Thursday, January 26, 2012

அஷ்டபைரவர் வழிபாடு


பைரவர் என்ற சொல்லுக்கு பயத்தை போக்குபவர் என்று பொருள். சிவாலயங்களில் காலையில் வழிபாடு துவங்கும் முன்னரும், இரவில் அர்த்தஜாம வழிபாடு நிறைவு பெற்ற பின்னரும் திருக்கோயிலின் அனைத்து சன்னதிகளையும் பூட்டி அந்த சாவியினை பைரவரின் திருவடியில் சமர்ப்பித்து கோவிலை பூட்டுவது மரபு.

இவர் ஆலயத்தின் காவலராக இருப்பதால் சேத்திர பாலகர் என்று கூறுவர். சனீஸ்வரருக்கு குருவாகவும், அதிதெய்வமாகவும் விளங்குபவர் பைரவர். பைரவர் உருவங்கள் பல உண்டு. அவற்றில் முக்கியமானது கால பைரவர் திருவுருவம் ஆகும். பைரவரில் 64 அம்சங்கள் உடைய திருவுருவங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல் பூந்துறையை சேர்ந்த விஜய்சுவாமிஜி.

அவர் மேலும் கூறியதாவது:-

எல்லா சிவன் கோவில்களிலும் விநாயகர், முருகன் சன்னதி, அம்பாள் சன்னதி இருக்கும். அதேபோன்று நவக்கிரஹ சன்னதியும் காணப்படும். இன்னொரு முக்கியமான சன்னதியாக விளங்குவது பைரவர் சன்னதியாகும். அதுவும் சற்று ஒதுக்குப்புறமாக, தனியாக உள்ளடங்கியே பெரும்பாலான கோயில்களில் காணப்படும்.

மேலும் அந்த கோயில்களின் காவல் தெய்வமாக விளங்குவதே ஸ்ரீபைரவர்தான். சிவபெருமான் அஷ்டமூர்த்தங்களாகிய பஞ்சபூதங்கள், சூரியன், சந்திரன், ஆன்மா என்ற எட்டிலும் நீங்காது நின்று அன்பர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இவர்களுக்கு தேவியராகத் திகழ்பவர்கள் அஷ்டமாதர்கள் ஆவர்.

இவர்களின் பெயர் முறையே பிரம்மஹி, மகேஸ்வரி, கொளமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி, சண்டிகை என்பதாகும். இவர்கள் அந்தாசூர வதத்தின் பொருட்டுச் சிவபெருமானால் தேவர்களின் சக்தியிலிருந்து தோற்றுவிக்கப்பட்டவர்கள்.

பின்னர் அஷ்ட பைரவர்களுக்குத் தேவியராக அளிக்கப்பட்டவர்கள். சீர்காழி, பிரம்மபுரீசுவரர் ஆலயத்தின் (தெற்கு) வெளிப்பிரகாரத்தில் வலம்புரி மண்டபம் என்ற சந்நிதியுள்ளது. இங்கு எட்டு பைரவர்களுக்கும் திருவுருவங்கள் அமைத்து வழிபடப்படுகின்றது.

இந்த நிலையைப் பிற தலங்களில் காண முடியவில்லை. அஷ்ட பைரவர்களின் திருவுருவ வர்ணனைகளை சாரஸ்வதீயம், ரூப மண்டனம், ஸ்ரீதத்துவ நிதி முதலிய நூல்கள் விளக்கமாகக் கூறுகின்றன.

நன்றி !  மாலைமலர் !!

No comments: