச்ரயே''.

நன்றி ! மாலை மலர் 

No comments: